சினிமாவில் நடிகர் விக்ரமின் வெற்றிப் பயணம்!

இன்று விக்ரம் பிறந்த நாள்… அவர் பற்றிய ஒரு சிறிய கட்டுரை!

கட்டுரை 17-Apr-2019 6:20 PM IST Top 10 கருத்துக்கள்

இன்று (ஏப்ரல்-17) நடிகர் விக்ரம் பிறந்த நாள்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படங்கள் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகியவை! இந்த படங்களை தொடர்ந்து மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ என்ற படத்திலும் விக்ரம் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாகவும், அவர் கடந்து வந்த பாதையை நினைவு கூறும் விதமாகவும் ஒரு சிறிய கட்டுரையை இங்கு பதிவு செய்கிறோம். .

எந்த ஒரு சினிமா பினனணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து தனது காடின உழைப்பாலும், முயற்சியாலும் ஜெயித்தவர்களில் சீயான் விக்ரமும் ஒருவர். டி.ஜெ.ஜாய் இயக்கிய ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் விக்ரம்! இந்த படம் விக்ரமுக்கு பெயர் சொல்லும்படியான படமாக அமையவில்லை! இந்த படத்தை தொடர்ந்து பழம்பெரும் புகழ்பெற்ற இயக்குனரான ஸ்ரீதர் இயக்கத்தில் ‘தந்து விட்டேன் என்னை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்தார் விக்ரம். பெரிய நடிகர், நடிகைகளை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்ரீதர் இயக்கத்தில் நடித்ததன் மூலம் விக்ரம் தமிழ் சினிமாவில் பரவலாக அறியப்பட்டார்.

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானதை தொடர்ந்து விக்ரம் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் தமிழ் சினிமாவில் வலம் வர துவங்கினார். அஜித் கதாநாயகனாக நடித்து அறிமுகான ‘அமராவதி’ படத்தில் அஜித் கேரக்டருக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் விக்ரம் தான். இதனை தொடர்ந்து ‘புதிய முகம்’ படத்தில் வினீத் கேரக்டருக்கு, ‘பாசமலர்கள்’ படத்தில் மீண்டும் அஜித் கேரக்டருக்கு, ‘காதலன்’ படத்தில் பிரபுதேவா கேரக்டருக்கு, ‘காதல் தேசம்’ படத்தில் அப்பாஸ் ஏற்று நடித்த கேரக்டருக்கு மற்றும் ‘சத்யா’ படத்தில் நடித்த ஜே.டி.சக்ரவர்த்தி கேரக்டருக்கு, ‘காந்தி’ ஆங்கில படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி கேரக்டருக்கு என்று பல்வேறு திரைப்படங்களிக்ல் விக்ரமின் குரல் ஒலித்துள்ளது. அத்துடன் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு நடித்துள்ள விக்ரம், பாடகராகவும் தனது திறமையை நிருபித்துள்ளார். சினிமாவில் அறிமுகனான ஆர்மப காலத்தில் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார் விக்ரம். இதில் மம்முட்டி, கௌதமி இணைந்து நடித்த ‘துருவம்’ படம் விக்ரம் நடிப்பில் குறிப்பிடத்தக்க ஒரு படமாகும். இந்த படத்தை தொடர்ந்து மற்றும் சில மலையாள படங்களில் நடித்துள்ள விக்ரம், ஒரு சில தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் தயாரிப்பு நிறுவனமான ஏபிசி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக வெளியான ‘உல்லாசம்’ படத்தில் அஜித்துடன் இரண்டு கதாநாயகர்களுள் ஒருவராக நடித்த விக்ரமுக்கு, திருப்புமுனையாக அமைந்த படம் பாலா இயக்கிய ‘சேது’ தான். இந்த படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகி விக்ரமுக்கும், பாலாவுக்கும் பெரும் புகழை தேடி தந்தது. பாலா இயக்கிய முதல் படமான ‘சேது’ மூலம் பாலாவும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக அறியப்பட்டார்! இந்த படத்தை தொடர்ந்து விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடம் கிடைத்தது. இதனை தொடர்ந்து ‘காசி’ படத்தில் கண்பார்வை இல்லாதவராக நடித்து அனைவரையும் நெகிழ வைத்தார் விக்ரம். இந்த படத்தின் மூலம் ஒரு கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொண்டு நடிப்பதில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியான நடிகர் விக்ரம் என்று அனைவரையும் பேசவைத்தார்.

தில், தூள், சாமி, பிதாமகன் என்று பல்வேறு படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்த விக்ரமை புகழின் உச்சிக்கு செல்ல வைத்த படம் ஷங்கர் இயக்கத்தில் அவர் முதன் முதலாக நடித்த ‘அந்நியன்’ படமாகும். இந்த படத்தில் மாறுபட்ட மூன்று கெட்-அப்களில் தோன்றி அசத்திய விக்ரம், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராகி விட்டார். இந்த படத்தை தொடந்து அதே ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் ‘ஐ’. இந்த படத்திற்காக விக்ரம் தனது உடலை வருத்திக் கொண்டும், எடையை கூட்டியும் குறைத்துக்கொண்டும் மேற்கொண்ட முயற்சிகள் இந்திய சினிமா உலகத்திலுள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது என்று சொல்லும் அளவிற்கு விக்ரம் மேற்கொண்ட முயற்சிகளை பட்டியலிடலாம்.

ஒரு கேரக்டருக்காக தன் உடம்பை வருத்தி நடிப்பதில் கமல்ஹாசன் முதல் இடத்தில் இருந்து வந்தார். கமல்ஹாசனை தொடர்ந்து ஒரு கேர்கடருக்காக தன்னை வருத்திக்கொண்டும், உடம்பை ஏற்றியும், குறைத்தும் நடிப்பதில் கமல்ஹாசனையே விக்ரம் மிஞ்சிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவில் விக்ரமின் பங்களிப்பு இருந்து வருகிறது. இதற்கு மேலும் ஒரு உதாரணமாக விக்ரம் இப்போது கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் நடித்து வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தையும் குறிப்பிடலாம். இந்த படத்திலும் நாம் விக்ரமை மாறுபட்ட ஒரு கேரக்டரில், தோற்றத்தில் பார்க்கப் போகிறோம் என்பது இப்படத்தின் போஸ்டர்கள், மற்றும் டீஸர்கள் மூலம் தெரிய வருகிறது.

இப்படி மாறுபட்ட கேரக்டர்களிலும், மாறுபட்ட தோற்றங்களிலும் நடித்து வரும் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படமும் விக்ரம் நடிப்பில் மாபெரும் வெற்றிப் படமாகவும், அவருக்கு பெயர் சொல்லும் படமாகவும் அமைய வேண்டும் என்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச் சொல்வோம்!


#Vikram #KadaramKondan #DhruvaNatchathiram #GVM #Raavanan #Dhill #Dhool #HappyBirthdayVikram #HBDChiyaanVikram #Chiyaan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;