தமிழ் சினிமாவில் ஆதிக்கம் படைக்கும் ஹீரோயின்கள்!

தமிழ் சினிமாவில் ஆதிக்கம் படைத்து வரும் நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா, அமலா பால், வரலட்சுமி சரத்குமார், ஹன்சிகா….

கட்டுரை 30-Jan-2019 11:57 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவை மட்டுமல்ல, உலக சினிமாவையே எடுத்துக் கொண்டாலே வெளியாகும் படங்களில் பெரும்பாலானவற்றின் கதையும் ஹீரோக்களை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கும். இது சினிமா துவங்கிய காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் விஷயமாகும். இருந்தாலும் எல்லா மொழிகளிலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை கொண்ட சில படங்களும் அவ்வப்போது உருவாகி வெளியாகியுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. பொதுவாக சினிமாவை எடுத்துக் கொண்டால் இயக்குனர் அல்லது ஹீரோ இவர்களை மையப்படுத்தியே பெரும்பாலும் பேசப்படும்! இதுவும் எல்லா மொழியிலும் காலம் காலமாக இருந்து வரும் விஷயமாகும்!

ஆனால் தமிழ் சினிமா சமீப காலமாக சிறிய பட்ஜெட்டில் தரமான படங்கள் உருவாகுவதும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை கொண்ட படங்கள் வெளியாவதுமாக ஒரு புதிய பாதையில், ஆரோக்கியமான முறையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்ற ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘பரியேறும் பெருமாள்’ முதலான படங்களை குறிப்பிடலாம். அதைப் போல ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியான சில படங்களும் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்தில் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

நயன்தாராவின் ‘மாயா’, ‘அறம்’ டோரா, ‘கோலமாவு கோகிலா’, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘காற்றின் மொழி’, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘மோகினி’, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ முதலானவை ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களாகும். இதில் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘மோகினி’ எதிர்பார்த்த அளவில் கவனம் பெறவில்லை என்றாலும் இப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பு பேசப்பட்டது. இப்படி நயன்தாரா, ஜோதிகா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்து வெளியான இப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததால் இப்போது நிறைய ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை கொண்ட படங்களை உருவாக்க தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் முன் வந்துள்ளனர்.

அந்த வரிசையில் இப்போது சக்ரி டொலேட் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் ‘கொலையுதிர்காலம்’, சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. அதைப் போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக அமலா பால் நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. அதில் ஒன்று வினோத் இயக்கும் ‘அதோ அந்த பறவைப் போல’. இன்னொன்று ரத்னகுமார் இயக்கும்‘ஆடை’. இந்த இரண்டு படங்களும் அமலா பாலை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களாகும்.

இந்த வரிசையில் ஜோதிகாவும் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்க, இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பும் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதைப் போல த்ரிஷா நடிப்பிலும் இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. அதில் ஒன்று ‘கர்ஜனை’. இதனை சுந்தர் பாலு இயக்கி வருகிறார். இன்னொரு படம் திருஞானம் இயக்கி வரும் ‘பரமபத விளையாட்டு’.

ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷா, அமலா பால் ஆகியோரைப் போலவே வேறு சில நடிகைகளும் ஹீரோயின் ஓரியண்டட் கதைகதை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளனர். அந்த வரிசையில் ஜே.கே.இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ஒரு படம் ‘ராஜபார்வை’. இதில் வரல்டசுமி சரத்குமார் கண்பார்வை இல்லாதவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படம் தவிர, பிரியதர்ஷினி இயக்கத்தில் ‘சக்தி’ என்ற படத்திலும் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கிறார். இதில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரி வேடமேற்று நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.இந்த படங்கள் தவிர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’, ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிக்கும் ‘லிசா’, ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ‘பாரிஸ் பாரிஸ்’, ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் நமீதா நடிக்கும் ‘அகம்பாவம்’, பிரியதர்சினி இயக்கத்தில் நித்யா மேனன் நடிக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகும் ‘தி அயர்ன் லேடி’, வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்து வரும் ‘வீரமாதேவி’ ஆகிய படங்களும் பெண் கேரக்டரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் படங்களாகும்.

இப்படி ஒரே நேரத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள இவ்வளவு படங்கள் உருவாகி வருவது தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறை என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் இது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான விஷயமாகவும் பாரக்கப்படுகிறது.

#Nayanthara #jyothika #Amalapaul #trisha #Maya #36Vayadhinile #Aadai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆடை -டீஸர்


;