‘தில்லுக்கு துட்டு-2’ – விமர்சனம்

மீண்டும் ‘தில்லுக்கு துட்டு’ கிடைக்கும்!

விமர்சனம் 7-Feb-2019 4:45 PM IST VRC கருத்துக்கள்

Direction: Rambhala
Production: Handmade films
Cast: Santhanam, Shritha Sivadas, ‘Motta’ Rajendran & Urvashi
Music: Shabir
Cinematography: Deepak Kumar Pathy
Editor: Madhavan Madhu

இயக்குனர் ராம்பாலாவும், சந்தானமும் இணைந்து உருவாக்கிய ‘தில்லுக்கு துட்டு’ வெற்றிப் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இருவரும் இணைந்து அதன் இரண்டாம் பாகமாக அதே பாணியில் உருவாக்கியுள்ள படம் ‘தில்லுக்கு துட்டு-2’. முதல் பாகம் தந்த சுவாரஸ்யத்தை விட இந்த இரண்டாம் பாகம் சுவாரஸ்யமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

ஆட்டோ ரிக்‌ஷா டிரைவரான சந்தானமும், அவரது மாமா மொட்டை ராஜேந்திரனும் ஒரு காலனியில் வசித்து வருகிறார்கள். இருவரும் குடித்து விட்டு கலாட்டாக்கள் செய்வதால் அந்த காலனி மக்களுக்கு இவர்கள் மீது கடும் கோபம்! இந்நிலையில் அந்த காலனியில் வசித்து வரும் டாக்டர் கார்த்திக் மருத்துவமனையில் தன்னுடன் பணிபுரியும் டாக்டர் ஷ்ரிதா ஷிவதாஸ் மீது ஆசைப்பட்டு, அவரிடம் ‘ஐ லவ் யூ’ சொல்கிறார்! ஷ்ரித்தா ஷிவதாஸிடம் யார் ‘ஐ லவ் யூ’ சொல்கிறாரோ அவரை ஒரு பேய் வந்து துரத்தி அடிக்கும்! இந்நிலையில் சந்தானத்தை பழிவாங்கும் நோக்கத்துடன் டாக்டர் கார்த்திக், சந்தானத்தையும், ஷ்ரித்தா ஷிவதாஸையும் சந்திக்க வைக்க, சந்தானத்துக்கு, ஷ்ரித்தா ஷிவதாஸ் மீது காதல் வந்து ‘ஐ லவ் யூ’ சொல்கிறார். அப்போது சந்தானத்தையும் அந்த பேய் வந்து துரத்தி அடிக்கிறது! ஷ்ரித்தா ஷிவதாஸிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னால் பேய் வந்து தாக்க காரணம் என்ன? அந்த பேய் யார்? கடைசியில் சந்தானமும், ஷ்ரித்தா ஷிவதாஸும் வாழ்க்கையில் இணைகிறார்களா? இந்த கேள்விகளுக்கான விடைகளே ‘தில்லுக்கு துட்டு-2’.

படம் பற்றிய அலசல்

‘போலீஸ்காரன் மகளை காதலித்தாலும் அடிக்க வருவாங்க, அரசியல் வாதியின் மகளை காதலித்தாலும் அடிக்க வருவாங்க! இப்படி யார் மகளை காதலித்தாலும் அடிக்க வரும் நிலையில் ஒரு மந்திரவாதியின் மகளை காதலித்தால் என்ன நடக்கும்?’ என்ற கான்சப்ட்டை வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதை இரண்டு மணிநேரம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும்விதமான காட்சிகளாக்கி படமாக்கியுள்ளார் இயக்குனர் ராம்பாலா! சந்தானத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதை, காட்சிகள், வசனங்கள் என்று பயணிக்கும் இந்த கதையில் சந்தானம் வரும்போதெல்லாம் தியேட்டரில் அப்படியொரு வரவேற்பு!

ஆனால் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தருகிறது என்பதையும் குறிப்பிடவேண்டும். இருந்தாலும் சந்தானம், படு பயங்கர மந்திரவாதியான ஷ்ரித்தா ஷிவதாஸின் அப்பாவை தேடி கேரளா சென்றதை தொடர்ந்து கதை வேறு ஒரு ட்ராக்கில் பயணித்து கலகலக்க வைக்கிறது. சந்தானத்துக்கு ஷ்ரித்தா ஷிவதாஸின் தந்தை ஒரு மோசடிக்கார மந்திரவாதி என்பது தெரிய வருவது, அதனை தொடர்ந்து கதையில் வரும் ஒரு நிஜ பேய், அந்த பேயை, கட்டுக்குள் கொண்டு வந்து ஷ்ரித்தா ஷிவதாஸை தனதாக்கிக் கொள்ள சந்தானம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்று கொஞ்சம் சீரியஸாகவும், ஜாலியாகவும் பயணிக்கும் கதை, ‘THE CONJURING’ ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸை போன்ற ஒரு கிளைமேக்ஸுடன் முடிந்து விடுகிறது!

ஷபீரின் பின்னணி இசை, தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவு, மாதவனின் படத்தொகுப்பு முதலான டெக்னிக்கல் விஷயங்கள் ஓகே ரகம்! முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவக பயணிப்பது, எல்லா பேய் படங்களிலும் இருப்பது மாதிரியான டெம்ப்ளேட் விஷயங்கள் ஆகிய மைனஸ் விஷயங்களை தவிர்த்து பார்த்தால் ‘தில்லுக்கு துட்டு-2’வை வரவேற்கலாம்!

நடிகர்களின் பங்களிப்பு

தான் திரையில் தோன்றினாலே உற்சாகமடைந்து விடும் ரசிகர் வட்டத்தினை வைத்து தொடந்து கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், இந்த முறையும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. நடிப்பு, நடனம், சண்டை, வசனம் என எல்லா ஏரியாக்களிலும் தூள் கிளப்பியுள்ளார்! கதாநாயகியாக வரும் அறிமுகம் ஷ்ரித்தா ஷிவதாஸ் நடிப்பில் புதுமுகமாக தெரியவில்லை. நடிக்க அதிக ஸ்கோப் இல்லாத கேரக்டர் என்றாலும் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து பாராட்டு பெறுகிறார். சந்தானத்தின் மாமாவாக வரும் மொட்டை ராஜேந்திரன், டாக்டராக வரும் சி.எம்.கார்த்திக், காலனி வாசியாக வரும் சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி புகழ் ராமர் மற்றும் கேரளா மந்திரவாதிகளாக வரும் பிபின், ஊர்வசி ஆகியோரும் படத்தின் கலகலப்புக்கு உதவி செய்யும் கேரக்டர்களில் சிறப்பாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.

பலம்

1.சந்தானம்

2.கதை

3.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி

2. சில டெம்ப்ளேட் விஷயங்கள்

மொத்தத்தில்…

முதல் பாக ‘தில்லுக்கு துட்டு’ படத்தை விட இந்த இரண்டாம் பாக ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் சொல்லப்பட்டுள்ள கதை, அது சார்ந்த காமெடி, காட்சிகள், சந்தனாத்தின் பங்களிப்பு ஆகியவை குறிப்பிடும்படியாக அமைந்திருப்பதால் இந்த படமும் சந்தானத்தின் வெற்றிப் பட வரிசையில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது!

ஒருவரி பஞ்ச் ; மீண்டும் ‘தில்லுக்கு துட்டு’ கிடைக்கும்!

ரேட்டிங் : 5/10

#DhillukuDhuddu2 #Santhanam #ShrithaSivadas #MottaRajendran #Urvashi #DhillukuDhuddu2MovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர்


;