சினிமாவை பொறுத்தவரையில் ரசிகர்களிடம் வவேற்பு பெற்று வசூல் குவிக்கும் படங்கள் ஒரு ரகம். இன்னொரு ரகம், படைப்பு ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெறும் படங்கள்! விமர்சன ரீதியாக பேசப்படும் பெரும்பாலான படங்கள் எதிர்பார்க்கிற அளவுகு வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை! ஆனால் இப்படங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களும், விருதுகளுமே பெரிய கௌரவமாகும்! அந்த வகையில் சென்ற ஆண்டு (2019) வெளியான படங்களில் வசூலில் முதல் இடத்தை பிடித்த 10 படங்களை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். அந்த வரிசையில் சென்ற ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் பேசப்பட்ட 10 படங்களை இங்கு அப்படங்களின் ரிலீஸ் தேதி வாரியாக பட்டியலிட்டுள்ளோம்.
1.பேரன்பு
‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் வெளியான படம் ‘பேரன்பு’. மமுமுட்டி, சாதனா, அஞ்சலி முதலானோர் நடித்த இப்படம் மாற்றுத் திறனாளியான ஒரு பெண் குழந்தையை வளர்ப்பதிலுள்ள கஷ்டங்களை, சிக்கல்களை உணர்வு பூர்வமாக சொல்லியிருந்தார்கள். மம்முட்டி, குழந்தை நட்சத்திரம் சாதனா ஆகியோரின் சிறந்த நடிப்புடன் வெளியான இப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்கள் கிடைத்திருந்த நிலையில் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் சென்ற ஆண்டு ஃபிப்ரவரி 1-ஆம் தேதி வெளியானது.
2.டூ லெட்
ஒளிப்பதிவாளர் செழியன் இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கிய படம் ‘டூலெட்’. சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ஒருவர் குடியிருக்க வீடு தேடும் படலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்னாதாகவே பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், பாராட்டுக்களையும் அள்ளியது. அதே நேரம் இப்படத்திற்கு தமிழகத்திலும் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்து இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்தபடத்தில் செழியனின் உதவியாளர் சந்தோஷ், சுசீலா, தருண், ஆதிரா, பாண்டிலட்சுமி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். சென்ற ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சகர்களிடம் மட்டும் அல்லாமல் தமிழ் திரைப்பட ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
3.நெடுநல் வாடை
50 நண்பர்கள் ஒன்றிணைந்து தயாரித்த படம் ‘நெடுநல் வாடை’. அந்த 50 நண்பர்களில் ஒருவரான செல்வக்கண்ணன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ‘பூ’ ராமு, ‘மைம்’ கோபி, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இப்படம் கண்ணியமான ஒரு காதல் குடும்ப கதையாக வெளியாகி நல்ல விமர்சனங்கள் கிடைத்து வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படம் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி வெளியானது.
4. மெஹந்தி சர்க்கஸ்
இயக்குனர் ராஜுமுருகன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, ராஜுமுருகனின் அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி கதாநாயகன், கதாநாயகியாக நடித்த இப்படம் சர்க்கஸ் கலை பின்னணியில் உருவாகும் காதல், அதனை தொடர்ந்து ஏற்படும் வலிகள் ஆகியவற்றை சொல்லும் திரைப்படமாக வெளியானது. கதையில் சொல்ல கூடிய புதிய விஷயங்கள் எதுவும் இல்லை என்றாலும் எடுத்துக்கொண்ட கதையை அழகியலாக யதார்த்தமாக சொல்லியிருந்த விதத்த்ஹில் இப்படம் பேசப்பட்டது. இந்த படம் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியானது.
5.ஹவுஸ் ஓனர்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம் தேதி லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் ‘ஹவுஸ் ஓனர்’. கிஷோர், ஸ்ரீரஞ்சனி, அறிமுகம் லவ்லின் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படம் மழை வெள்ளம் வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு, அந்த பாதிப்பால் தன் நோய்வாய்ப்பட்ட கணவரை காப்பாற்ற போராடும் ஒரு காதல் மனைவியின் போராட்டத்தை அன்பு, பாசம், மனித நேயம் ஆகிய விஷயங்களை கலந்து சொல்லியிருந்த விதம் அருமையான பதிகாவக அமைந்திருந்தது. எந்த கமர்ஷியல் விஷயங்களையும் நம்பாமல் எடுக்கப்பட்டிருந்த இப்படமும் ல விமர்சன ரீதியாக பேசப்பட்டது.
