கொலைகாரன் - விமர்சனம்

கொலைகாரன் - விமர்சனம்

விமர்சனம் 7-Jun-2019 6:31 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Andrew Louis
Production: Diya movies
Cast: Arjun Sarja, Nassar, Vijay Antony, Ashima Narwal & Seetha
Music: Simon K. King
Cinematography: Mukesh
Editor: Richard Kevin
தொடர்ந்து படங்கள் கைகொடுக்காத நிலையில், அர்ஜுனுடன் தான் இணைந்து நடித்திருக்கும் ‘கொலைகாரன்’ படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறார் ‘ஹீரோ’ விஜய் ஆண்டனி. அவரின் நம்பிக்கைக்கு பலன் கிடைத்திருக்கிறதா?

கதைக்களம்

படத்தின் முதல் காட்சியிலேயே அர்ஜுன் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஸ்டேஷனில் சரணடைகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி என்ன குற்றம் செய்தார்? எதற்காக சரணடைந்தார்? அந்த கேஸை அர்ஜுன் எப்படி டீல் செய்கிறார் என்பதே ‘கொலைகாரன்’.

படம் பற்றிய அலசல்

‘தி டிவோஸன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’ எனும் ஜப்பானிய நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் ‘தி சஸ்பெக்ட் எக்ஸ்’. இந்தப்படத்தின் அடிப்படையான ஒரு விஷயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் ‘திருஷ்யம்’ மலையாளப்படமும், ‘பாபநாசம்’ தமிழ்ப்படமும். கிட்டத்தட்ட இதே ஸ்டைல் திரைக்கதையில் சிற்சில புதிய விஷயங்களைச் சேர்த்து அதனை ‘கொலைகாரன்’ படமாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். ஒரு கொலை, அதைச் செய்தது யார்?, எதற்காக செய்தார்கள்? அதனை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்பது எத்தனை பரபரப்பான விஷயம். ஆனால், இப்படம் மெதுவாகவே நகர்கிறது. காரணம், படத்தின் பெரும்பாலான காட்சிகளை உரையாடல் மூலம் நகர்த்திருக்கிறார்கள். அதோடு, முதல்பாதியில் தேவையே இல்லாத இரண்டு பாடல்களை வேறு சேர்த்திருக்கிறார்கள். அதனால், சின்னச் சின்ன ட்விஸ்ட்களின் போது மட்டுமே படம் விறுவிறுப்பிற்கு செல்கிறது. ஆனாலும், காட்சிகளை பரபரப்பாக்குவதில் முக்கியப்பங்கு வகித்திருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே. கிங். பின்னணி இசையில் ஆங்காங்கே ‘ராட்சசன்’ படத்தின் உணர்வு தோன்றி மறைந்தாலும், படத்தின் பிஜிஎம் முக்கிய தூணாக பங்காற்றியிருப்பதை மறுக்க முடியாது. படத்தில் பிரச்சனைகள் இருந்தபோதிலும்... விஜய் ஆண்டனி, அர்ஜுன் என்ற இரட்டைக் கூட்டணி, இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், சிற்சில எதிர்பாராத ட்விஸ்ட்கள், அதிரடிக்கும் பிஜிஎம் என்பன போன்ற விஷயங்களால் ‘கொலைகாரன்’ சுவாரஸ்யமாகவே பயணிக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும், அதில் ஒரேவிதமான, அதாவது அமைதியான சோகமான முகபாவனையுடனே விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்ற கருத்துக்கள் சொல்லப்பட்டு வந்தாலும், இப்படத்தின் கேரக்டரைப் பொறுத்தவரை அதுவே ப்ளஸாக அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மிஸ்ட்ரியான கேரக்டரில் நன்றாகவே நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இன்வெஸ்டிகேஸன் போலீஸ் ஆபீஸராக வரும் அர்ஜுனின் அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறது. ஏற்கெனவே பல படங்களில் அர்ஜுனை போலீஸாகப் பார்த்திருந்தாலும் இப்படத்திலும் அசத்தியிருக்கிறார் அர்ஜுன். ‘மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா’வான ஆஸிமா நர்வாலுக்கு தமிழில் இது அறிமுகப்படம். அறிமுக நாயகி என்பதையும் தாண்டி படத்தின் கதையோடு பயணிக்கக்கூடிய கேரக்டர் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அவரும் அதனை ஓரளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார். இவரின் அம்மாவாக சீதா நிறைவான பங்களிப்பை செய்திருக்கிறார்.

பலம்

1. அர்ஜுனின் கேரக்டரும், அவரின் நடிப்பும்
2. சிற்சில எதிர்பாராத திருப்பங்கள்
3. பின்னணி இசை

பலவீனம்

1. ‘திருஷ்யம்’ படத்தை ஞாபகப்படுத்தும் திரைக்கதை அமைப்பு
2. தேவையில்லாத இரண்டு பாடல்கள்.

மொத்தத்தில்...

‘இருக்கை நுனி த்ரில்லருக்கான’ ஸ்கோப் இருந்தும் அதனை ஆசுவாசமாக அமர்ந்து பார்க்கும்படியான ஒரு படமாக தந்திருக்கிறது ‘கொலைகாரன்’ டீம். பாடல்களை வெட்டி எறிந்துவிட்டு, ஸ்கிரீன் ப்ளேவை இன்னும் பறக்கவிட்டிருந்தால் ‘கொலைகாரன்’ நமக்கு இன்னும்கூட பரபரப்பான அனுபவத்தைத் தந்திருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : ஸ்லோ பாய்சன்!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் - ட்ரைலர்


;