நயன்தாரா குறித்து ராதாரவியின் நாகரீகமற்ற பேச்சுக்கு நடிகர் சங்கம் கண்டனம்!

‘கொலையுதிர்காலம்’ பட விழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சுக்கு  நடிகர் சங்கம் கண்டனம்!

செய்திகள் 25-Mar-2019 1:46 PM IST VRC கருத்துக்கள்

நேற்றுமுன் தினம் (23-3-19) சென்னையில் நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது! இந்நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர்கள் கரு.பழனியப்பன், பிரவீன் காந்த், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த துரைராஜ் உட்பட பலர் கலந்துகொண்டார். அப்போது ராதாராவி நயன்தாரா குறித்து நாகரீகமற்ற முறையில் இரட்டை அர்த்தத்தில் பேசினார். அவர் பேசியதன் விவரம் வருமாறு…

‘‘நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறர். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை அழைப்பாரக்ள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிட தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிட தோன்றுபவர்களும் நடிக்கலாம்’’ என்று பேசினார். ராதாரவியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராதாரவியின் இந்த பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் விஷால், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பல சினிமா பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, நடிகர் ராதாரவி அங்கம் வகித்து வந்த அரசியல் கட்சியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்!

இந்நிலையில் ராதாரவியின் நாகரீகமற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது…

‘‘சமீபத்தில் நடந்த "கொலையுதிர் காலம்" திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய “இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது! இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது..! இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்! இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது! இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை?திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக் கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்! ஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை? எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்!அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று அதில் இடம்பெற்றுள்ளது!

#KolaiyuthirKaalam #Nayanthara #RathaRavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;