6. தொரட்டி
அறிமுக இயக்குனர் மாரிமுத்து இயக்கத்தில் அறிமுகங்கள் ஷமன் மித்ரு, சத்யகலா ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்த இப்படம், வெளியாவதற்கு முன்னதாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இரண்டு விருதுகளை அள்ளியிருந்தது. இந்த படத்தில் கிராமத்தில் ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை காதல், மோதல், செண்டிமெண்ட் என்று யதார்த்தமாக பதிவு செய்திருந்தது. இதுவே இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைக்க காரணமாக அமைந்தது. இந்த படம் சென்ற ஆண்டு ஆகஸ்ட மாதம் 2 ஆம் தேதி வெளியானது.
7. ஒத்தசெருப்பு சைஸ் 7
பார்த்திபன் இயக்கத்தில், அவர் ஒருவரே நடித்து, தயாரித்து வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’. படத்தின் கதையில் பல்வேறு கேரக்டர்கள் இருந்தாலும் அந்த கேரக்டர்களை குரல் மூலம் மட்டுமே பதிவு செய்து, திரையில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே தோன்றுவது மாதிரி வித்தியாசமாக படமாக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக பேசப்பட்டதோடு வசூலிலும் குறை வைக்கவிலை. ஒரு சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுககளையும், பாராட்டுக்களையும் அள்ளிய இப்படம் சென்ற ஆண்டு வெளியான படங்களில் புதிய முயற்சியாக பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியானது.
8. கே.டி (எ) கருப்புதுரை
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் தேதி வெளியான இப்படம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ‘தலைக்கு ஊத்தல்’ என்ற சடங்கின் பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தது. மதுமிதா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மு.ராமசாமி, மாஸ்டர் நாக் விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சிறந்த இயக்குனருக்கான இரண்டு விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கிய இப்படம், எந்த கமர்ஷியல் விஷயங்களும் இல்லாமல் யதார்த்த வாழ்வியல் பதிவாக வெளியாகி விமர்சன ரீதியாக பெரிதும் பேசப்பட்டது.
9. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு!
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், அவரது உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியான படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, மாரிமுத்து உட்பட பலர் நடித்த இப்படம் காயிலான் கடைகளில் வேலை செய்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லியிருந்ததுடன் அன்புதான் அமைதிக்கான அடித்தளம் என்றும் ஆயுதம் இல்லா உலகை உருவாக்க வேண்டும் என்ற கருத்துக்களையும் தாங்கி வந்து கவனம் பெற்றது. டிசம்பர் 12-ஆம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.
10. சில்லுக்கருப்பட்டி
சென்ற வருடத்தின் இறுதியில், அதாவது டிசம்பர் 27-ஆம் தேதி வெளியான படம் ‘சில்லுக்கருப்பட்டி’ . ‘பூவரசம்’ பீப்பி படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளியான இப்படம் நான்கு கதைகளின் தொகுப்பாக வெளியாகி இருந்தது. காதலையும், குடும்ப செண்டிமெண்ட் விஷயங்கலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த அந்த நான்கு கதைகளும், படத்தின் டைட்டிலைப் போலவே ‘சில்லுக்கருப்பட்டி’யாய் இனித்தது. கதை சொன்ன விதம், காட்சிகளை படமாக்கிய விதம், படத்தில் பங்கேற்றவர்களின் சிறப்பான நடிப்பு என்று ‘சில்லுக்கருப்பட்டி’ சென்ற ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றா அமைந்தது. சூர்யாவின் ‘2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவன, வெளியீடாக வந்து இனித்தது ‘சில்லுக்கருப்பட்டி’.
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ‘ஜீ டிவி’யும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று குறிப்பிடத்தக்க ஒரு...
2019-ல் வெளியான இந்திய திரைப்படங்களில் மிக சிறந்த 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது IMDB...
மம்முட்டி நடித்து வரும் படம் ‘மாமாங்கம்’. மலையாளத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த...