நெடுநல்வாடை – விமர்சனம்

நெடுநல்வாடை – திருநெல்வேலி ஹல்வா!

விமர்சனம் 14-Mar-2019 1:18 PM IST Top 10 கருத்துக்கள்

Direction Selvakannan
Production B Star Productions
Cast Poo Ramu, Mime Gopi, Elvis Alexander, Anjali Nair, Ajay Natraj, Senthikumari,Aindhu Kovilan
Music Jose Franklin
Cinematography Vinoth Rathinasamy
Editor Kasi Viswanathan

அறிமுக இயக்குனர் செல்வகண்ணன் தன்னுடன் படித்த 50 நண்பர்களுடன் ஒன்றிணைந்து தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நெடுநல்வாடை’. அறிமுகங்கள் இளங்கோ, அஞ்சலி நாயர் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் ‘பூ’ ராமு, மைம் கோபி, செந்தி மற்றும் சில அறிமுக நடிகர்களும் நடித்துள்ள ‘நெடுநல்வாடை’யின் வாசம் எப்படி?

கதைக்களம்

ஏழை விவசாயி செல்லையாவின் (‘பூ’ ராமு) மகள் பேச்சியம்மா (செந்தி) தனது கணவனால் கைவிடப்பட்டு சின்னஞ்சிறுசுகளான மகன் (இளங்கோ), மற்றும் மகளுடன் தந்தையிடம் அடைக்கலம் தேடி வருகிறார். வாழாவெட்டியாய் வந்திருக்கும் சகோதரியால் தனது தந்தையின் சொத்தில் பங்கு கேட்பாளோ என்கிற ஆத்திரத்தில் அவரை அடித்து உடைத்து வீட்டை விட்டு துரத்த முயல்கிறார் அண்ணன் கொம்பையா (மைம் கோபி). செல்லையா, மகளும் தனது ரத்தம் தானே என்று மகனுடன் மோதி மகளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் ஆதரவு கொடுக்கிறார். செல்லையா தனது பேரன் இளங்கோவை நன்றாக படிக்க வைத்து ஆளாக்குகிறார். இளங்கோ நல்லதொரு வேலையில் சேர்ந்தால் அவன் அவனது அம்மாவையும், தங்கையையும் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் செல்லையா இருக்கும் நிலையில் இளங்கோ மீது அவரது பால்யகால தோழி அமுதாவுக்கு (அஞ்சலி) காதல் மலர, இளங்கோவும் அமுதாவை விரும்ப துவங்க, இதனால் பல பிரச்சனைகள் உருவாகி செல்லையாவின் கனவு சிதைந்து விடுகிறது! அதனை தொடர்ந்து என்னென்ன நடக்கிறது என்பதே ‘நெடுநல்வாடை’.

படம் பற்றிய அலசல்

திருநெல்வேலியில் உள்ள சிங்கிலிபட்டி எனும் எளிய கிராமத்தில் நடக்கும் ஒரு எளிய கதை! அதை நேசம், பாசம், கோபம் என தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் செல்வகண்ணன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேர்த்தியான நிறைவான ஒரு கிராமத்து குடும்ப கதையை பார்த்த நிறைவை தருகிறது இந்த ‘நெடுநல்வாடை’.

தாத்தா, பேரன் ஆகிய கேரக்டர்களை மையமாக வைத்து செல்வகண்ணன் அமைத்துள்ள இந்த திரைக்கதையில் தாத்தா பேரனுக்கு இடையிலான பாசம், குடும்பம் முன்னேற குடும்பத்தலைவன் படும் கஷ்டங்கள், அந்த கஷ்டங்கள் தீரும் நிலை வரும்போது ‘காதல்’ என்ற ஒரு விஷயத்தால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை படமாக்கியிருக்கும் விதத்தில் இயக்குனர் செல்வகண்ணன் ஒரு அறிமுக இயக்குனராக தெரியவில்லை. செல்லையாவாக வரும் ‘பூ’ ராமு, இளங்கோவாக வரும் இளங்கோ, அமுதாவாக வரும் அஞ்சலி நாயர் ஆகியோரது கதாபாத்திர வடிவமைப்பு, அவர்களை சிறப்பாக நடிக்க வைத்த பாங்கு செல்வகண்ணனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடம் காத்திருக்கிருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது. இளங்கோ, அமுதா கேரக்டர்களில் பரிச்சயமான முகங்களை நடிக்க வைத்திருந்தால், அந்த கேரக்டர்கள் நம் மனதில் இவ்வளவு ஆழமாக பதிந்திருக்க வாய்ப்பில்லை! திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் நடக்கும் கதை என்பதால் அனைத்து கேரக்டர்களையும் நெல்லை பாஷையில் அழகாக பேச வைத்துள்ள இயக்குனர் நெல்லை வாழ் மக்களின் கலாசாரங்களையும் அப்படியே பிரதிபலிக்க செய்து படம் பார்ப்பவர்களை அந்த ஏரியாவுக்கு அழைத்து சென்ற உணர்வை ஏற்படுத்துகிறார்

