பௌவ் பௌவ் – விமர்சனம்

‘பௌவ் பௌவ்’ குழந்தைகளுக்கான படம்!

விமர்சனம் 18-Oct-2019 11:48 AM IST Top 10 கருத்துக்கள்

Direction: S. Pradeep Kilikar
Production: London Talkies
Cast: Master Aahaan, V. Shiva, Tejaswy
Music: Marc D Muse, Denis Vallaban. A
Cinematography: K. Arun Prasath
Editor:E. Gopal & S.Anand

அறிமுக இயக்குனர் பிரதீப் கிளிக்கர் இயக்கத்தில் மாஸ்டர் அஹான், வி.சிவா, தேஜஸ்வி, சத்யன் ஆகியோருடன் ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் படம் ‘பௌவ் பௌவ்’. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களும், விருதுகளும் கிடைத்துள்ள ‘பௌவ் பௌவ்’ எப்படி?

கதைக்களம்

பெற்றோரை இழந்து, தாத்தா, பாட்டி அரவனைப்பில் வளர்ந்து வரும் சிறுவன் அஹானுக்கு செல்ல பிராணியான நாய் என்றால் ரொம்பவும் பிரியம். இந்நிலையில் ஒரு நாயை வாங்கி வளர்க்கும் அஹான் பள்ளிக்கு போகும்போதும், வெளியில் போகும்போதும் அந்த நாய் கூடவே பயணிக்கிறான். இப்படி பயணிக்கும்போது ஆற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்க்கும் அந்த நாய், தண்ணீரில் குதித்து அந்த இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றி விடுகிறது. இந்நிலையில் ஆற்றில் திடீரென்று பாய்ந்து வரும் பெரும் வெள்ளத்தால் அந்த நாய் அடித்துச் செல்லப்பட, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ‘பௌவ் பௌவ்’ கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

இதுபோன்று நாயை மையமாக வைத்து இதற்கு முன் பல படங்கள் வெளியாகியுள்ளன என்றாலும் இந்த படத்தில் ஒரு சிறுவனுக்கும் ஒரு நாய்க்கும் இடையிலான அன்பு, பாசம் மற்றும் செண்டிமெண்ட் விஷயங்களை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப் கிளிக்கர். குழந்தைகளை மகிழ்விக்க வைத்து, அவர்களுக்கு நல்ல கருத்துக்களையும் சொல்ல வேண்டும் என்று நினைத்து இப்படத்தை இயக்கியுள்ள பிரதீப் கிளிக்கர், இந்த படத்தை பாரக்க குழந்தைகளுடன் பெரியவர்களும் வருவார்கள், அவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதில் போதுமான கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.

கதையில் வரும் கேரக்டர்களுக்கு இடையிலான உறவுமுறைகள், அந்த கேரக்டர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளின் தொகுப்பு சரியாக அமையாததால் குழப்பமே ஏற்படுகிறது. இப்போது மனிதர்களுக்கும் செல்ல பிராணிகளுக்கும் இடையிலான அன்பு பாசம் குறைந்து வருகிறது என்பதையும், நாய் போன்ற செல்ல பிராணிகள் மீது பாசம் வைப்பதாக இருந்தால் சில சமயம் அவை மனிதர்களை விட மனிதர்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்பதை சொல்ல வந்துள்ள இயக்குனர், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் குழந்தைகள் தவிர பெரியவர்களையும் இப்படம் கவர்ந்திருக்கும். கே.அருண் பிரசாத்தின் ஒளிப்பதிவு, மார்க் டி மியூஸ், டென்னிஸ் வல்லபன் ஆகியோரின் இசை, கோபால், ஆனந்த் ஆகியோரின் படத்தொகுப்பு முதலான டெக்னிக்கல் விஷயங்கள் ‘பௌவ் பௌவ்’ படத்தின் கதை தன்மைக்கு தேவையான பங்களிப்பு செய்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

படத்தின் கதையின் நாயகர்கள் சிறுவன் அஹானும், நாயும்தான்! அஹான் சிறப்பாக நடித்துள்ளான். சிறுவன் அஹானுடனான அன்பை பாசத்தை, செண்டிமெண்ட் விஷயங்களை அந்த நாயும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. அஹானை சுற்றி வரும் கேரக்டர்களில் நடித்துள்ள சத்யன், வி.சிவா, தேஜஸ்வி, நாஞ்சில் வி.ராம்பாபு ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.விலங்குகளை நேசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கதை அமைப்பு!

2.எல்லோரையும் கவரும் விதமான நடிப்பை வழங்கியிருக்கும் சிறுவன் அஹான்!

பலவீனம்

1.வலுவில்லாத திரைக்கதை

2.கேரக்டர்களுக்கு இடையிலான உறவுமுறைகளை சரியாக சொல்லாதது…

மொத்தத்தில்…

ஒரு நாய்க்கும் ஒரு சிறுவனுக்கும் இடையிலான பாசப் போராட்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் குழந்தைகளை கவர வாய்ப்பிருக்கிறது!

ஒருவரி பஞ்ச் : ‘பௌவ் பௌவ்’ குழந்தைகளுக்கான படம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;