யு-டர்ன் – விமர்சனம்

யு-டர்ன் – விமர்சனம்

விமர்சனம் 14-Sep-2018 2:57 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Pawan Kumar
Production: BR8 Creations, V. Y. Combines and Srinivasa Silver Screen
Cast: Samantha Akkineni , Aadhi Pinisetty, Rahul Ravindran and Bhumika Chawla
Music: Poorna Chandra Tejaswi
Cinematography: Poorna Chandra Tejaswi
Editor: Suresh Arumugam

கன்னடத்தில் வெளியாகி கவனம் பெற்று வசூலும் அள்ளிய படம் ‘யு-டர்ன்’. அந்த படம் இப்போது அதே இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ரீ-மேக்காகி வெளியாகியுள்ளது. சமந்தா முக்கிய கேரக்டரில் நடித்து வெளியாகியுள்ள ‘யு-டர்ன்’ தமிழ் ரசிகர்களை மகிழ்விக்குமா?

கதைக்களம்

சென்னை வேளச்சேரியிலுள்ள மேம்பாலத்தில் இருக்கும் டிவைடர் கற்களை நீக்கி விட்டு சிலர் விதிமீறி யு-டர்ன் எடுக்கிறார்கள். இப்படி யு-டர்ன் எடுப்பவர்கள் குறித்த ஒரு கட்டுரையை எழுத முற்படுகிறார் ஜெர்னலிஸ்டான சமந்தா! இந்நிலையில் அவ்வாறு விதிமீறி யு-டர்ன் எடுக்கும் ஒருவரை பேட்டி காண சமந்தா செல்கையில், அவர் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொள்கிறார். இவரது மரணத்திற்கு சமந்தா காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சமந்தா போலீஸ் விசாரனை வளையத்துக்குள் சிக்கி கொள்கிறார். அப்போது சமந்தா இதுபோன்று பேட்டி எடுக்க யு-டர்ன் எடுத்த 10 பேரின் தகவல்களை திரட்டி வைத்திருக்கிற விஷயம் போலீஸுக்கு தெரிய வருகிறது! போலீஸ் அந்த 10 பேர் குறித்து விசாரிக்கையில் அவர்கள் அனைவரும் அந்த இடத்தில் யு-டர்ன் எடுத்த அதே நாளில் இறந்துபோன அதிரிச்சியான விஷயம் தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து ஒரு பக்கம் போலீஸும், இன்னொரு பக்கம் சமந்தாவும் புலனாய்வில் இறங்க, திடுக்கிடும் பல சம்பவங்கள் நடந்தேறுகின்றன! அந்த சம்பவங்கள் என்ன? அந்த மேம்பாலத்தில் யு-டர்ன் எடுத்தவர்கள் மரணமடைய காரணம் என்ன? என்பதற்கான அதிர்ச்சி தரும் விடைகளே ‘யு-டர்ன்’.

படம் பற்றிய அலசல்

சாலை விதிகளை மீறும் யாரோ ஒருவரால் அவர் மட்டுமல்ல, மற்ற சிலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்ற மெசேஜை சொல்ல வரும் இந்த படம் நடந்த சில உண்மை சம்பவங்க்ளை வைத்து எடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் முதல் அரைமணிநேரம் கதை கொஞ்சம் ஸ்லோவாக பயணித்தாலும், அதன் பிறகு சூடு பிடித்து கிளைமேக்ஸ் வரை நம்மை திரைக்கதையுடன் கட்டிபோடும் விதமாக அமைந்துள்ளது பவன் குமாரின் காட்சி அமைப்புகளும், இயக்கமும்! ஒரே மாதிரியான மரணங்களுக்கான காரணங்களை கண்டு பிடிக்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள், அந்த மரணங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது தெரிய வரும்போது ஏற்படும் ஷாக், கிளைமேக்ஸில் கொஞ்சம் குழப்பத்துடன் நிகழும் ட்விஸ்ட்கள் என ‘யு-டர்ன்’ நமக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தருகிறது! கன்னட கதையில் தமிழுக்கு ஏற்ற வகையில் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்தும், கிளைமேக்ஸை மேலும் விறுவிறுப்பாக்கியும் கவனம் பெற வைத்துள்ளார் இயக்குனர் பவன் குமார். இவரது முயற்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் பக்கபலமாக ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டியும், இசை அமைப்பாளர் பூர்ண சந்திர தேஜஸ்வியும், படத்தொகுப்பாளர் சுரேஷ் ஆறுமுகமும் செயல்பட்டுள்ளனர்.

நடிகர்களின் பங்களிப்பு

படத்தின் முக்கால் வாசி கதையையும் சுமந்திருப்பவர் ஜெர்னலிஸ்டாக நடித்திருக்கும் சமந்தாதான்! தான் மேற்கொண்ட முயற்சியில் இவ்வளவு பெரிய ஆபத்தும், ரகசியங்களும் அடங்கி கிடக்கிறது என்று தெரியாமல் போலீஸில் மாட்டி கொண்டும், மர்மமான மரணங்கள், அதன் பின்னணி என்ன என்பதை கண்டு பிடிக்க முற்படுகையில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் என்று பயணிக்கும் தனது கேரக்டரை சமந்தா சிறப்பாக செய்துள்ளார். போலீஸ் வளையத்துக்குள் மாட்டிக்கொண்ட சமந்தாவுக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரியாக வரும் ஆதி, இவரது உயர் போலீஸ் அதிகாரியாக வரும் ‘ஆடுகளம்’ நரேன், சமந்தாவின் காதலராக வரும் ராகுல் ரவீந்திரன், கணவன், மனைவியாக வந்து கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் நரேன், பூமிகா என அனைவரது கதாபாத்திரங்களையும் சிறப்பாக வடிவமைத்த இயக்குனர் அனைவரையும் நன்றாக நடிக்க வைக்கவும் செய்துள்ளார்.

பலம்

1.விறுவிறுப்பாக பயணிக்கும் திரைக்கதை

2.கதாபாத்திர உருவாக்கம்

3.ஒளிப்பதிவு, இசை

பலவீனம்

1 கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் முதல் அரைமணிநேர காட்சிகள்

2. சிறு குழப்பங்களை தரும் கிளைமேக்ஸ்

மொத்தில்…

அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு மெசேஜை வைத்து திகில், த்ரில், சஸ்பென்ஸ் என்று ரசிக்க வைக்கும் இந்த ‘யு-டர்ன்’ ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு பயண அனுபவத்தை தரும் என்பது நிச்சயம்!

ஒருவரி பஞ்ச் : தியேட்டருக்கு தாராளமாக ‘யு-டர்ன்’ அடிக்கலாம்!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வரும் ஆனா வராது வீடியோ பாடல் - சீமராஜா


;