விஸ்வாசம் – விமர்சனம்

தூக்குத்துரை’யின் ஆட்டத்தை ரசிக்கலாம்!

விமர்சனம் 10-Jan-2019 6:16 PM IST Top 10 கருத்துக்கள்

Directed by : Siva
Starring : Ajith Kumar Nayanthara
Music by : D. Imman
Cinematography : Vetri
Edited by : Ruben
Production company :Sathya Jyothi Films

அஜித் நடித்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளான நிலையில் அஜித், சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி திரைக்கு வந்துள்ள ‘விஸ்வாசம்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

தூக்குத்துரை (அஜித்) என்றாலே மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள் அதிரும்!. அடிதடி, பஞ்சாயத்து என்று சொந்த பந்தங்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருபவர் தூக்குத்துரை. இந்த நிலையில் மருத்துவமுகாம் நடத்த மதுரைக்கு வருகிறார் டாக்டர் நிரஞ்சனா (நயன்தாரா). மருத்துவம் செய்ய வந்த இடத்தில் தூக்குதுரையின் குணாதிசயங்களை கண்டு அவரை விரும்புகிரார் நிரஞ்சனா. இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தையும் (அனைகா) பிறக்கிறது. மனைவி, பெண் குழந்தை என்றும் குடும்பம் ஆன நிலையிலும் தூக்குத்துரை அருவாளை தூக்குவதை விடவில்லை. இதனால் நிரஞ்சனா கோபமுற்று தூக்குதுரையைப் பிரிந்து மகளுடன் மும்பை சென்று விடுகிறார். இந்த நிலையில் பத்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஊர் திருவிழாவுக்கு சொந்தபந்தங்கள் வற்புறுத்த மனைவியை அழைக்க மும்பை செல்கிறார் தூக்குத்துரை. அப்போது அனைகாவை யாரோ கொல்ல திட்டமிட்டிருக்கிற விஷயம் தூக்குத்துரைக்கு தெரிய வருகிறது. தூக்குத்துரை அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து தன் மனைவியுடனும், மகளுடனும் சேர்ந்தாரா என்பதே படத்தின் கதை!

படம் பற்றிய அலசல்

‘வீரம்’ படத்தில் அண்ணன், தம்பி செண்டிமெண்டையும் ‘வேதாள’த்தில் தங்கச்சி செண்டிமெண்டையும், ‘விவேக’த்தில் கணவன், மனைவி செண்டிமெண்டையும் வலியுறுத்தி திரைக்கதை அமைத்த இயக்குனர் சிவா, ‘விஸ்வாச’த்தில் அப்பா, மகளுக்கு இடையிலான சென்டிமென்ட் கதையை கையிலெடுத்திருக்கிறார். அதை குறிப்பாக அஜித் ரசிகர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை குறிவைத்து திரைக்கதையாக்கி இயக்கி இருக்கிறார் சிவா.

அதிரடி ஆக்‌ஷன் சென்டிமெண்ட் பாடல்கள், காமெடி என்ற விஷயங்களோடு பயணித்து ‘விஸ்வாசம்’ ரசிக்க வைக்கிறது. முதல்பாதியில் அஜித் சம்பந்தப்பட்ட காமெடி, இரண்டாம் பாதியில் விவேக் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறது. ஆனால் ரோபோ சங்கர், தம்பி ராமையா சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெடிக்கும், கதைக்கும் பலம் சேர்க்கவில்லை. அதைப் போல மதுரை பின்னணியில் துவங்கும் கதை ஒரு அழுத்தமான கிராமத்து கதையை சொல்லப் போகிறது என்று பார்த்தால், கொஞ்சம் ஏமாற்றத்தையே தருகிறது. வசதிபடைத்தவரும், படிப்பறிவும் உள்ள டாக்டர் நிரஞ்சனா மதுரைக்கு வந்து படிப்பறிவில்லாத தூக்குதுரையின் துணிச்சலையும் நேர்மையையும் பார்த்து அவரை விரும்பி திருமணம் செய்துகொள்கிறார். அவரது பின்னணி அறிந்தும் ஒரு சிறிய விஷயத்துக்காக அவரை பிரிந்து சென்று வாழ்வது, தன் குழந்தையிடம் அவளது அப்பா யார் என்பதை தெரிவிக்காமால் வளர்ப்பது போன்ற விஷயங்களில் அழுத்தம் இல்லை. ஒரு பாடல் தவிர, கதையில் அடிக்கடி வரும் பாடல்களும் கொஞ்சம் சோர்வடைய செய்கிறது. இதுபோன்ற சில குறைகளை சரி செய்திருந்தால் ‘விஸ்வாசம்’ மேலும் ரசிக்க வைத்திருக்கும். வெற்றியின் ஒளிப்பதிவு, ரூபனின் படத்தொகுப்பு ஆகிய விஷயங்கள் விஸ்வாசத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

தூக்குதுரையாக வெள்ளை தாடி முடி என்று ஒரு கெட்-அப்பிலும், கருப்பு தாடி முடி என்று இன்னொரு கெட்-அப்பிலும் வருகிறார் அஜித். முதல் பாதியில் காமெடியில் கலக்கியவர், இரண்டாம் பாதியில் அடிதடி ஆக்‌ஷனில் அதகளம் பண்ணி, இறுதியில் மகள் மீதான சென்டிமெண்ட் காட்சிகளில் கண்கலங்கவும் வைக்கிறார். டாக்டர் நிரஞ்சனாவாக வரும் நயன்தாராவின் பர்ஃபாமென்ஸை பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. வழக்கம்போல சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் நயன்தாரா. அஜித்தின் சொந்தக்காரர்களாக வரும் தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோரது கேரக்டர்கள் கதைக்கு வலு சேர்க்கவில்லை என்றாலும் நடிப்பை பொறுத்தவரை இருவரும் குறை வைக்கவில்லை. மும்பையில் அனைகாவை கொல்ல திட்டமிடும் வில்லனாக வரும் ஜெகபதி பாபு, நயன்தாராவின் உதவியாளராக வரும் விவேக் ஆகியோரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.அஜித்

2. செண்டிமெண்ட் காட்சிகள், காமெடி காட்சிகள்

3. ஒளிப்பதிவு,. படத்தொகுப்பு

பலவீனம்

1. எந்த புதிய விஷயங்களும் இல்லாதது

2. பாடல்கள்

மொத்தத்தில்

நான்காவது முறையாக அஜித்தும் சிவாவும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ‘விஸ்வாசம்’ எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்கும் விதமமாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்! இருந்தாலும் அஜித் ரசிகரக்ள், பெண்கள் ஆகியோரை இந்த ‘விஸ்வாசம்’ ஏமாற்றாது.

ஒருவரி பஞ்ச்: ‘தூக்குத்துரை’யின் ஆட்டத்தை ரசிக்கலாம்!

ரேட்டிங் :5/10

#Viswasam #ViswasamMovieReview #Siva #AjithKumar #Nayanthara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;