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்க்ம் ரத்தினசாமி அச்சு அசல் கிராமத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். பாடல்களில் கவனம் செலுத்தி பின்னணி இசையில் கோட்டை விடும் இசை அமைப்பாளர்களுக்கு மத்தியில் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கும் அறிமுக இசை அமைப்பாளரான ஜோஸ் ஃபிராங்க்ளின் இரண்டிலும் ஸ்கோர் செய்துள்ளார். அதற்கு கவிஞர் வைரமுத்துவின் வரிகளும் கை கொடுத்துள்ளது. ஒரு நல்ல சினிமாவில் படத்தொகுப்பாளர் இருக்கிற இடம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் இப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது மு.காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு! இவ்வளவு நிறைகள் இருக்கும் படத்தில் சில குறைகள் இல்லாமலும் இல்லை. முதல் பாதி கதையில் முக்கிய பங்கு வகிக்கும் அண்ணன் கொம்பையா கேரக்டர் இரண்டாம் பாதியில் என்னவாயிற்று என்ற கேள்வி எழுவது, அதைப்போல் கதைக்கு தேவையில்லாதது மாதிரி கிளைமேக்ஸில் வரும் அந்த கோவில் திருவிழா போன்ற விஷயங்கள் படத்திற்கு திருஷ்டியாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். இதுபோன்ற ஒரு சில குறைகள் படத்தில் இருந்தாலும் ‘நெடுநல்வாடை’யை பார்ப்பவர்களுக்கு திருநெல்வேலி ஹல்வா சாப்பிடுகிற ஒரு உணர்வை தரும் என்பது நிச்சயம்!

நடிகர்களின் பங்களிப்பு

தாத்தா செல்லையாவாக நடித்திருக்கும் ‘பூ’ ராமு, செல்லையா கேரக்டராகவே வாழ்ந்துள்ளார் என்று சொல்லும் அளவுக்கு அமைந்துள்ளது அவரது நடிப்பு! அதைப்போலதான் இளங்கோவாக வரும் இளங்கோவும் அமுதாகவாக வரும் அஞ்சலி நாயரும்! தாத்தாவின் அன்புக்கு கட்டுப்பட்டவராக, தன தாயையயும் தங்கையயும் காக்க வேண்டியவராக, தாத்தாவின் அறிவுரைக்கு கட்டுப்பட்டு காதலை தொடர முடியாமலும் காதலை விட மனமில்லாமலும் தவிக்கும் ஒரு இளைஞனாக இளங்கோ நடிப்பில் நம் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார். அமுதாவாக வரும் அஞ்சலி நாயரின் நடிப்பு கண்கள், சிரிப்பு, குறும்புத்தனங்கள் நம் ஆழ்மனது வரை ஊடுருவிகிறது. இவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு! அண்ணனாக வரும் மைம் கோபி, அவரது சகோதரியாக வரும் செந்தி, பூ ராமுவின் நண்பராக வரும் ஐந்து கோவிலான் மற்றும் படத்தில் நடித்திருக்கும் அத்தனை பெரும் நெல்லை மக்களின் வாழ்வியலை பிரதிபலித்து அழகாக நடித்திருக்கிறார்கள்.

பலம்

1.கதை, இயக்கம்

2.நடிகர்களை நடிக்க வைத்திருக்கும் விதம்

3.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. இடைவேளைக்கு பிறகு காணாமல் போகும் மைம் கோபி கேரக்டர்

2.தேவையில்லாத கோவில் திருவிழா காட்சி

மொத்தத்தில்..

செயற்கையான காமெடி காட்சிகள் பெண்களை கேலி செய்யும் அரைவேக்காடு காட்சிகள், டாஸ்மாக் குத்துப்பாட்டுகள் போன்றவை இல்லாமல் கண்ணியமான் ஒரு காதல், குடும்ப கதையாக உருவாகியுள்ள இந்த படம் நிஜ வாழ்வியல் கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற ஒரு படமாகும்!

ஒருவரி பஞ்ச் : நெடுநல்வாடை – திருநெல்வேலி ஹல்வா!

ரேட்டிங் : 5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை என்கிற மெட்ராஸ் - டிரைலர்


;