கார்த்தியும் '2' சென்டிமென்ட்டும்!

இரண்டாவது ஹீரோவாக கார்த்தி!  – வெற்றிக் கொடி நாட்டிய இயக்குனர்கள்!

கட்டுரை 25-Oct-2019 10:21 AM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக்கு கோலிவுட் என்றில்லாமல் டோலிவுட், மோலிவுட் மற்றும் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதறகு உதாரணம் கார்த்தி நடிக்கும் ஒவ்வொரு படங்களும் தமிழில் வெளியாகும் நேரத்திலேயே ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் வெளியாவது! அந்த வரிசையில் இன்று வெளியாகும் ‘கைதி’ படமும் தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்ற துவங்கிய கார்த்தி அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்தின் மூலமே புலிக்கு பிறந்தது பூனையாகது என்பதை நிரூபித்து காட்டினார் கார்த்தி! இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக திகழ்ந்து வரும் கார்த்தியின் இந்த வளர்ச்சிக்கு பின்னாடி அவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் மட்டும் இல்லாமல் அவரை இயக்கிய இயக்குனர்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கார்த்தியை இயக்கிய பெரும்பாலான இயக்குனர்களின் இரண்டாவது படத்தில் கார்த்தி நடிக்க, அதன் மூலம் அந்த இயக்குனர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று பெரிய பெரிய ஹீரோக்களை இயக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்தது. இந்த ‘2’ என்ற லக்கி நம்பர் வரிசையில் கார்த்தியை தங்களது இரண்டாவது படம் மூலம் இயக்கிய அந்த இயக்குனர்கள் பற்றிய ஒரு சிறு கட்டுரை இதோ…

சுசீந்திரன் (படம் - நான் மகான் அல்ல)

‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுசீந்திரன் இயக்கிய இரண்டாவது படம் ‘நான் மகான் அல்ல’. கார்த்தி கதையின் நாயகனாக நடித்த இந்த படம் ஒரு நடுத்தர வர்கத்து இளைஞன் பற்றி சிறந்த திரைக்கதையாக அமைந்து வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் இனிய இசையும் ஒரு ஒரு காரணமாக அமைந்து படத்தின் வெற்றிக்கு உறுதுணை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து அதே வருடம் சுசீந்திரன் அப்புக்குட்டியை வைத்து இயக்கிய ‘அழகர் சாமியின் குதிரை’ படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்து பேசப்பட்டது. இதனை தொடர்ந்து சுசீந்திரனுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமை இயக்கும் வாய்ப்பு கிடைத்து அவர் இயக்கிய படம் தான் ‘ராஜாபாட்டை’. இப்படமும் விமர்சன ரீதியாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ரஞிசித் (படம் – மெட்ராஸ்)

தினேஷ், நந்திதா நடித்த ‘அட்டகத்தி’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்து வெளியான படம் ‘மெட்ராஸ்’. வட சென்னை பின்னணியில் நிஜ அரசியல் விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஐ.டி.புரொஃபஷனலாக காளி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் கார்த்தி. பா.ரஞ்சித் உருவாக்கிய மாறுபட்ட கதைக்களம் கார்த்தி உட்பட்டவர்களின் சிறப்பான பங்களிப்பு என்று இப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து கார்த்திக்கும் பா.ரஞ்சித்துக்கும் பெரும் புகழ் கிடைத்ததோடு, ரஞ்சித்தின் இந்த இரண்டாவது படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு இரண்டு முறை கிடைத்து அவர் இயக்கிய படங்களதான் ‘கபாலி’யும் ‘காலா’வும்.

