பேட்ட - விமர்சனம்

காளியின் ஆட்டத்தில் களைகட்டுகிறது ‘பேட்ட

விமர்சனம் 10-Jan-2019 5:45 PM IST Top 10 கருத்துக்கள்

Directed by : Karthik Subbaraj
Produced by : Kalanithi Maran
Written by : Karthik Subbaraj
Starring : Rajinikanth, VijaySethupathi, Simran, Trisha, M.Sasikumar, Nawazuddin, Siddiqui,
BobbySimha
Music by : Anirudh Ravichander
Cinematography : Tirru
Edited by : Vivek Harshan
Production company :Sun Pictures

‘ஒரு சூப்பர்ஸ்டார் ரசிகனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூப்பர்ஸ்டார் படம் எப்படியிருக்கும்?’ என்ற எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் ‘பேட்ட’ அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளதா?

கதைக்களம்

காலேஜ் ஹாஸ்டல் ஒன்றிற்கு வார்டனாக வேண்டி விரும்பி பணியில் சேர்கிறார் ரஜினிகாந்த். அவர் வந்ததும், அந்த ஹாஸ்டலில் நடக்கும் அடாவடித்தனங்கள் குறைந்து ஒட்டுமொத்த ஹாஸ்டலும் வார்டன் ரஜினி கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து தன் காதலி மேகா ஆகாஷிற்காக அதே காலேஜில் வந்து சேர்கிறார் சனந்த் ரெட்டி. அவர் வந்தபிறகு சில பல கும்பல்கள் சனந்த் ரெட்டியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சியை ரஜினி முறியடிக்கிறார். ரஜினி யார்? ரஜினிக்கும் சனந்த் ரெட்டிக்கும் என்ன சம்பந்தம்? சனந்த் ரெட்டியை கொலை செய்ய முயற்சிப்பது யார்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது ‘பேட்ட’.

படம் பற்றிய அலசல்

கடந்த ஒரு சில ரஜினி படங்களில் தங்களால் பழைய சூப்பர்ஸ்டாரை பார்க்க முடியவில்லையே என ஏங்கித் தவித்த ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ‘பேட்ட’ படத்தின் முதல்பாதி மூலமாக தலைவாழை விருந்து படைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியின் நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என ஒவ்வொன்றும் 90களில் கோலோச்சிய சூப்பர்ஸ்டாரை கண்முன் நிறுத்தியிருக்கிறது. ரஜினியின் மொத்த மாஸ் சீன்களும் முதல்பாதியிலேயே போதுமான அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக அமைந்துவிட்டதாலும், இரண்டாம்பாதியின் திரைக்கதை ஏற்ற இறக்கமில்லாமல் சீராக பயணிப்பதாலும் இரண்டாம்பாதி சற்று சோர்வை ஏற்படுத்துவதையும் மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில், படத்தின் கடைசி 10 நிமிடத்தில் மறுபடியும் ரஜினிக்கு ஸ்டைலான, மாஸான காட்சிகளை வைத்து படம் முடிந்து வெளியே போகும் ரசிகர்களை முழு உற்சாகத்தோடு அனுப்பி வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் இரண்டு முக்கிய தூண்களாக செயல்பட்டு படத்தை சுவாரஸ்யப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது திருவின் ஒளிப்பதிவும், அனிருத்தின் மாஸ் பின்னணி இசையும். பாடல்களுக்கும் தியேட்டரில் ரகளையான ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. கொஞ்சம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் படத்தின் ஓட்ட நேரத்தைக் குறைத்திருந்தால், முழுப்படமும் ரசிகர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்திருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

‘என்ன குழந்தைகளா.... இந்த ஆட்டம் போதுமா’ & இதுதான் படத்தில் ரஜினி பேசும் இறுதி வசனம். உண்மையிலேயே இந்த வசனத்திற்கு அத்தனை பொருத்தமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார் சூப்பர்ஸ்டார். கடந்த ஒரு சில படங்களில் இல்லாத குறும்புத்தனத்தையும், எனர்ஜியையும் முழுப்படத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி. டான்ஸ், ஃபைட், ரொமான்ஸ், காமெடி, மாஸ் என அனைத்து ஏரியாக்களையும் ஒரு கை பார்த்திருக்கிறார் சூப்பர்ஸ்டார். குறிப்பாக புரூஸ் லீ ஸ்டைலில் ‘லுன்ச்சாக்’ வைத்து ரஜினி போடும் சண்டை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. முழுப்படத்திலும் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் ரஜினி.

சூப்பர்ஸ்டாருக்குப் பிறகு படத்தில் பெரிய அளவில் ஸ்கோர் செய்திருப்பது விஜய்சேதுபதியும், நவாஸுதீன் சித்திக்கும்தான். இருவருமே தங்களின் தனித்தன்மையான நடிப்பால் பெரிதாக கவர்கிறார்கள். சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் என படத்தில் 4 ஹீரோயின்கள் இருந்தாலும், யாருக்குமே பெரிய கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வரும் சிம்ரன் பெரிதாக ஈர்க்கிறார். பாபி சிம்ஹா, சசிக்குமார், சனந்த் ரெட்டி ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு சரியான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். இவர்களைத்தவிர குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், ராம்தாஸ், இயக்குனர் மகேந்திரன் உட்பட ரசிகர்களுக்கு பரிச்சயமான நட்சத்திரங்கள் ஏகப்பட்ட பேர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

பலம்

1. சூப்பர்ஸ்டார் ரஜினி
2. படத்தின் முதல்பாதி
3. அனிருத்தின் இசையும், திருவின் ஒளிப்பதிவும்

பலவீனம்

1. சோர்வை ஏற்படுத்தும் இரண்டாம்பாதியின் அதிகப்படியான துப்பாக்கி சண்டைக் காட்சிகள்
2. படத்தின் நீளம்

மொத்தத்தில்...

எதைப்பற்றியும் கவலைப்படாமல் ‘பேட்ட’ படத்தின் முதல்பாதியை ரசிப்பதற்காகவே தாராளமாக முழுப்படத்திற்குமான டிக்கெட்டை விலை கொடுத்து வாங்கலாம். நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான ரஜினி படத்தைப் பார்த்துவிட்டு சந்தோஷமாக தியேட்டரைவிட்டு வெளியேறும் ரசிகர்களை ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் காண முடிகிறது.

ஒரு வரி பஞ்ச் : காளியின் ஆட்டத்தில் களைகட்டுகிறது ‘பேட்ட’.

ரேட்டிங் : 6/10


#PettaMovieReview #Petta #Rajini #Rajinikanth #VijaySethupathi #Simran #Trisha #MSasikumar
#Nawazuddin #Siddiqu #BobbySimha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;