ராட்சசன் - விமர்சனம்

ராட்சசன் - விமர்சனம்

விமர்சனம் 4-Oct-2018 5:26 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Ramkumar
Production: Axess Film Factory
Cast: Vishnu, Amala Paul, Suzane George, Sanjay, Kaali Venkat and Ramdoss
Music: Ghibran
Cinematography: P. V. Sankar
Editor: San Lokesh

‘முண்டாசுப்பட்டி’ படத்தை தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வெளியாகியுள்ள படம் ‘ராட்சசன்’. படத்தில் ‘ராட்சசனி’ன் ஆட்டம் எப்படி?

கதைக்களம்

சினிமா இயக்குனராக வேண்டும் என்பது விஷ்ணு விஷாலின் லட்சியம்! இதற்காக நிறைய கதைகளையும், தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கும் விஷ்ணு விஷாலால் இயக்குனாக முடியாத சூழ்நிலையில் போலீஸ் வேலையில் சேருகிறார். போலீஸ் வேலையில் சேர்ந்த நேரத்தில் நடக்கும் ஒரு பள்ளி மாணவியின் கொடூர கொலை, தான் சேகரித்து வைத்திருக்கும் சில தகவல்களூடன் ஒத்துப்போவது மாதிரி இருப்பதை அறிந்து அதை தனது உயர் போலீஸ் அதிகாரியிடம் தெரியப்படுத்துகிறார் விஷ்ணு விஷால்! ஆனால் விஷ்ணுவிஷால் முன் வைக்கும் தகவல்களை அவரது உயர் போலீஸ் அதிகாரி அலட்சியப்படுத்திவிட்டு, கொலைகாரனை கண்டு பிடிக்க முயற்சிக்கும் நிலையில் அதே மாதிரி அடுத்தடுத்து பல பள்ளி மாணவிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்! ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலின் மாமாவாகவும், போலீஸ் அதிகாரியாகவும் இருக்கும் ராமதாஸ் மகளும் கடத்தப்பட, அந்த கொலைகாரனை கண்டு பிடிக்க நேரடியாக களத்தில் இறங்கும் விஷ்ணு விஷாலுக்கு பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைக்கிறது! தொடர்ச்சியாக பள்ளி மாணவிகள் கொலை செய்யப்பட காரணமானவன் யார்? இப்படி ஒரே மாதிரியான கொலை சம்பவங்கள் நிகழ காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளே ‘ராட்சசன்’.

படம் பற்றிய அலசல்

‘முண்டாசுப்பட்டி’ படத்தில் காமெடியை கையிலெடுத்த இயக்குனர் ராம் குமார், ‘ராட்சசனி’ல் க்ரைம் த்ரில்லரை கையிலெடுத்துள்ளார். பொதுவாக இதுபோன்ற க்ரைம் த்ரில்லர் படங்களுக்கென்று ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த ராட்சசனும் அதே டெம்ப்ளேட்டில்தான் பயணிக்கிறது என்றாலும் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் வித்தியாசப்படுத்தி ரசிக்க வைக்கிறார் இயக்குனர் ராம் குமார். முதல் பாதி, இரண்டாம் பாதி என முழு படமும் விறுவிறுப்பாகவும் த்ரில்லாகவும் பயணிக்கிறது! தொடர்ந்து ஒரே மாதிரியான கொலைகளை செய்து வருபவன் ஒரு சைக்கோவாக தான் இருப்பான் என்பதை படம் பார்ப்பவர்களால் எளிதில் யூகிக்க முடியும் என்றாலும் அந்த கொலைக்காரன் யாராக இருப்பான் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை நகர்த்தி, கிளைமேக்சில் அந்த கொலைகாரன் இவர் தான் என்பதை தெரியப்படுத்தும் காட்சி படு த்ரில் ரகம்!