முத்தையா (படம் – கொம்பன்)

சசிக்குமார், லட்சுமி மேனன் இணைந்து நடித்த ‘குட்டிப்புலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கியவர் முத்தையா. இவர் இயக்கிய இரண்டாவது படமான ‘கொம்பன்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கார்த்தி! இந்த படத்திலும் முத்தையாவின் முதல் பட கதாநாயகியே கார்த்திக்கு ஜோடியாக நடிக்க, கிராமத்து பின்னணியில் உறவு முறை விஷயங்களை சொன்ன ‘கொம்பன்’ படமும் வெற்றிப் படமாக அமைந்து இயக்குனர் முத்தையாவுக்கு அடுத்து விஷாலை இயக்கும் வாய்ப்பு கிடைத்து அவர் இயக்கிய படம் ‘மருது’. கார்த்தியை வைத்து இயக்கிய முத்தையாவின் இரண்டாவது படமான ‘மருது’ வெற்றிப் படமாக அமைந்து அவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவியது!

எச்.வினோத் (படம் – தீரன் அதிகாரம் ஒன்று)

‘சதுரங்க வேட்டை’ எனும் தனது முதல் படத்தின் மூலமே கவனம் பெற்ற இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எச்.வினோத். இவர் இயக்கிய இரண்டாவது படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்த இந்த படம் தமிழ்நாட்டில் நடந்த சில நிஜ சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. நல்ல விமர்சனங்கள் கிடைத்து வணிக ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்த இப்படத்தை தொடர்ந்து எச்.வினோத்துக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து அவர் இயக்கிய படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’. ஹிந்தியில் வெளியாகி வசூல் குவித்த ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்காக தமிழில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’யும் வசூல் குவித்த நிலையில், எச்.வினோத் மீண்டும் அஜித்துடன் இணைந்து தனது மூன்றாவது படமாக இப்போது ‘வலிமை’யை இயக்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் (படம் – கைதி)

நல்ல விமர்சனங்கள் கிடைத்து நல்ல வசூலும் அள்ளிய ‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவருக்கும் தனது இரண்டாவது படத்தில் கார்த்தியை இயக்கும் வாய்ப்பு கிடைத்து அவர் இயக்கிய படம் தான் ‘கைதி’. இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ள ‘கைதி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நேரத்திலேயே லோகேஷ் கனகராஜுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யை இயக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. தனது மூன்றாவது படத்திலேயே அதிகம் யாருக்கும் கிடைக்காத விஜய்யை இயக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைக்கவும் கார்த்தியும் ‘லக்கி நம்பர் இரண்டும் காரணமாக அமைந்ததாக எடுத்துக்கொள்ளலாம்!

பாக்யராஜ் கண்ணன் (படம் – சுல்தான்)

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘ரெமோ’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன். இவர் இயக்கும் இரண்டாவது படமான ‘சுல்தான்’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருபவர் கார்த்தி! ‘கைதி’ படத்தை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும், எஸ்.ஆர்.பிரபுவும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கார்த்தியுடன் ராஷ்மிகா மந்தானா கதாநாயகியாக நடிக்க, இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது இரண்டாவது பட கதாநாயகனாக கார்த்தி அமைந்ததன் மூலம் பாக்யராஜ் கண்ணனும் ‘சுல்தான்’ படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இன்னும் பெரிய இடத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம்!

இப்படி கார்த்தியை வைத்து தங்களது இரண்டாவது படங்களை இயக்கிய மேற்குறிப்பிட்ட இயக்குனர்களின் வெற்றிக்கும் அவர்களது வளர்ச்சிக்கும் சென்டிமெண்டாக ‘கார்த்தியும் லக்கி நமபர் இரண்டும்’ அமைந்துள்ளது என்று சொல்லாம்! அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ படமும், லோகேஷ் கனகராஜின் அடுத்த பட ஹீரோவான விஜய் நடித்த ‘பிகில்’ படமும் இன்று (25-10-19) ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்! மீண்டும் தொடரட்டும் கார்த்தியும் அவரது லக்கி நம்பர் ‘2’ சென்டிமெண்டும்!


#Karthi #Kaithi #LokeshKanagaraj #DreamWarriorPictures #SRPrabhu #SRPrakashBabu #VivekandaPictures #SamCS #SathyanSooryan #PhilominRaj ##KaithiPreEvent #KaithiFromOct25th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;