வந்தா ராஜாவாதான் வருவேன் - விமர்சனம்

சொந்தங்களை சேர்க்கும் கெட்டிக்கார ராஜா!

விமர்சனம் 1-Feb-2019 5:00 PM IST VRC கருத்துக்கள்

Directed by Sundar C
Starring Silambarasan Megha AkashCatherine TresaPrabhu Ramya Krishnan
Music by Hiphop Tamizha
Cinematography Gopi Amarnath
Edited by N. B. Srikanth

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு முதன் முதலாக நடித்திருக்கும் இந்த ‘ராஜாவாதான் வருவேன்’ தெலுங்கில் ஹிட்டடித்த பவன் கல்யாணின் ‘ATTARINTIKI DAREDI’யின் ரீ-மேக் என்பது எல்லோருக்கும் தெரியும்! சுந்தர்.சி, சிம்பு காம்பினேஷனில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டைட்டிலுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

ஸ்பெயின் நாட்டில் பெரிய தொழிலதிபராக இருப்பவர் நாசர். உலகம் முழுக்க பிசினஸ் என்று பெரிய பணக்காரராக இருக்கும் நாசருக்கு நிம்மதியே என்ற விஷயமே இல்லை! இதற்கு காரணம் தன் அனுமதியின்றி பிரபுவை காதலித்து திருமணம் செய்த தன் மகள் ரம்யாகிருஷ்ணனை வீட்டை விட்டு துரத்தியதால் 20 ஆண்டுகளாக அவரை பார்க்க முடியாமல் இருக்கும் வேதனையான விஷயம்தான்! 80 வயதுடைய நாசர் இந்தியாவில் இருக்கும் தனது மகள் ரம்யாகிருஷ்ணனை பார்க்க ஆசைப்பட, ரம்யா கிருஷ்ணனின் அண்ணன் சுமனின் மகனும், நாசரின் பேரனுமான சிம்பு தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி வைக்க ரம்யா கிருஷ்ணனை தேடி இந்தியா வருகிறார். இந்தியாவில் பெரிய தொழிலதிபராகவும், ரோஷக்காரியாகவும் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் வீட்டில் டிரைவராக வேலைக்கு சேரும் சிம்பு எப்படி தன் அத்தையை சமாதானம் செய்து தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி வைக்கிறார் என்பதே படத்தின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

வழக்கமாக ரீ-மேக் படங்கள் என்றால் நமது நேட்டிவிட்டிக்கு தகுந்தபடி கதையிலும், காட்சி அமைப்புகளிலும் சில மாற்றங்கள் செய்து இயக்குவது வழக்கம். ஆனால் சுந்தர்.சி. இப்படத்தில் அந்த ரிஸ்கை எல்லாம் எடுக்கவில்லை! எடுத்துக்கொண்ட கதையின் போக்குக்கு தகுந்தபடி படத்தை இயக்கி ரசிக்க வைத்துள்ளார். சிம்பு இந்தியா வருவதிலிருந்து கலகலப்பாகிறது படம்! விடிவி கணேஷ், ரோபோ சங்கர் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் என்று இடைவேளை வரை ஜாலியாக நேர்த்தியாக பயணிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் தட்டுத்தடுமாறி பயணிப்பது மாதிரி அமைந்தாலும், ‘யோகி’ பாபு சம்பந்தப்பட்ட் காட்சிகள் அந்த குறைகளை சரி செய்து விடுகிறது!

சிம்பு தனது அத்தையின் மகள்களில் ஒருவரான கேத்ரின் தெரெசாவை விரும்புகிறார். ஆனால் கேத்ரின் தெரெசாவோ மஹதை விரும்புகிறார். இந்நிலையில் இன்னொரு அத்தை மகளான மேகா ஆகாஷ், சிம்புவை விரும்புகிறார்! ஆனால் மேகா ஆகாஷை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார் யோகி பாபு! யோகி பாபுவிடமிருந்து மேகா ஆகாஷை காப்பாற்ற சிம்பு மேற்கொள்ளும் முயற்சிகள் என்று வழக்கமாக சுந்தர்.சி. தனது படங்களில் செய்யும் மேஜிக்கை இந்த படத்திலும் செய்து ரசிக்க வைத்துள்ளார். அத்துடன் சிம்புவை சிறப்பாக நடிக்க வைத்த சுந்தர்.சி. சிம்புவின் நிஜ லைஃப் சம்பந்தப்பட்ட சில விஷயங்களையும் வசனங்கள் மூலமாக தந்து ரசிக்க வைத்துள்ளார்.

முதல் பாதியிலுள்ள திரைக்கதை நேர்த்தியை இரண்டாம் பாதியில் கையாள தவறியிருப்பது, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தாதது, நேர்த்தியாக அமையாத கிராஃபிக்ஸ் காட்சிகள் முதலானவை படத்தின் மைனஸ் பக்கங்களாக அமைந்துள்ளன! மற்றபடி கோபி அமர்நாதின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு ஆகிய டெக்னிக்கல் விஷயங்கள் ‘ராஜா’வுக்கு கை கொடுத்துள்ளன!

நடிகர்களின் பங்களிப்பு

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிறந்த நடிப்பை வழங்கி வேறு ஒரு ரூட்டில் பயணிக்கத் துவங்கியுள்ள சிம்பு, இப்படத்திலும் அந்த தரத்தை கடை பிடித்து சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கமாக டான்ஸ், சண்டை காட்சிகளில் தனது ஸ்டைலை காட்டும் சிம்பு இந்த படத்தில், கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்துள்ளார். சிம்புவின் அத்தை ரம்யா கிருஷணனின் மகள்களாக வரும் கேத்ரின் தெரெசா, மேகா ஆகாஷ் இருவரில் மேகா ஆகாஷுக்கு கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்! க்யூட்டாக வரும் மேகா ஆகாஷின் நடிப்பாகட்டும், சொந்த குரலகாட்டும், தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட வருவதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. கேத்ரின் தெரெசாவின் தோற்றமும், நடிப்பும் சொல்லும்படியாக அமையவில்லை. சிம்புவின் அத்தையாக வரும் ரம்யா கிருஷ்ணனை தவிர்த்து அந்த கேரக்டருக்கு வேறு யாரையும் யோகிக்க முடியாத அளவுக்கு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் ரம்யா கிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணனின் கணவராக வரும் பிரபு, சிம்புவின் தாத்தாவக வரும் நாசர், அப்பாவாக வரும் சுமன், பாதுகாவலராக வரும் விடிவி கணேஷ், மற்றும் ‘ரோபோ ’சங்கர், ‘யோகி’ பாபு, ராதாரவி என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது கேரக்டர்களுக்கு ஏற்ற சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1. நேர்த்தியாக பயணிக்கும் முதல் பாதி

2. காமெடி

3. சிம்பு

பலவீனம்

1.இரண்டாம் பாதி

2. பின்னணி இசை, கிராஃபிக்ஸ் காட்சிகள்

மொத்தத்தில்…

புதிய விஷயங்களை, லாஜிக் விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்காமல் இரண்டரை மணிநேரம் ஜாலியாக பொழுதை கழிக்க நினைப்பவர்கள் இந்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை பார்க்க தியேட்டருக்கு விசிட் அடிக்கலாம்!

ஒருவரி பஞ்ச் : சொந்தங்களை சேர்க்கும் கெட்டிக்கார ராஜா!

ரேட்டிங் : 5/10

#Silambarasan #MeghaAkash #CatherineTresa #Prabhu #RamyaKrishnan #VanthaRajavaThanVaruvenReview #VVR #Simbu #Sundar C

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்மபிரபு -டீஸர்


;