அயோக்யா - விமர்சனம்

கெட்ட போலீஸ், நல்ல போலீஸாக மாறும் கதை

விமர்சனம் 13-May-2019 7:07 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Venkat Mohan

Production: Light House Movie Makers

Cast: Vishal, Raashi Khanna, R. Parthiban, K. S. Ravikumar & Pooja Devariya

Music: Sam C. S.

Cinematography: V. I. Karthik

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்னா, பார்த்திபன் முதலானோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அயோக்யா’ எப்படி?

கதைக்களம்

சிறு வயதிலேயே அனாதையாகி பசி, பட்டிணி என்று மிகவும் கஷடங்களை அனுபவித்து வளர்ந்தவர் கர்ணன் (விஷால்). வாழ்க்கைக்கு பணம்தான் முக்கியம் என்று கருதும் கர்ணன் போலீஸாக இருந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற லட்சியத்துடன் குறுக்கு வழியில் போலீஸ் வேலையிலும் சேருகிறார். போலீஸ் வேலையில் சேர்ந்ததும் கிரிமினல்களுடன் கூட்டணி அமைத்து நிறைய பணத்தையும், நிறைய பேரின் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் கர்ணன். இப்படி கர்ணன் ‘அயோக்ய’ போலீஸ்காரராக வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில் கர்ணனின் வாழ்க்கையில் சிந்து (ராஷிகண்ணா) என்ற பெண் நுழைகிறார்! அதன் பிறகு ‘அயோக்யா’ போலீஸ்காரராக இருந்த கர்ணன் எப்படி நேர்மையான போலீஸ்காரராக மாறி மக்களின் நன்மதிப்பை பெறுகிறார் என்பதே ‘அயோக்யா’வின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

கிட்டத்தட்ட இதே கதைப் பின்னணியில் வேறு சில மொழிகளில் படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ள நிலையில், தமிழில் வெளியாகியுள்ள இந்த ‘அயோக்யா’வும் ரசிகர்களின் கவனம் பெறும் படமாக அமைந்துள்ளது. படத்தின் முதல் முக்கால் மணிநேரம் சொல்லும்படியாக எந்த சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் இல்லாமல் பயணிக்கிறது. அதன் பிறகு அன்பும் பாசமும் கிடைக்காமல் வளர்ந்த கர்ணனுக்கு ராஷிகண்ணாவின் அன்பும், பாசமும் கிடைக்க துவங்கியதும் கதை வேறு ஒரு பாதையில் பயணித்து ரசிக்க வைக்கிறது. அதன் பிறகு போதை மருந்து கடத்தல், பெண்களை கடத்தல் போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகளை ஒழித்துகட்டும் முயற்சியில் களம் இறங்கும் கர்ணன், அதற்காக மேற்கொள்ளும் போராட்டங்கள் அதன் இறுதியில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்காக கர்ணன் எடுக்கும் ஒரு முடிவு, அதனை தொடர்ந்து நடைபெறும் எதிர்பாரத கிளைமேக்ஸ் என்று ‘அயோக்யா’வை ரசிக்க வைக்கும் விதமாக இயக்கியுள்ளார் வெங்கட் மோகன். கதையின் விறுவிறுப்பான பயணத்திற்கு சாம்.சி.எஸ்.ஸின் இசை, கார்த்திக்கின் ஒளிப்பதிவு, ரூபனின் படத்தொகுப்பு ஆகிய டெக்னிக்கல் விஷயங்கள் பக்க பலமாக அமைந்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

எதற்கும் பயப்படாத ஒரு போலீஸ் அதிகாரியின் கேரக்டரை விஷால் நன்றாக உள்வாங்கி சிறப்பாக செய்துள்ளார். நடை, உடை, பாவனை, அதிரடி ஆக்‌ஷன் என்று எல்லாவற்றிலும் வித்தியாசத்தை காட்டி நடித்துள்ளார் விஷால்! அன்பு, பாசம் ஆகியவற்றுக்கு சொந்தகாரராக வந்து விஷாலை மாற்றும் கேரக்டரில் நடித்துள்ள ராஷிகண்ணா மற்றும் விஷால் செய்யும் ‘அயோக்ய’த்தன செயல்களை கண்டிக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் சிறந்த நடிப்பை வழங்கி நம் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். காளிராஜன் என்ற வில்லனாக வரும் பார்த்திபன், தனக்கே உரிய மாறுபட்ட தோற்றத்திலும், நடிப்பிலும் மிரட்டியுள்ளார். யோகி பாபு, ஆனந்தராஜ், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ஆடுகளம் நரேன், சோனியா அகர்வால், வேலா ராமமூர்த்தி, பூஜா தேவரியா, தேவதர்ஷினி என்று படத்தில் ஏகப்பட்ட பேர் சிறிய சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். எல்லோரும் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கி உள்ளனர்.

பலம்

1.விஷால்

2.கிளைமேக்ஸ்

3.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. சுவாரஸ்யம் இல்லாமல் பயணிக்கும் முதல் முக்கால் மணி நேர காட்சிகள்!

2.காமெடி போன்ற பொழுதுபோக்கு விஷயங்கள் இல்லாதது

மொத்தத்தில்…

தமிழ் சினிமாவை பொறுத்தவரியில் காதல் கதைகளைப் போலவே போலீஸ் கதைகளும் சலிக்காத ஒரு விஷயம்! அந்த வரிசையில், விஷால் மீண்டும் போலீஸ் வேடமேற்று நடித்துள்ள இந்த ‘அயோக்யா’வும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமையும் என்று சொல்லலாம்!

ஒருவரி பஞ்ச் : கெட்ட போலீஸ், நல்ல போலீஸாக மாறும் கதை!

ரேட்டிங் : 5.5/10


#AyogyaMovieReview #Ayogya #Vishal #RaashiKhanna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;