2018-ல் வெளியாகி கவனம்பெற்ற ‘டாப்’ திரைப்படங்கள்!

2018-ல் வெளியான படங்களில் அதிக கவனம் பெற்ற படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டம்!

கட்டுரை 31-Dec-2018 8:15 PM IST VRC கருத்துக்கள்

ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த வருடத்தில் வெளியான படங்களை பற்றிய கண்ணோட்டத்தை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் 2018-ல் 181 திரைப்படங்கள் வெளியாகியிருப்பதாக ஒரு புள்ளி விவர கணக்கு தெரிவிக்கிறது. ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக கிட்டத்தட்ட 200 திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த வருடம் 181 நேரடி தமிழ் படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. இந்த எண்ணிக்கை குறைவுக்கான காரணம், தமிழ் திரையுலகில் 50 நாட்களுக்கும் மேல் நடைபெற்ற வேலைநிறுத்தமாகும்.

2018-ல் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பு பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற படங்கள் மட்டுமின்றி விமர்சகர்களிடமும் பாராட்டுதல்களை பெற்ற திரைப்படங்களை எவை என்பதை ரிலீஸ் தேதி அடிப்படையில் இங்கு பட்டியலிட்டிருக்கிறோம்!

1.கலகலப்பு-2

சுந்தர்.சி.இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஷிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘கலகலப்பு-2’ பெயருக்கேற்ற மாதிரியே கலகலப்பான ஒரு படமாக அமைந்திருந்தது. லாஜிக் விஷயங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைத்தால் போதும் என்ற முடிவோடு சுந்தர்.சி.இயக்கியிருந்த இப்படமும் முதல் பாகத்தை போலவே ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

2.இரும்புத்திரை

அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படம் டிஜிட்டல் தொழில்நுடபம் நமது நாட்டுக்கும் மக்கள் வளர்ச்சிக்கும் எவ்வளவு பயன்படுகிறதோ அதே அளவில் அதில் ஆபத்தும் இருக்கிறது என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் வில்லன் வேடமேற்று நடித்த அர்ஜுனின் பங்களிப்பு, யுவன் சங்கர் ராஜாவின் இசை அமைப்பு ஆகியவற்றை இப்படத்திற்கு பக்கபலாமாக அமைந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று 100 நாட்கள் ஓடி வசூலையும் அள்ளியது.

3.காலா

பா.ரஞ்சித் இயத்தில் ரஜினி, நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படம் மும்பை தாராவி பகுதியில் வசித்து வரும் தமிழ் மக்கள், அவர்கள் எதிர்கொளும் பிரச்சனைகள் பற்றி பேசியது. தனுஷ் தயாரித்த இப்படத்தில் இசைக்கு சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவுக்கு முரளி.ஜி ஆகியோர் கை கோர்த்திருந்தனர். ‘கலா’வும் ரசிகர்களின் கவனத்தை பெற்று வெற்றிப் படமாக அமைந்த படமாகும்.

4. டிக் டிக் டிக்

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெய்பிரகாஷ் முதலானோர் நடித்த இப்படம் இந்தியாவின் முதல் ‘ஸ்பேஸ்’ படம் என்ற டேக் லைனுடன் வெளியானது. இந்த டீமின் புதிய முயற்சி பாராட்டும் வகையில் அமைந்திருந்தது என்பதோடு இப்படம் வசூல் ரீதியாகாவும் வெற்றிப்பெற்றது.

5.தமிழ்ப்படம்-2

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், திஷா பாண்டே முதலானோர் நடித்து வெளியாகிய இப்படம் சமீப காலத்தில் வெளியான சில படங்கள், கலைஞர்கள் மற்றும் சமீபகால அரசியலை நைய்யாண்டி செய்து காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது. ‘தமிழ்ப்படம்’ முதல் பாகத்தைபோன்ற வரவேற்பை இப்பட்ம் பெறவில்லை என்றாலும் வணிகரீதியாக இப்படம் ஏமாற்றவில்லை!6. கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியா பவானி சங்கர், சாயிஷா, பொன்வண்னன், இளவரசு, சூரி உட்பட பலர் நடித்த இப்படம் விவயாசம் மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருந்தது. முழுக்க, முழுக்க கிராமத்து பின்னணியில் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளுடன் எடுக்கப்பட்டிருந்த ‘கடைக்குட்டி சிங்கம்’, சமீபகாலத்தில் கூட்டம் கூட்டமாய் பெண்களை தியேட்டருக்கு வரவழைத்த படமுமாகும். வசூல் ரீதியாகவும் ‘கடைக்குட்டி சிங்கம்’ மார்த்தட்டி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

7.கோலமாவு கோகிலா

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்த இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். தன் அம்மாவின் சிகிச்சைக்காக பணத்தை புரட்டுவதற்காக பல முயற்சிகள் செய்யும் நயன்தாராவுக்கு போதை பொருள் கடத்தும் ஒரு கும்பலுடன் தொடர்பு ஏற்பட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பிளாக் ஹ்யூமர் காமெடி ரக பாணியில் படமாக்கப்பட்டிருந்த இப்படமும் ரசிகர்களின் ஆதரவு பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.

8. மேற்கு தொடர்ச்சி மலை

அறிமுக இயக்குனர் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகி பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களை அள்ளிய இந்த படம், தமிழகத்திலும் விமர்சகர்களின் பாராட்டுதல்களை பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்திருந்த இந்த படத்தில் நடித்திருந்தவர்கள் பெரும்பாலானோரும் புதுமுகங்களே! ஆனால் ஓவ்வொருவரிவன் உணர்வுபூர்வமான நடிப்பு, இசைஞானி இளையராஜாவின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு ஆகியவை இப்படத்தின் கதையோட்டத்திற்கு மிகவும் கை கொடுத்தது. இந்த படம் வணிகரீதியாகவும் வெற்றிப்பெற்றது.