படத்தின் முக்கால் பகுதியும் கொலைக்காரனை கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறும் காட்சிகள் ஒரே மாதிரி இருப்பதால் கொஞ்சம் போரடிக்க வைக்கிறது! அதைப் போல விஷ்ணுவிஷால், அவரது உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சூசன் ஜார்ஜ் ஆகியோருக்கு இடையிலான புரொஃபஷனல் ஈகோ காட்சிகள், ஸ்கூல் டீச்சராக இருக்கும் அமலா பால், அவர் கூட இருக்கும் வாய் பேசமுடியாத குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகளும் திணிக்கப்பட்டது மாதிரியான ஃபீலிங்கையே தருகிறது என்பதையும் இங்கு வலியுறுத்தியாக வேண்டும். இதுபோன்ற சில குறைகளை களைந்து 2 மணி 32 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து காட்சிப்படுத்தியிருந்தால் ‘ராட்சசன்’ மேலும் விறுவிறுப்பான ஒரு படமாக அமைந்திருக்கும்! படத்தின் பரபரப்பான திரைக்கதைக்கும் படத்தின் விறுவிறுப்பான பயணத்திற்கும் ஜிப்ரானின் பின்னணி இசை ரொம்பவும் கை கொடுத்துள்ளது. அதைப் போல பி.வி.சங்கரின் ஒளிப்பதிவும் ராட்சசனுக்கு பலம் சேர்த்துள்ளது. படத்தின் அதிகபடியான் நீளத்தை குறைப்பதில் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

‘முண்டாசுப்பட்டி’ விஷ்ணு விஷால், ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால் இரு கேரக்டருகளுக்கும் இடையே நிறையவே வித்தியாசத்தை காட்டி நடித்துள்ளார் விஷ்ணு விஷால். இந்த காக்கி கேரக்டர் விஷ்ணு விஷாலுக்கு தனது கேரியரில் குறிப்பிடும் படியான ஒரு கேரக்டராக அமைந்துள்ளது. கதையில் அதிகம் முக்கியத்துவம் இல்லாத டீச்சர் கேரக்டர் அமலா பாலுக்கு என்றாலும் நேர்த்தியான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார் அமலா பால்! இதுவரை காமெடி கேரக்டர்களில் பார்த்து ரசித்த ராமதாஸ், காளி வெங்கட் ஆகியோரை இப்படத்தில் நாம் நேர்மையான, துடிப்பு மிக்க போலீஸ் அதிகாரிகளாக பார்த்து ரசிக்கிறோம்! கொலை செய்யப்படும் பள்ளி மாணவிகளை போஸ்ட் மார்ட்டம் செய்யும் டாக்டராக வரும் ‘நிழல்கள்’ ரவியும் சிறந்த நடிப்பை வழங்கியிருப்பதோடு, கடைசியில் அவரும் அந்த ‘சைக்கோ’ கொலைகாரனுக்கு இரையாவது துரதிர்ஷ்டம்! விஷ்ணுவிஷாலுக்கு குடைச்சல்கள் கொடுத்து அவரை நேர்மையாக செயல்பட விடாமல் தடுக்கும் உயர் போலீஸ் அதிகாரியாக வரும் சூசன் ஜார்ஜ், ஓயவு பெற்ற போலீஸ் அதிகாரியாக வரும் ராதாரவி, சைக்கோ கொலைகாரனாக நடித்தவர் மற்றும் கொலை செய்யப்படும் மாணவிகளாக நடித்திருப்பவர்கள் என எல்லோரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1. ஓரளவுக்கு விறுவிறுப்பாகவும், பரபரப்பாகாவும் பயணிக்கும் திரைக்கதை

2. பின்னணி இசை, ஒளிப்பதிவு

3. கிளைமேக்ஸ்

பலவீனம்

1. படத்தின் அதிகபடியான நீளம்

2, திணிக்கப்பட்டது மாதிரியான சில காட்சிகளும் கேரக்டர்களும்

மொத்தத்தில்…

சமீபகாலத்தில் வெளியாகிய க்ரைம் த்ரில்லர் படங்களிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாகியுள்ள இந்த ‘ராட்சசன்’ க்ரைம் த்ரில்லர் ரக படங்களை விரும்புவோருக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது! அதே நேரம் பலவீனமான குழந்தைகளும், பெண்களும் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது!

ஒருவரி பஞ்ச் : கொடூர பலம் படைத்தவன்!

ரேட்டிங் :5/10

#RatsasanReview #Ratsasan #VishnuVishal #AmalaPaul #Ramkumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆடை -டீஸர்


;