இந்த வாரம் 5 திரைப்படங்கள்!

இந்த வாரம் 5 திரைப்படங்கள்!

செய்திகள் 11-Oct-2018 5:05 PM IST Top 10 கருத்துக்கள்

கடந்த வாரம் விஜய்சேதுபதியின் ‘96’, விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’, விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’, மற்றும் ‘யாகன்’ ஆகிய 4 திரைப்படங்கள் வெளியாகின! அந்த வரிசையில் இந்த வாரம் எத்தனை நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ!

1. ஆண்தேவதை - ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ‘ஜோக்கர்’ படப்புகழ் ரம்யா பாண்டியன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, மற்றும் ராதாரவி, சுஜா வாருண்ணி, அறந்தாங்கி நிஷா, குழந்தை நட்சத்திரங்கள் கெவின், மோனிகா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

‘ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும், ஒரு தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த நிலைமைக்கு அழைத்து செல்கிறது?’ என்பதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. து. ‘சிகரம் சினிமாஸ்’ சார்பில் ஃபக்ருதீன், ஷேக் தாவூத் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2. கூத்தன் – ‘முருகன் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் ‘நீலகிரீஸ்’ முருகன் தயாரித்துள்ள படம் இது! இந்த படத்தில் தயாரிப்பாளர் முருகனின் மகன் ராஜ்முருகன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சோனாலி சிங் நடித்துள்ளார். இவர்களுடன் நாகேந்திர பிரசாத், பாக்யராஜ், ஊர்வசி, கிரா நாராயணன், ஸ்ரீஜிதா ஆகியோரும் நடிக்க, இப்படத்தை ஏ.எல்.வெங்கி இயக்கியுள்ளார். காதல், குடும்பம், சென்டிமெண்ட்;,காமெடி என்று ஜனரஞ்சக படமாக ‘கூத்தன்’ உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு பால்ஜீ இசை அமைத்துள்ளார்.

3. மனுசங்கடா – அம்ஷன் குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஜீவ் ஆனந்த், மணிமேகலை, ஏ.எஸ்.சசிகுமார், ஷீலா ராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற இப்படத்தின் ஒளிப்பதிவை பி.எஸ்.தரன் கவனித்திருக்க, அரவிந்த் – ஷங்கர் இசை அமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பை தனசேகர் கவனித்துள்ளார். ‘இது மானுடத்தின் உரிமைக் குரல்’ என்ற கருத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

4 களவாணி சிறுக்கி – ‘ராணா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரவி ராகுல் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அறிமுகங்கள் சாமி, அஞ்சு கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் காதல் கலந்த குடும்ப கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களாக பல புதுமுகங்கள் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தின் முதல் காட்சிக்கு முதலில் வரும் 100 பேருக்கு கைலி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5. அடங்கா பசங்க – ஆர்.செல்வநாதன் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் இது. சுரேஷ்பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவரும் புதுமுகமே. காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் கே.பி.அல்கேஸ், ஆர்.பி.பிரபு, ஏ.கே.ஆல்ட்ரின், மணிஷ் முதலானோர் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட 5 நேரடி தமிழ் திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களில் ‘கூத்தன்’ படம் மட்டும் ஒருநாள் முன்னதாக இன்று (11-10-18) வெளியாகிறது. மற்ற அனைத்து படங்களும் நாளை (12-10-18) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;