வெங்காயம் பரிசளித்த படக்குழுவினர்!

பத்திரிகையாளர்களுக்கு வெங்காயம் பரிசளித்த ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ படக்குழுவினர்!

செய்திகள் 18-Dec-2019 12:05 PM IST Top 10 கருத்துக்கள்

சச்சின் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி கதாநாயகனாகவும், ஷான்வி ஸ்ரீவத்சா கதாநாயகியாகவும், பிரமோத் ஷெட்டி முக்கிய வில்லனாகவும் நடித்துள்ள கன்னட படம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’. மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படம் கன்னடம் தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம். ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ரக்‌ஷித் ஷெட்டி பேசும்போது,

‘‘சின்ன வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ரொம்பவும் ஆர்வம். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா தென்னிந்திய திரைப்படங்களையும் விரும்பி பார்ப்பேன். அதிலும் குறிப்பாக தமிழில் கே.பாலச்சந்தர் சார் இயக்கிய படங்களை, கமல்ஹாசன் சார் நடித்த படங்களை ரொம்பவும் விரும்பி பார்ப்பேன். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளேன். கன்னட படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறேன். இந்நிலையில் தமிழ் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. அதற்கான சந்தர்பம் இந்த படத்தின் மூலம் அமைந்தது. ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ எனது முதல் தமிழ் படமாகும். எனக்காக கதை உருவாக்க 7 பேர் கொண்ட ஒரு குழுவை வைத்திருக்கிறேன். அவர்கள் உருவாக்கிய ஒரு கற்பனை கதைதான் ‘அவனே ஸ்ரீமன் நாராணா’. புதையலை தேடி எடுக்கும் ஒரு கும்பல், அந்த கும்பலிடமிருந்து புதையலை திருட முயற்சிக்கும் வில்லன்கள், இவர்களுக்கு நடுவில் சர்வ வல்லமை படைத்த ஒரு போலீஸ் அதிகாரி… இதுதான் படத்தின் ஒரு வரி கதை. எல்லா ஜனரஞ்சக அம்சங்களுடனும் சொல்லப்பட்டுள்ள படமாகும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’. மூன்று வருடங்கள் கடினமாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

‘புஷ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் புஷ்கர மல்லிகார்ஜுனா தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசை அமைத்துள்ளார். காம் சாவ்லா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை படத்தை இயக்கியிருக்கும் சச்சினே கவனித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையிலான ‘வெங்காயம்’ தாம்பூலமாக வழங்கப்பட்டது. இப்போதுள்ள சூழ்நிலையில் பட தயாரிப்பாளர்கள் வெங்காயம் பரிசாக வழங்கியதிலிருந்தே தெரிகிறது படத்தை நிறைய செலவு செய்து எடுத்திருப்பார்கள் என்பது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சச்சினை அவதூறாக பேசிய RJ பாலாஜி - வீடியோ


;