இந்த வார ரிலீஸில் முக்கியமான படம் சூர்யாவின் ‘NGK’

இந்த வாரம் சூர்யாவின்  ‘NGK’  பிரபுதேவா, நடிக்கும் ‘தேவி-2’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீசாகிறது!

செய்திகள் 31-May-2019 11:34 AM IST Top 10 கருத்துக்கள்

சென்ற வாரம் ‘நீயா-2’, ‘லிசா’, ‘ஓவியாவ விட்டா யாரு’ (சீனி), ‘ வண்ணக்கிளி பாரதி’ (வகிபா), ‘ஔடதம்’ ஆகிய 5 நேரடித்தமிழ் படங்கள் வெள்ளித்திரைக்கு வந்தன. அந்த வரிசையில் இந்த வாரம் வெளியாகும் நேரடித் தமிழ் படங்கள் பற்றிய கண்ணோட்டம் இதோ…1. நந்த கோபாலன் குமரன் (NGK)

இயக்குனர் செல்வராகவனும், சூர்யாவும் முதன் முதலாக இணைந்துள்ள படம் ‘NGK’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் ரகுல்ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இவர்களுடன் பொன்வண்ணன், இளவரசு, உமா பத்மநாபன், தலைவாசல் விஜய், வேலா ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும் அப்போது தான் நாடு புதிய பாதையில் முன்னேற்றம் அடையும் என்ற கருத்தை மையமாக வைத்து இப்படம் பொலிடிக்கல் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. சூர்யா ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம், சூர்யா நடித்து இதுவரை வெளியான படங்களிலேயே அதிக கவனத்தை பெற்றுள்ளது. அதனாலேயே இப்படம் உலகம் முழுக்க நாளை அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் செல்வராகவன், சூர்யாவுடன் இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளராக சிவகுமார் விஜயன், படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல். என்று பெரும் டெக்னீஷியன்களும் கை கோர்த்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர், பாடல்கள் ஆகியவற்றை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரலாகியுள்ள நிலையில் நாளை உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாக இருக்கிறது சூர்யாவின் ‘NGK’.

2. தேவி-2

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் 2016-ல் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘தேவி’. இந்த படத்தில் இணைந்த ஏ.எல்.விஜய், பிரபு தேவா, தமன்னா ஆகியோர் மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘தேவி-2’. முதல் பாகத்தில் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது. இந்த படத்தில் பிரபு தேவா, தமன்னாவுடன் நந்திதா ஸ்வேதா, நாசர், கோவை சரளா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார். ‘தேவி’ முதல் பாகம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில் ‘தேவி-2’ மீதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட ‘NGK’, ‘தேவி-2’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இந்த வார ரிலீசாக களத்தில் உள்ளன!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;