‘மான்ஸ்டர்’ வரிசையில் வெளியாக இருக்கும் விலங்குகள் படம்!

‘மான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து வெளியாக இருக்கும் விலங்குகள் இடம் பெற்ற படங்கள்….

கட்டுரை 5-Jun-2019 4:11 PM IST VRC கருத்துக்கள்

சமீபகாலத்தில் உருவாக்கப்பட்ட சில புதிய சட்டத்திட்டங்கள் காரணமாக விலங்குகளை வைத்து திரைப்படங்கள் எடுப்பதில் திரையுலகினர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது. விலங்குகளை வைத்து படம் எடுக்க வேண்டுமானாள் முதலில் மத்திய அரசாங்கத்திடம் பல்வேறு அனுமதிகளை பெற வேண்டும். ஒரு படத்தில் எந்தவொரு விலங்கு இடம் பெறுவதாக இருந்தாலும் அதற்கு முதலில் விலங்கு நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அந்த அனுமதி பெற்ற பிறகு குறிப்பிட்ட விலங்கை வைத்து படப்பிடிப்பு நடத்தும்போது அந்த விலங்கை கண்காணிக்க மருத்துவர், அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த அமைப்பினரிடமிருந்து ‘இந்த படத்தின் படப்பிடிப்பில் விலங்குகள் துன்புறத்தப்படவில்லை’ என்ற நற்சான்றிதழ் பெற வேண்டும். அதன் பிறகே அந்த படத்தை சென்சாருக்கு கொண்டு சென்று சென்சார் குழுவினரிடமிருந்து சர்டிஃபிக்கெட் பெற முடியும், படத்தை ரிலீஸ் செய்ய முடியும்.

இதுபோன்ற சட்ட சிக்கல்கள் ஒரு பக்கம் இருந்து வந்தாலும் விலங்குகளை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வரிசையில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘மான்ஸ்டர்’. ‘மாயா’, ‘மாநகரம்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக வெளியான இப்படத்தில் ஒரு எலி இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் கதையின் நாயகனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவை அந்த எலி படுத்தும்பாட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்கும் விதமாக அழகாக படமாக்கியிருந்தார் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இத்தனைக்கும் இந்த படத்தில் கிராஃபிக்ஸை நம்பாமல் நிஜ எலியை வைத்தே காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க. இதற்கு முன் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘வாட்ச்மேன்’ படத்தில் ஒரு நாய் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருந்தது. அதைப் போல சமீபத்தில் வெளியான ‘நீயா-2’ படத்தில் பாம்பு ஒன்று இடம் பெற்றிருந்தது.

மேற்குறிப்பிட்ட படங்களை தொடர்ந்து விலங்குகளை வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றது. அதில் ஒரு படம் ‘கொரில்லா’. டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தாய்லாந்த் நாட்டை சேர்ந்த ஒரு சிம்பன்சி குரங்கு முக்கிய கதாபாத்திரமாக இடம் பெறுகிறது. இந்த படம் தவிர ‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜுமுருகன் இயக்க, ஜீவா நடிக்கும் மற்றொரு படமான ‘ஜிப்ஸி’யில் ஒரு குதிரை இடம் பெறுகிரது. அந்த குதிரை ஜீவா கேரக்டருடன் படம் முழுக்க பயணிப்பது மாதிரி ‘ஜிபிஸி’யின் கதைக்களம் அமைந்துள்ளது. அதைப் போல ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தில் ஒரு ஒட்டகம் இடம்பெறுகிறது. அதைப்போல ‘யோகி’ பாபு, கருணாகரன் இணைந்து நடிக்க, ‘கிருமி’ படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இயக்கும் ‘பன்னிக்குட்டி’ படத்தில் ஒரு அழகான பன்னிக்குட்டி முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. அதைப் போல விரைவில் வெளியாக இருக்கும் ‘தும்பா’ படத்தில் குரங்கு, புலி, பறவை, யானை, அனில் என்று பல்வேறு வன விலங்குகள் இடம்பெறுகிறது என்பது இப்படத்தின் டீஸரை பாரக்கும்போதே உணர முடிகிறது. இந்த வரிசையில் அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கத்தில், ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராஜபீமா’ படத்திலும், பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா ஆகியோர் நடிக்கும் ‘காடன்’ படத்திலும் யானைகள் இடம் பெறுகிறது. அத்துடன் அறிமுக இயக்குனர் ரஜனி இயக்கத்தில் மாஸ்டர் ஆதித்யா முக்கிய கேரக்டரில் நடிக்கும் ‘ராதாகிருஷ்ணா’ படத்திலும் யானை, புலி என்று பல வன விலங்குகள் இடம் பெறுகிறது.

மேற்குறிப்பிட்ட படங்களுடன் விலங்குகளை வைத்து மேலும் பல படங்கள் எடுக்கப்பட்டு வரலாம். எது எப்படியோ தமிழ் சினிமாவில் சமீபத்தில் உருவாகிய ‘பேய் பட’ சீஸனை போன்று இப்போது தமிழில் சினிமாவில் விலங்குகள் சீஸன் ஆரம்பமாகி உள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டபக்குனு பாடல் வீடியோ - மான்ஸ்டர்


;