9. இமைக்கா நொடிகள்

‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யாப் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஒரு சீரியல் கொலைகாரன், அவனை கண்டு பிடிக்க போராடும் போலீஸ் அதிகாரி என்று பயணிக்கும் இந்த கதையில் சீரியல் கொலைகாரனாக பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யாப் நடிக்க, போலீஸ் அதிகாரியாக நயன்தாரா நடித்திருந்தனர். அதிரடி க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்த இப்படமும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

10.சீமராஜா

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன் முதலனோர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் குறிப்பிடும்படியான ஒரு படமாக அமைந்தது.

11. செக்கச் சிவந்த வானம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ், பிரகாஷ் ராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்த இப்படம் தாதாவாக இருக்கும் பிரகாஷ் ராஜின் இடத்தை பிடிக்க அவரது மகன்களுக்கிடையில் நடக்கும் போராட்டங்களை சித்தரிக்கும் படமாக அமைந்திருந்தது. இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன் என்று கூட்டணி அமைந்த இப்படம் எந்த புதிய விஷயங்களை தாங்கி வரவில்லை என்றாலும் ரசிகர்களின் கவனத்தை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

12. பரியேறும் பெருமாள்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கதிர், ஆனந்தி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஆதிக்க ஜாதியினர் அடக்கப்பட்ட ஜாதியினருக்கு இடையிலான சில சம்பவங்கலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததோடு, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்களும் கிடைத்தது. வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றிப் படமாக அமைந்ததோடு பல விருதுகளையும் அள்ளியது!

13 -96

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா கதாநாயகன், கதாநாயகியாக நடித்த இப்படம், காதல் கைகூடாமல் போன ஒரு இளைஞனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. படு யதார்த்தமான, உணர்வுபூர்வமான காட்சிகளுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோரின் சிறந்த நடிப்பில் உருவாகிய இந்த படம் 2018-ன் சிறந்த காதல் படமாக அமைந்து பாராட்டுக்களும், வசூலும் அள்ளியது.

14. ராட்சசன்

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், அமலா பால், காளிவெங்கட், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வெளியான இப்படம் சைக்கோ கிரைம் த்ரில்லர் ரக படமாக அமைந்திருந்தது. இப்படத்தில்; சைக்கோ கேரக்டரில் நடித்தவர் யார் என்பது குறித்த தகவலை படக்குழுவினர் ரகசியமாக வைத்து, படம் வெளியாகி ஒரு வாரம் கழித்தே அதை ரிவீல் பண்ணினார்கள். ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று நல்ல வசூலையும் அள்ளிய இந்த படத்தின் வெற்றிக்கு ஜிப்ரானின் பின்னணி இசையும் முக்கிய காரணமாக அமைந்தது.

15. வட சென்னை

இயக்குனர் வெற்றிமாறனும், தனுஷும் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கிய இந்த படம் வட சென்னை பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டு ஜெயிலுக்கு போகும் மக்களின், வாழ்வியலை படு யதார்த்தமாக படம் பிடித்து காட்டியிருந்தனர். இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்ததால் ‘ஏ’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியாகிய இப்படம், வெற்றிப் படமாக அமைந்தது. அதே நேரம் இப்படம் சில சர்ச்சைகளையும் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

16. சர்கார்

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாக்கிய இப்படம் தமிழக அரசியல் பின்னணியில் எடுக்கப்பட்டிருந்ததால் இப்படம் பல சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த பிரச்சனைகள் நீதிமன்றம் வரைக்கும் சென்று படத்திலிருந்து சில காட்சிகள் நீக்கப்படும் சூழ்நிலையும் உருவாகியது. இருந்தாலும் 2018-ஆம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது விஜய்யின் ‘சர்கார்’.

17- 2.0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வெளியான இப்படம் தமிழின் முதல் நேரடி 3டி படமாகும். 400 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் இந்தியாவில் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையுடன், ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் விதமாகவும் அமைந்து பேசப்பட்டது. மொபைல் ஃபோன் டவர்களால் மனிதர்கள் மற்றும் உயிரனகளுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தினை விளக்கும் விதமாக அமைந்திருந்த இந்த படம் தமிழ் சினிமாவை உலக சினிமா அளவுக்கு கொண்டு சேர்த்த படமும் ஆகும். இன்னமும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘2.0’ வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

18. கனா

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படம் வாழ்க்கையில் முன்னேற துடிப்போருக்கு ஊக்கம் தரும் படமாக அமைந்திருந்தது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விவசாயத்தின் அவல நிலையையும் வெளிச்சம்போட்டு காட்டிய படமாகும். 2018-ம் இறுதியில் வெளியான இப்படமும் பேசப்பட்டு வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

19. அடங்கமறு

அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ராஷி கன்னா, சம்பத்ராஜ், அழகம் பெருமாள் உட்பட பலர் நடித்துள்ள இந்த படம் போலீஸ் - பழி வாங்கும் கதைதான் என்றாலும் புதுமையான முறையில் சொல்லப்பட்டிருந்தது. ‘தனி ஒருவன்’, ‘போகன்’ வரிசையில் ‘ஜெயம்’ ரவி போலீஸ் வேடமெற்று நடித்த இப்படமும் இந்த வருடத்தின் கடைசி வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;