வசூலில் சென்ற ஆண்டின் ‘டாப் 10’ படங்கள்!

2019-ல் வெளியான படங்களில் அதிக வசூலை அளித்த 10 படங்கள் பற்றிய ஒரு  கண்ணோட்டம்!

கட்டுரை 4-Jan-2020 2:05 PM IST Top 10 கருத்துக்கள்

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் அந்த ஆண்டு வெளியான படங்களை பற்றிய கண்ணோட்டத்தை வெளியிடுவது வழக்கம். சென்ற அண்டு (2019) அதற்கு முந்தைய ஆண்டை (2018) விட தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கிடைத்த ஆண்டு என்று சொல்லலாம். காரணம், 2019-ல் வெளியான கிட்டத்தட்ட 200 படங்களில் நிறைய படங்கள் வசூல் ரீதியாகவும், நிறைய படங்கள் விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்று தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. அந்த வரிசையில் சென்ற ஆண்டு (2019) வெளியான படங்களில் அதிக வசூல் செய்த 10 படங்களை இங்கு அப்படங்களின் ரிலீஸ் தேதி அடிப்படையில் பட்டியலிட்டுள்ளோம்.

1.விஸ்வாசம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2019, ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வெளியான படம் ‘விஸ்வாசம்’. ‘ சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா முக்கிய கேரக்டர்களில் நடிக்க, ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்த இப்படம் சென்ற ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து இப்படம் சம்பந்தமான எல்லா தரப்பினரையும் வசூல் ரீதியாகவும் சந்தோஷப்படுத்தியது. குடும்பப் பின்னணியில் செண்டிமெண்ட் கலந்த கதையாக வெளியான இப்படத்திற்கு இசை அமைத்த டி.இமானின் சிறந்த பங்களிப்பும் இப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. சென்ற ஆண்டு வெளியான படங்களில் இப்படம் செய்த வசூல் குறிப்பிடத்தக்கதாகும்!

2.பேட்ட

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘விஸ்வாசம்’ படம் வெளியான அதே ஜனவரி 10-ஆம் தேதி வெளியான படம் ‘பேட்ட’. கர்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படமும் சென்ற ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்று வசூல் அள்ளிய படங்களில் ஒன்றாகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம தயாரிக்க, இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

3.காஞ்சனா-3

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி வெளியான படம் ‘காஞ்சனா-3’. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து, இயக்கிய இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ராகவா லாரன்ஸுடன் ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, கபீர் துஹான் சிங் உட்பட பலர் நடித்த இப்படமும் சென்ற ஆண்டு வெளியான படங்களில் வசூல் அள்ளிய படங்களில் ஒன்றாகும்!

4.நேர்கொண்ட பார்வை

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கிய படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்காக வெளியான இப்படத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் நடித்திருந்தனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்த இப்படமும் வெற்றிப் படமாக அமைந்து நல்ல வசூல் செய்தது. ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வெளியான இப்படமும் வெற்றிப் படமாக அமைந்ததால் 2019-ஆம் ஆண்டு அஜித்தின் ஆண்டாக அமைந்தது.

5.கோமாளி

‘வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்‘ நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த படம் ‘கோமாளி’. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு , கே.எஸ்.ரவிகுமார் உட்ப்ட பலர் நடித்த இப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வெளியானது. காமெடி செண்டிமெண்ட் ஆகிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் அனைத்து ரக ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிப் படமாக அமைந்து நல்ல வசூலை ஈட்டியது.

6. காப்பான்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்த இப்படம் செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி ரிலீசானது. பிரதமர், ஜனாதிபதி பொன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வீரர்கள் பற்றிய கதை அமைப்புக்கொண்ட படமாக வெளியான இப்படம் மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும், வசூலை பொறுத்தவரியில் குறை வைக்கவில்லை ‘காப்பான்’.

7.நம்ம வீட்டு பிள்ளை

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ். அனு இமானுவேல், சூரி உட்பட பலர் நடித்த இப்படம் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் வெளியானது. கார்த்தி நடிப்பில் வெளியாகி நல்ல வசூல் அள்ளிய ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படமும் கிராமத்துப் பின்னணியில் ஆக்‌ஷன் காமெடி படமாக வெளியானது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படமாக அமைந்து வசூலில் குறை வைக்கவில்லை. இந்த படம் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி வெளியானது.

8.அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், கென் கருணாஸ், ‘ஆடுகளம்’ நரேன் உட்பட பலர் நடித்த இப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியானது. பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்படம் மேல் ஜாதி, கீழ் ஜாதி அரசியலை பேசியது. வெற்றிமாறனின் சிறந்த இயக்கம், தனுஷ், மஞ்சு வாரியர் உட்பட படத்தில் நடித்த அனைவரின் சிறந்த நடிப்பு, ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான இசை என்று ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் வெளியான இப்படம் வசூலில் அசுரத்தனம் காட்டியது.

9.கைதி

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 25-ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியம், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படத்தை ‘ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும், ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. கதாநாயகி கேரக்டர் இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியான இப்படத்தின் வெற்றிக்கு கார்த்தியின் சிறந்த நடிப்பு, சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை , சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு ஆகிய விஷயங்களும் கைகொடுக்க, ‘கைதி’ ரசிகர்களின் மனங்களை கைது செய்து நல்ல வசூலை ஈட்டியது! இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக இருக்கிறது.

10.பிகில்

விஜய்யும், இயக்குனர் அட்லியும் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கிய படம் ‘பிகில்’. ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் ‘கைதி’ திரைப்படம் வெளியான அதே நவம்பர் 25-ஆம் தேதி வெளியான இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இப்படத்தின் மீதும் பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், ‘பிகில்’ ரசிகர்களை கவர்ந்து நல்ல வசூலை ஈட்டி, விஜய், அட்லி கூட்டணிக்கு ‘பிகில்’ ஹாட்ரிக் வெற்றிப் படமாக அமைந்தது.

#Viswasam #Petta #Kanchana3 #NerkondaPaarvai #Comali #Kaappaan #NammaVeettuPillai #Asuran #Kaithi #Bigil #Top10FilmsOfBoxOfficeIn2019

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;