தும்பா – விமர்சனம்

தும்பா – குழந்தைகளை குதூகலிக்க வைக்கும்!

விமர்சனம் 21-Jun-2019 5:26 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Harish Ram L H
Production: Regal Reels
Cast: Darshan, Keerthi Pandian, KPY Dheena, KPY Bala & Jayam Ravi
Music: Anirudh Ravichander, Vivek-Mervin & Santhosh Dhayanidhi
Cinematography: Naren Elan
Editor: R Kalaivanan

அறிமுக இயக்குனர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், தீனா, அறிமுகம் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தும்பா’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

தமிழ்நாடு வனப் பகுதியான டாப் ஸ்லிப் பகுதிக்கு பெயிண்டிங் வேலையாக வருகிறார்கள் தர்ஷனும், தீனாவும்! அதே நேரம் வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபியில் ஆரம்வம் கொண்ட கீர்த்தி பாண்டியனும் அந்த காட்டுப் பகுதிக்கு புலியை படம் பிடிக்க வருகிறார்! ஒரு பக்கம் கேரளா காட்டுப் பகுதியில் இருந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு வந்த ஒரு புலியை தேடி வருகிறார்கள் கேரளா மற்றும் தமிழ்நாடு வனம் மற்றும் விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள்! ஒரு கட்டத்தில் தர்ஷனும், தீனாவும், கீர்த்தி பாண்டியனும் நண்பர்களாகின்றனர். புலியை படம் பிடிக்க வந்த கீர்த்தி பாண்டியனுக்கு தர்ஷனும், தீனாவும் உதவிகள் புரிந்து வரும் நிலையில் தமிழ்நாடு காட்டு இலாகா அதிகாரியால் இவர்களுக்கு சில பிரச்சனைகள் எற்படுகிறது. அதனை தொடர்ந்து கேரளாவிலிருந்து வந்த புலியை பிடிக்க தமிழ்நாடு காட்டு இலாகா அதிகாரி தலைமையில் செயல்படும் குழுவினரால் இவர்கள் மூவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது! அது எதனால்? கீர்த்தி பாண்டியன் புலியை படம் பிடித்தாரா? கேரளாவிலிருந்து தமிழ்நாடு காட்டுப் பகுதிக்கு வந்த புலி என்ன ஆனது? இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகளே ‘தும்பா’.

படம் பற்றிய அலசல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்கும் விதமாக ஒரு ஃபேண்டசி படத்தை தரவேண்டும் என்று முயற்சி செய்துள்ளார் இப்படத்தை இயக்கியிருக்கும் ஹரீஷ் ராம். ஆனால் சொல்ல வந்த கதையில் வலுவும் நம்பகத்தன்மையும் இல்லை! டாப் ஸ்லிப் பகுதியிலுள்ள ஒரு புலி சிலைக்கு பெயிண்ட் அடிக்க வரும் தர்ஷன், தீனா சம்பந்தப்பட்ட காட்சிகள் எந்த இலக்கும் இல்லாமல் இடைவேளை வரை படு ஸ்லோவாக பயணித்து நம்மை சோர்வடைய வைக்கிறது. அதற்கு பிறகு தமிழ்நாடு வனப் பகுதிக்கு வந்த புலியை தேடுவதிலிருந்து படம் கொஞ்சம் சூடு பிடிக்கிறது. சட்டத்துக்கு புறம்பாக அந்த புலியை பிடித்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் கும்பல் பற்றிய விஷயங்களை மேலும் விறுவிறுப்பான திரைக்கதையாக்கி இயக்கியிருந்தால் ‘தும்பா’ கவனம் பெறும் படமாக அமைந்திருக்கும்.

காட்டுப் பின்னணியில் நடக்கும் கதையாக பயணிக்கும் இப்படத்தில் இடம் பெறும் குரங்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகளை கவரும் விதமாக படமாக்கிய இயக்குனர் ஹரீஷ் ராம், புலி, யானை, குரங்கு போன்ற விலங்குகளை கிராஃபிக்ஸில் உருவாக்கிய விதத்தில் சரியாக கவனம் செலுத்தவில்லை! காடு, அதில் இருக்கும் வனவிலங்குகளை காப்பதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் வரும் காட்டு பகுதிகள், அந்த பகுதிகளை ஒளிப்பதிவாளர் நரேன் இளன் அழகாக படம் பிடித்த விதம் அருமை! அதைப் போல அனிருத், விவேக், மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோரின் இசையும் கவனம் பெறும்படி அமைந்துள்ளது! டாப் ஸ்லிப் காட்டுப் பகுதியின் பாதுகாவலராக கெஸ்ட் ரோலில் வந்து ஒரு நடனம் ஆடும் ‘ஜெயம்’ ரவி கேரக்டர் எதற்கு என்ற கேள்வியும் எழாமல் இல்லை!

நடிகர்களின் பங்களிப்பு

‘கனா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற தர்ஷன் இப்படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்! இவரது நண்பராக வந்து காமெடி செய்ய முயற்சித்திருக்கும் தீனாவின் காமெடி வசனங்கள் சிரிப்பை வரவழைக்கவில்லை! வைல்ட் லைஃப் போட்டோகிராஃபியில் ஆர்வம் கொண்டவராக வரும் கீர்த்தி பாண்டியனுக்கு இது முதல் படம்! நடிப்பை பொறுத்தவரையில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிரார். மற்றும் படத்தில் நடித்திருக்கும் ரவி ராகவேந்தர், தரணி வாசுதேவ், பாலா, ஜார்ஜ், கலையரசன் ஆகியோரும் தங்களது கேரக்டர்களின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1. காடு, வனவிலங்குகளை காப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் கதை

2. ஒளிப்பதிவு, இசை

3.ஓரளவுக்கு விறுவிறுப்பாக பயணிக்கும் இரண்டாம் பகுதி

பலவீனம்

1.ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி

2. திரைக்கதை அமைப்பு

3. கிராஃபிக்ஸ் காட்சிகள்

மொத்தத்தில்…

மாறுபட்ட வகையில் ஒரு ஃபேண்டசி படத்தை தரவேண்டும் என்று முயற்சித்த இயக்குனர் ஹரீஷ் ராம், திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்து, கிராஃபிக்ஸ் காட்சிகளிலும் மேலும் கவனம் செலுத்தி இருந்தால் ‘தும்பா’ அனைவரையும் கவரும் படமாக அமைந்திருக்கும்!]

ஒருவரி பஞ்ச் : தும்பா – குழந்தைகளை குதூகலிக்க வைக்கும்!

ரேட்டிங் ; 4.5/10

#Thumbaa #Darshan #KeerthiPandian #Dheena #JayamRavi #HarishRam #Anirudh #VivekMervin #SanthoshDhayanidhi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;