ஜீவி - விமர்சனம்

‘ஜீவ’னுள்ள மாறுபட்ட படைப்பு!

விமர்சனம் 28-Jun-2019 3:18 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : V.J Gopinath
Production: Vetrivel Saravana Cinemas
Cast : Vetri, Karunakaran, Rohini, Mime Gopi
Cinematography: Praveen Kumar
Music : K S Sundaramurthy
Editor : Praveen K.L


அறிமுக இயக்குனர் வி.ஜெ.கோபிநாத் இயத்தில் ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் கவனம் பெற்ற வெற்றி கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள ‘ஜீவி’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

ஊரிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு கடையில் ஜூஸ் மாஸ்டராக வேலை செய்கிறார் கதாநாயகன் வெற்றி! அதே கடையில் டீ மாஸ்டராக வேலை செய்பவர் கருணாகரன். இருவரும் ஒரே அறையில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் வெற்றிக்கு மோனிகா என்ற பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில், ‘பணம் இருந்தால்தான் எல்லாம்..,’ என்று மோனிகா, வெற்றியை உணர்த்த, குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்க, கருணாகரன் உதவியுடன் தங்களது ஹவுஸ் ஓனர் (ரோகிணி) வீட்டிலேயே நகைகளை திருடுகிறார் வெற்றி. ரோகிணியின் கண்பார்வை இல்லாத மகள் (அஸ்வினி சந்திரசேகர்) திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் அது! நகை திருடியவர்களை கணடு பிடிக்க போலீஸ் வருகிறது! போலீஸிடமிருந்து தப்பிக்க வெற்றியும், கருணாகரனும் சாமர்த்தியமாக சில விஷயங்களை கையாள, அந்த விஷயங்கள் கதையில் சில திருப்பங்களை ஏற்படுத்துகிறது! அந்த திருப்பங்கள் என்ன என்பதுதான் ‘ஜீவி’யின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

தமிழ் சினிமாவில் வழக்கமாக வந்துகொண்டிருக்கும் காதல், அடிதடி மசாலா படங்களுக்கு மத்தியில் எப்போதாவது ஒரு படம் நல்ல திரைக்கதை அமைப்புடன் வரும். அப்படி, பாபு தமிழ் எழுத்தில் உருவாகியுள்ள ஒரு திரைக்கதைதான் ‘ஜீவி’. தொடர்பியல் மற்றும் நாம் ஒரு பொருளை அடைய என்னதான் கடுமையாக உழைத்தாலும் அந்த பொருள் யாரிடம் போய் சேர வேண்டுமோ அங்குதான் போய் சேரும்’ என்ற விஷயத்தை வைத்து பாபு தமிழ் எழுதிய இந்த கதையை, இயக்குனர் வி.ஜே.கோபிநாத் ரசிகர்களுக்கு எளிதாக புரியும்படியும், ரசிக்கும்படியும் சிறப்பாக படமாக்கவும் செய்துள்ளார். தொடர்பியல் ரீதியாக இரண்டு குடும்பங்களில் நடக்கும் ஒரே சம்பவங்கள், அது சம்பந்தப்பட்டு வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள், வாழ்க்கையின் யதார்த்த விஷயங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள நல்ல வசனங்கள், மாறுபட்ட கிளைமேக்ஸ் என்று ரசிக்க வைக்கிறது ‘ஜீவி’. 114 நிமிடங்களே ஓடும் படம் என்றாலும் படத்தில் சொல்லும்படியான பொழுது போக்கு விஷயங்கள் இல்லாததால் படம் கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தருவது, சில லாஜிக் மீறல்கள் ஆகியவை படத்தில் மைனஸாக அமைந்துள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சுந்தரமூர்த்தியின் இசை, பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு ஆகிய டெக்னிக்கல் விஷயங்களும் ‘ஜீவி’க்கு பலம் சேர்த்திருப்பதால் ‘ஜீவி’ வரவேற்கப்பட வேண்டிய ஒரு படமாக அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

‘8 தோட்டாக்கள்’ படத்தை தொடர்ந்து வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது படம் இது. வெற்றியின் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது! கதையில் இரண்டாவது கதாநாயகனை போன்ற வேடம் கருணாகரனுக்கு! காமெடி, குணச்சித்திர நடிப்பில் வழக்கம் போல தனது சிறந்த பங்களிப்பை செய்துள்ளார் கருணாகரன். கதாநாயகிகளாக வரும் மோனிகா, அஷ்வினி சந்திரசேகர் ஆகியோருக்கு சொல்லும்படியாக கேரக்டர்கள் அமையவில்லை. இருந்தாலும் இருவரும் நடிப்பை பொறுத்தவரையில் குறை வைக்கவில்லை. ரோகிணிக்கு படம் முழுக்க வருவது மாதிரி அனுதாபத்தை அள்ளும் கேரக்டர்! சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார். மற்றும் வெற்றியின் அம்மாவாக வரும் ரமா, ரோகிணியின் சகோதரராக வரும் ‘மைம்’ கோபி, போலீஸ் அதிகாரியாக வரும் அனில்முரளி ஆகியோரும் தங்களது கேரக்டர்களின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.திரைக்கதை, இயக்கம்

2.வசனங்கள்

3.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.கதை ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தருவது

2.லாஜிக் விஷயங்கள்

மொத்தத்தில்…

வழக்கமான காதல் கதைகளை, அடிதடி மசாலா படங்களை தவிர்த்து மாறுபட்ட ஒரு திரைக்கதை அமைப்புடன் நம வாழ்வியலோடு ஒட்டி பயணிக்கும் சம்பவங்களை மையப்படுத்திய ஒரு படத்தை பார்க்க விரும்புகிறவர்களுக்கு ஏற்ற படம் இந்த ‘ஜீவி’.

ஒருவரி பஞ்ச் : ‘ஜீவ’னுள்ள மாறுபட்ட படைப்பு!

ரேட்டிங் : 5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அசுரன் ட்ரைலர்


;