இந்த வார ரிலீஸ் களத்தில் 6 படங்கள்!

இந்த வாரம் செய், வண்டி, பட்டினபாக்கம், கரிமுகன், கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், செம்மறி ஆடு ஆகிய 6 திரைப்படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 23-Nov-2018 10:15 AM IST VRC கருத்துக்கள்

சென்ற வாரம் ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’, உதயாவின் ‘உத்தரவு மகாராஜா’ ஆகிய மூன்று நேரடி தமிழ் படகள் வெளியாகின! அந்த வரிசையில் இந்த வாரம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறைகளின் படி எத்தனை திரைப்படங்கள் வெளியாகின்றன? அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த கண்ணோட்டம் இதோ..

1.செய்

சில மலையாள படங்களை இயக்கிய ராஜ்பாபு தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘செய்’. இந்த படத்தில் நகுல் கதாநாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகை ஏஞ்சல் முஞ்சால் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளனர். ஏற்கெனவே சில ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டு, பிறகு ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு இப்போது நாளை வெளியாக இருக்கும் ‘செய்’ காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் கலந்த கதையாக உருவாகியுள்ளது! இந்த படத்திற்கு நிக் லோபஸ் இசை அமைத்துள்ளார். ‘தூங்காநகரம்’, ‘சிகரம் தொடு’ ஆகிய படங்களின்+ ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

2.வண்டி

‘ரூபி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஹஷிர் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஜீஷ் பாலா இயக்கியுள்ளார். விதார்த், சாந்தினி தமிழரசன், சின்னு குருவில்லா, ஜான் விஜய், அருள்தாஸ், விஜித் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘பைக்’கை மையமாக, மாறுபட்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது என்றும், இப்படத்தின் சில காட்சிகளை படம் பிடிக்க நான்கு கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த படத்தில் நடித்தது மாறுபட்ட அனுபவம் என்றும் கூறியுள்ளார் விதார்த். இந்த படத்தின் ஒளிப்பதிவை ராகேஷ் நாராயணன் கவனிக்க, ரிஷால் ஜெய்னி படத்டொகுப்பு செய்துள்ளார். சூரஜ் எஸ்.குருப் இசை அமைத்துள்ளார்.

3.பட்டினப்பாக்கம்

கலையரசன், அனஸ்வரா கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க, சாயாசிங், ஜான் விஜய், யோக் ஜேப்பி, ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ள படம் ‘பட்டினப்பாக்கம்’. இந்த படத்தை ஜெயதேவ் இயக்கியுள்ளார். இயக்குனர் ஜெயதேவ் நடிகை பாவனாவின் சகோதரர் ஆவார். ‘முள்ளமூட்டில் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரோகித் மேத்யூ தயாரித்துள்ள இந்த படம் காதல், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இஷான் தேவ் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ரானா கவனித்திருக்க, கலை இயக்கத்தை மோகன மகேந்திரன் கவனித்துள்ளார். படத்தொகுப்பை அதுல் விஜய் செய்துள்ளார்.

4.கரிமுகன்

‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் ‘சின்ன மச்சான்… செவத்த மச்சான்…’ பாடல் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்க, கேரளாவை சேர்ந்த காயத்ரி கதாநாயகியாக நடித்திதுள்ள படம் ‘கரிமுகன்’. இந்த படத்தை ‘ சின்ன மச்சான், செவத்த மச்சான்…’ பாடலை எழுதிய செல்ல தங்கையா இயக்கியுள்ளார்.

முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கும் ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து அது முகம் தெரிந்த இரண்டு பேருக்கு என்ன மாதிரியான பிரச்சனைகளை உண்டாக்குகிறது, அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கரிமுகன் படத்தின் ஒருவரி கதை! வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ, பாவா லட்சுமணன், விஜய் கணேஷ் ஆகியோரும் நடித்துள்ள இந்த படத்தின் இசையை இயக்குனர் செல்ல தங்கையாவே கவனித்துள்ளார்.

5. கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும்

‘டுவிங்கிள் லேப்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கதையின் நாயகர்களாக தீபக், பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் மூவரும் நடிக்க, கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, மதுமிதா, ஹேமா, மகேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர், அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராஜ்பரத் இசை அமைத்துள்ளார். டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘கார்த்திகேயன் தன்னுடைய காதலியை தொலைத்துவிட, அவரை தேடுகிற நேரத்தில் நடக்கும் விபரீதமான நிகழ்வுகள், அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என்று பயணிக்கும் கதையாம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ படம்!

6. செம்மறி ஆடு

‘பைசா கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘செம்மறி ஆடு’. இந்த படத்தை அறிமுகம் சதீஷ் சுப்பிரமணியம் இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அம்மா, மகன் பாசத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ரஞ்சித் வாசுதேவ் இசை அமைத்துள்ளார். ஜெய்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட 6 திரைப்படங்கள் இந்த வார ரிலீசாக நாளை (23-11-18) வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்று வெற்றிப் படங்களாக அமையும் என்பது இப்படங்களின் வெளியீட்டுக்கு பிறகு தெரிய வரும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்றின் மொழி ட்ரைலர்


;