இந்த வார ரிலீஸ் களத்தில் ஏத்தனை படங்கள்?

இந்த வாரம் அக்னி தேவி, எம்பிரான், சாரல், மானசி, உச்சக்கட்டம், பைரவி கோட்டை, சேட்டக்காரங்க ஆகிய 7 படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 21-Mar-2019 3:29 PM IST Top 10 கருத்துக்கள்

‘சென்ற வாரம் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘ஜூலை காற்றில்’, ‘நெடுநல்வாடை’, ‘கிரிஷ்ணம்’, ‘கில்லி பம்பரம் கோலி’, ‘அகவன்’ ஆகிய 6 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின! அந்த வரிசையில் இந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள் குதிக்கின்றன? அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த கண்ணோட்டம் இதோ!

1.அக்னி தேவி

‘சென்னையில் ஒரு நாள்’ படத்தை இயக்கிய ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இருவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அக்னி தேவி’ பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த படத்திற்கு முதலில் ‘அக்னி தேவ்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த பெயர் மாற்றத்துக்கான காரணம் முதலில் இந்த படத்தின் கதை பாபி சிம்ஹா கேரக்டரை மையப்படுத்தி பயணிப்பது மாதிரி அமைக்கப்பட்டிருந்தது என்றும் பிறகு படக்குழுவினருக்கும் பாபி சிம்ஹாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பாபி சிம்ஹா இப்படத்திற்கு சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் கதையில் சில மாற்றங்களை செய்து படத்திற்கு ‘அக்னி தேவி’ என்று பெயர் மாற்றம் செய்தனர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். இந்த வார ரிலீஸில் பரவலாக எதிர்பார்க்கப்படும் படம் இது!

2.எம்பிரான்

இயக்குனர் மகிழ் திருமேனியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிருஷ்ணா பாண்டி இயக்கியுள்ள படம் ‘எம்பிரான்’. இந்த படத்தில் ரஜித் மேனன், ராதிகா ப்ரீத்தி கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் பி.சந்திரமௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன் ஆகியோரும் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பஞ்சவர்ணம் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் பி.பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ப்ரசன் பாலா இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை எம்.புகழேந்தி கவனித்துள்ளார். கலை இயக்கத்தை மாயவன் கவனித்துள்ளார்.

3.மானசி

அறிமுக இயக்குனர் நவாஸ் சுலைமான் இயக்கியுள்ள படம் ‘மானசி’. இந்த படத்தில் புதுமுங்கள நரேஷ் குமார், ஹரிஷா கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள். காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை பாஹின் முஹமத், மேத்யூ ஜோசஃப் இருவரும் இணைந்து தயாரிக்க ஷிவ்ராம் இசை அமைத்துள்ளார்.

4.சாரல்

‘ரெயின்போ மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் டிவி புகழ் அசார் கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீபிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார். ரோஸ் மணி என்பவர் இயக்கியுள்ள இந்த படமும் காதல கதையாக உருவாகியுள்ளது. அசார், ஸ்ரீபிரியங்கா ஆகியோருடன் இப்படத்தில் காதல் சுகுமார், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இஷான் தேவ் இசை அமைத்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட 4 படங்கள் தவிர, சுரேஷ் எழுதி இயக்கி, ‘யோகி’ பாபு முக்கிய கேரக்டரில் நடிக்கும் ‘பட்டிபுலம்’, சுனில் குமார் தேசாய் இயக்கத்தில் தாகூர் சிங், கபிர் துஹான் சிங், தன்ஷிகா, தன்யா ஹோப் ஆகியோர் நடிக்கும் தமிழ் மொழிமாற்று படமான ‘உச்சக்கட்டம்’, எம்.ஏ.சௌத்ரி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரவி கோட்டை’, திவ்யா மாணிக்கம் இயக்கத்தில் அறிமுகங்கள் நடிக்கும் ‘சேட்டக்காரங்க’ ஆகிய படங்களும் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிப் படங்களாக அமையும் என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்!

#AgniDevi #Embiran #Saaral #Maanasi #Uchakattam #BharaviKottai #Settaikaranga

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;