கூத்தன் – விமர்சனம்

கூத்தன் – விமர்சனம்

விமர்சனம் 11-Oct-2018 2:59 PM IST VRC கருத்துக்கள்

Direction:Venky Al
Production: Nilgris dream entertainment
Cast: Raj kumar,Srijitaa Ghosh,Junior Balaiya,Bhagyaraj, Manobala, Kira Narayanan,Nagendra Prasad,Renuka Urvashi
Music: Balaji
Cinematography: Dani Sanchez-Lopez
Editors : Robinson
அறிமுகம் ஏ.எல்.வெங்கி இயக்கத்தில், அறிமுகங்கள் ராஜ்குமார், ஸ்ரீஜிதா கோஷ், கிரா நாராயணன், சோனல் சிங் மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வெளியாகியுள்ள ‘கூத்தன்’ படத்தின் ஆட்டம் எப்படி?


கதைக்களம்

ஏராளமான சினிமா கலைஞர்கள் வசித்து வரும் ‘சினிமா நகரி’ல் தன் தாய் ஊர்வசியுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் ராஜ்குமார்! ’பேட்டரி பாய்ஸ்’ என்ற நடனக்குழுவில் நடன கலைஞராக இருக்கும் ராஜ்குமாருக்கு பரதநாட்டியம் சொல்லி கொடுக்கும் ஸ்ரீஜிதா கோஷ் மற்றும் நடன கலைஞரான அவரது தங்கை சோனல் சிங்குடன் நட்பு ஏற்படுகிறது! இந்நிலையில் ராஜ்குமார் வசித்து வரும் ‘சினிமா நகர்’ விற்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட, அந்த காலனியை மீட்க ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிற நிலையில் ராஜ்குமார், சிங்கப்பூரில் நடக்கும் நடன போட்டியில் பங்கேற்று பல கோடிகள் மதிப்பிலான முதல் பரிசை வெல்ல முயற்சி செய்கிறார். அதே நேரம், ஸ்ரீஜிதா கோஷ் மற்றும் அவரது தங்கை சோனல் சிங்குக்கு சொந்தமான வீடு, நடன கலைஞரும் ஸ்ரீஜிதா கோஷின் முன்னாள் கணவருமான நாகேந்திர பிரசாதால் கடனில் இருப்பதை அறியும் ராஜ்குமார், அவர்களுக்கும் உதவ முன் வந்து இருவரையும் நடனப் போட்டியில் பங்கேற்க செய்ய முற்படுகிறார்! இந்நிலையில் இவர்களுக்கு வில்லனாக வருகிறார் நாகேந்திர பிரசாத்! நாகேந்திர பிரசாதின் வில்லத்தனங்களை எதிர்கொண்டு நடனப்போட்டியில் ராஜ்குமார் மற்றும் அவரது குழுவினரால் முதல் பரிசை வெல்ல முடிந்ததா? இல்லையா? என்பதே ‘கூத்தனி’ன் கதை!

படம் பற்றிய அலசல்!

‘நடனப் போட்டி’ என்ற ஒரு கான்சப்ட்டை வைத்து காதல், நட்பு, குடும்ப சென்டிமெண்ட் போன்ற விஷயங்களை கலந்து ஜனரஞ்சகமான ஒரு படத்தை தர முயற்சித்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.வெங்கி! ஆனால் அதை நேர்த்தியாக திரைக்கதையாக்குவதிலும், ரசிக்கும்படியாக தருவதிலும் நிறையவே கோட்டை விட்டுள்ளார் இயக்குனர். பல குழுக்களுக்கிடையிலான நடன போட்டிகளை ஓரளவுக்கு ரசிக்கும்படியாக படமாக்கிய இயக்குனர், காமெடி என்ற பெயரில் கதையில் தேவையிலாத நிறைய கேரக்டர்களை திணித்து, (குறிப்பாக நடிப்பில் 32 டேக்குகளை வாங்கும் ஊர்வசி கேரக்டர்) போரடிக்க வைப்பதோடு, ராஜ்குமாருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக், ஸ்ரீஜிதா கோஷ், நாகேந்திர பிரசாத் முதலானோருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் என்று கொஞ்சம் சோதிக்கவும் செய்கிறார்!

பாடல், நடனம் என்று பயணிக்கும் இந்த திரைக்கதைக்கு பால்ச்-ஜி இசை அமைத்துள்ளார். இரண்டு பாடல்கள் தவிர மற்ற பாடல்கள், பின்னணி இசை ஆகியவை குறிப்பிடும்படியாக அமையவில்லை! மாடாசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. நாகேந்திர பிரசாத் குழுவினரின் நடன காட்சிகள், ‘பேட்டரி பாய்ஸ்’ நடனக்குழுவினரின் நடன காட்சிகள், ஸ்ரீஜிதா கோஷ், சோனால் சிங் ஆகியோரின் பரதநாட்டிய காட்சிகள் மற்றும் அதிகம் எதிர்பாராத கிளைமேக்ஸ் முதலானவையை ரசிக்க முடிகிறது! படத்தின் அதிகபடியான கேரக்டர்களையும், ஃப்ளாஷ் பேக் காட்சிகளையும் குறைத்து திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கியிருந்தால் ‘கூத்தன்’ கவனம் பெறும் படமாக அமைந்திருக்கும்!

நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜ்குமார் நடனத்திலும், நடிப்பிலும் புதுமுகமாக தெரியவில்லை! நல்ல இயக்குனர்கள் கிடைத்தால் இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு! கதாநாயகிகளாக வரும் ஸ்ரீஜிதா கோஷ், சோனல் சிங் மற்றும் ராஜ்குமாரை ஒரு தலையாய் காதலித்து ஏமாறும் கிரா நாராயணன் ஆகியோர் நடனத்தில் திறமையானவர்கள் என்பது அவர்கள் ஏற்று நடித்துள்ள கேரக்டர்கள் மூலம் வெளிப்படுகிறது. வில்லனாக வந்து குடைச்சல் கொடுக்கும் நாகேந்திரபிரசாத் நடிப்பிலும், நடனத்திலும் குறை வைக்கவில்லை. ராஜ்குமாரின் தயாராக வரும் ஊர்வசி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்! ஆனால் அவரது காமெடி காசிகள் எடுபடவில்லை! பாக்யராஜ், மனோபாலா, ரேணுகா ஆகியோருக்கு குறிப்பிடும்படியான கேரக்டர்கள் அமையவில்லை என்றாலும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளனர்.

பலம்

1. நடன காட்சிகள்

2. கிளைமேக்ஸ்

பலவீனம்

1. திரைக்கதை

2. திணிக்கப்பட்ட கேரக்டர்கள், ஃப்ளாஷ் பேக் காட்சிகள்

மொத்தத்தில்..

‘கூத்தன்’ என்றால் கூத்தாடி, சிவன் என்று பல பொருள் உண்டு! இந்த டைட்டிலுக்கு ஏற்றவாறு படம் சொல்லும்படியாக அமையவில்லை என்றாலும் நடனம், நடனப் போட்டிகள் முதலான விஷயங்களை விரும்புபவர்களுக்கு இப்படம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒருவரி பஞ்ச் : தடுமாறிய ஆட்டம்!

ரேட்டிங் : 3.5/10#KoothanMovieReviews #koothan #DirectorALVenky #NilgrisDreamEntertainment #Rajkumar # Nagendra
#PrasadSunder #KBagyaraj #ManoBala #Ramki

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;