ஹவுஸ் ஓனர் – விமர்சனம்

மழை வெள்ளப் பின்னணியில் நடக்கும் காதல் பாசப்போராட்ட கதை!

விமர்சனம் 28-Jun-2019 12:07 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Lakshmy Ramakrishnan
Production: Monkey Creative Labs
Cast : Kishore, Sriranjini, Kishore DS, Lovelyn
Music : Mohamaad Ghibran
Cinematography: Krishna Sekhar TS
Editor : CS Prem Kumar

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’. ‘ஆடுகளம்’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி, ’பசங்க’ கிஷோர், அறிமுகம் லவ்லின் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள ‘ஹவுஸ் ஓனர்’ எப்படி?

கதைக்களம்

கடந்த 2015, டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை மற்றும் பெரும் வெள்ளம் ஏற்பட்ட காலகட்டத்தில் ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்களை போன்று இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ‘ஆடுகளம்’ கிஷோர். அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி! சில சமயங்களில் கட்டிய மனைவியை கூட யார் என்று தெரியாத அளவுக்கு மறதி (அல்சைமர்) நோயால் பாதிக்கப்பட்டவர் கிஷோர்! அவரை வெளியில் போகாத படியும், அவர் வீட்டில் செய்யும் பிடிவாத சேட்டைகளையும் பொறுத்துக்கொண்டு அவரை கவனிப்பதே ஸ்ரீரஞ்சனிக்கு முக்கிய வேலையாக இருக்கிறது. இப்படி இருவரும் தங்களது சொந்த வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில் கனமழையால் அவர்கள் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிட, அவர்கள் அந்த வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளும் போராட்டங்களே ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் கதை!

படம் பற்றிய அலசல்

வீட்டிற்குள் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் அந்த வீட்டில் இருக்கும் ஒரு கணவன் மனைவியின் வாழ்க்கையில் நிஜத்தில் நடக்கக் கூடிய சில சம்பவங்களை ஒரு திரைக்கதையாக்கி அதில் காதல், பாசம், எமோஷன் என்று அனைத்து விஷயங்களையும் கலந்து சிறப்பாக இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். கதை முக்கால் வாசியும் ஒரு வீட்டிற்குள்ளேயே நடப்பது மாதிரி அமைந்திருப்பதால் கொஞ்சம் போரடிக்கிற உணர்வை தந்தாலும், ஞாபக மறதியால் அவதிப்படும் கிஷோர், அவரை அன்பாக கவனித்து கொள்ளும் ஸ்ரீரஞ்சனி ஆகிய கேரக்டர்கள், இவர்களது ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் ‘பசங்க’ கிஷோர், லவ்லின் சமப்ந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யமாக அமைந்திருப்பதால் அந்த வீட்டிற்குள் நாமும் வாழ்வது போன்ற ஒரு உணர்வை தருகிறது படம்!

படம் முழுக்க வரும் மழை, அதற்கேற்ற விதமாக ஜிப்ரான் அமைத்துள்ள பின்னணி இசை ஆகியவை நம்மை அந்த மழைக்குள் கொண்டு சென்று ரசிக்க வைப்பது மாதிரி அமைந்துள்ளது. கிளைமேக்ஸில் வீட்டில் புகுந்த வெள்ளத்திலிருந்து தனது கணவரை காப்பாற்ற ஸ்ரீரஞ்சனி மேற்கொள்ளும் போராட்டங்கள், வெள்ளம் புகுந்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கிஷோர் அவஸ்தைபப்டும் காட்சிகள் நம் மனதை பதற வைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ள விதத்தில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் திறமை வெளிப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளப் பின்னணியில் கிருஷ்ண சேகர் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை! பிரேம் குமார் காட்சிகளை தொகுத்து வழங்கிய விதமும் அருமை! ‘பாலக்காடு’ வட்டார தமிழ் மொழியில் ஸ்ரீரஞ்சனி கேரக்டருக்கு சிறப்பான முறையில் குரல் கொடுத்திருக்கும் லட்சுமி ராமகிருஷணனே இப்படத்தின் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளார் என்பதும் இந்த விஷயங்களிலும் லட்சுமி ராமகிருஷ்ணன் கவனம் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர்களின் பங்களிப்பு!

‘ஆடுகளம் கிஷோர், இவரது மனைவியாக வரும் ஸ்ரீரஞ்சனி இருவரும் தங்களது சிறந்த நடிப்பின் மூலம் அந்த கேரக்டர்களை நிறைவு செய்துள்ளனர். நினைவுகளை மறந்து போன கிஷோர் எப்போதாவது தன் மனைவியின் நினைவு வந்து அந்த சந்தோஷத்தில் மனைவியை தொட, அந்த பரவசத்தில் ஸ்ரீரஞ்சனி மூழ்கி இருக்கும்போது, கிஷோருக்கு திடீரென்று நினைவு கலைந்து, அடியே நீ யாரு?’ என்று மனைவியை தள்ளி விடுவது, ஒரு கட்டத்தில் அருகில் படுத்து கிடக்கும் மனைவியை ‘நீ யாரு..? என்னருகே படுத்துக் கிடக்க?’ என்று கேட்டு அவரை எட்டி உதைப்பது என்று படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்க கூடிய நிறைய காட்சிகள்.. அதில் இருவரது நடிப்பு குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. சிறுவயது கேரக்டர்களில் வரும் ‘பசங்க’ கிஷோர், லவ்லின் ஆகியோரையும் சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். பாலாக்காடு பின்னணியில் வரும் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை கவிதை நயத்துடன் படமாக்கப்பட்டுள்ள விதமும் அருமை!

பலம்

1. திரைக்கதை

2. இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு

3. நடிகர்களின் பங்களிப்பு

பலவீனம்

படத்தின் பெரும்பாலான காட்சிகளும் ஒரே வீட்டிற்குள் நடப்பதால் ஏற்படும் சிறு தொய்வு தவிர படத்தில் குறிப்பிடும்படியாக எந்த குறையும் இல்லை!

மொத்தத்தில்…

சென்னை மழைவெள்ள பாதிப்பு, காதல், கண்வன் மனைவிக்குள் இருக்கும் அன்பு, பாசம் ஆகியவற்றை மையமாக வைத்து டுக்கப்பட்டுள்ள இப்படம் அனைவருக்கும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது!

ஒருவரி பஞ்ச் : மழை வெள்ளப் பின்னணியில் நடக்கும் காதல் பாசப்போராட்ட கதை!

ரேட்டிங் :5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;