பொங்கல் களத்தில் முதன் முதலாக ரஜினி, அஜித்!

முதன் முதலாக பொங்கல் களத்தில் வெளியாகும் ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’

கட்டுரை 8-Jan-2019 3:20 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் சிவாவும் அஜித்தும் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. இவர்கள் இருவரும் இதற்கு முன் இணைந்து உருவாக்கிய ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை போல இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக வெளியான ‘விவேகம்’ படத்திற்கு கிடைக்கவில்லை! இருந்தாலும் ‘விவேகம்’ வெளியாகி ஒரு சில நாட்களிலேயே இயக்குனர் சிவாவும், அஜித்தும் தங்களது நான்காவது பட அறிவிப்பை வெளியிட்டு ரசிகரக்ளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். அந்த படம்தான் ‘விஸ்வாசம்’.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான ‘விவேகம்’ எதிர்பார்த்த வரவேற்பு பெறாத நிலையில், அதே சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கே அஜித் தனது அடுத்த படத்தையும் நடித்து கொடுக்க முடிவு செய்த படம்தான் ‘விஸ்வாசம்’. இவர்களது முந்தைய படங்களை விட ‘விஸ்வாசம்’ பெண்கள், குழந்தைகள் என்று எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக இயக்குனர் சிவாவும் அஜித்தும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

‘விஸ்வாசம்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. அதே தினம் ரஜினியின் ‘பேட்ட’ படமும் வெளியாக இருப்பதால் இந்த பொங்கல் ரஜினி ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஆகியோருக்கு ஸ்பெஷல் பொங்கலாக அமையவிருக்கிறது! இதுவரையிலும் எந்த பொங்கலுக்கும் ரஜினி, அஜித் நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதில்லை! இதுதான் முதல் முறை!

ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான முதல் படம் எது என்றால் அது ‘ப்ரியா’ என்ற கன்னட படம்தான். இந்த படம் 1979 ஜனவரி 12-ஆம் தேதி வெளியானது. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படம் தமிழில் 1978 டிசம்பர் 22-ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ‘குப்பத்து ராஜா’. டி.ஆர்.ராமண்ணா இயக்கிய இந்த படம் 1979 ஜனவரி 12-ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘போக்கிரி ராஜா’ 1982 ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘பாயும்புலி’, எஸ்.வி.ரமணன் இயக்கிய ‘உறவுகள் மாறலாம்’ ஆகிய 2 படங்கள் 1983 ஜனவரி 14ஆம் தேதி ரஜினியின் பொங்கல் படங்களாக வெளியானது. இதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் பொங்கல் சீசனில் வெளியான படம் ‘மேரி அதாலத்’ என்ற ஹிந்திப்படம். இந்த படம் 1984 ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ என்ற படமும் அதே ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘மிஸ்டர் பாரத்’ 1986 ஜனவரி 10-ஆம் தேதி வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பணக்காரன்’ பொங்கல் ரிலீசாக 1990 ஜனவரி 14ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து ராஜசேகர் இயக்கிய ‘தர்மதுரை’ படம் 1991 ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. மீண்டும் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த ‘மன்னன்’ 1992 ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. 1995 ஜனவரி 12-ஆம் தேதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பாட்ஷா’தான் ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான கடைசி படம்! ‘பாட்ஷா’ படத்தை தொடர்ந்து 23 ஆண்டுகள் கழித்து ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகிற படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’தான்!

இனி அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகிய படங்கள் பற்றி பார்ப்போம்! அகத்தியன் இயக்கத்தில் 1996, ஜனவரி 12-ஆம் தேதி வெளியான ‘வான்மதி’ படம்தான் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான முதல் படம்! இந்த படத்தை தொடர்ந்து கே.சுபாஷ் இயக்கத்தில் 1997, ஜனவரி 14-ஆம் தேதி வெளியான ‘நேசம்’, ரமேஷ் கண்ணா இயக்கத்தில் 1999 ஜனவரி 14-ஆம் தேதி வெளியான ‘தொடரும்’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2001 ஜனவரி 14-ஆம் தேதி வெளியான ‘தீனா’, சிங்கம்புலி இயக்கத்தில் 2002 ஜனவரி 14-ஆம் தேதி வெளியான ‘ரெட்’, பி.வாசு இயக்கத்தில் 2006 ஜனவரி 14-ஆம் தேதி வெளியான ‘பரமசிவன்’, செல்லா இயக்கத்தில் 2007 ஜனவரி 12-ஆம் தேதி வெளியான ‘ஆழ்வார்’, சிவா இயக்கத்தில் 2014 ஜனவரி 10-ஆம் தேதி வெளியான ‘வீரம்’ என அஜித் நடித்த 8 திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாகியுள்ளன. இப்போது வெளியாக இருக்கும் ‘விஸ்வாசம்’ அஜித்தின் 9-ஆவது பொங்கல் திரைப்படமாகும்!

மேலே குறிப்பிட்டது மாதிரி, ரஜினி நடிப்பில் 12-க்கும் மேற்பட்ட படங்களும் அஜித் நடிப்பில் 8 படங்களும் பொங்கலுக்கு வெளியாகியுள்ள நிலையில், இதுவரையிலும் ரஜினி, அஜித் நடித்த எந்த படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானதில்லை! அந்த நிகழ்வு இந்த வருட பொங்கலுக்கு நடைபெறவிருப்பதால ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் என்றில்லாமல் இந்த நிகழ்வு அனைத்து ரக சினிமா ரசிகர்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது!

#Petta #Viswasam #PongalSuperstar #KarthikSubbaraj #Thala #DImman #AjithKumar #Siva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேட்டிக்காட்டு வீடியோ பாடல் விஸ்வாசம்


;