‘‘சூர்யாவின் அடையாளம் அகரம், கார்த்தியின் அடையாளம் உழவன் ஃபவுண்டேஷன்’’ – சிவகுமார்!

அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சிவகுமார், சூர்யா, கார்த்தி பேசியவை…

செய்திகள் 27-Jan-2020 11:57 AM IST Top 10 கருத்துக்கள்

குடியரசு தினமான நேற்று (26-1-2020) சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பலகலை கழகத்தில் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் ‘தடம் விதைகளின் பயணம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சூர்யாவின் அகரம் ஃபசுண்டேஷன் கடந்த பத்து ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த 3,000 மாணவர்களின் கல்லூரிக் கனவை ‘விதைத் திட்டம்' மூலமாக நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிவகுமார் பேசும்போது, ‘‘அகரத்தின் பயணம் பல நூறு ஆண்டுகள் செல்லவேண்டும். இன்றைய மாணவர்களுக்கு உதவ அகரம் அறக்கட்டளை இருக்கிறது. ஆனால் என் காலத்தில் கல்வியுதவி செய்ய யாருமில்லை. நானும் உங்களை போல்தான். நான் பிறந்த ஒரு வருடத்தில் என் தந்தையை இழந்தேன். சிறுவயதில் சகோதரன், சகோதரியை இழந்தேன். பஞ்சமிகுந்த அந்த காலகட்டத்திலும் என் தாயின் அரவணைப்பால் ஊக்குவிப்பால் இன்று உங்கள் முன்னால் நிற்கின்றேன். நான் இருந்ததால் தான் இன்று சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களுடன் அகரம் இருக்கிறது. எனவே அந்த தாய்க்குதான் நன்றியை தெரிவிக்க வேண்டும்.பல படங்களில் சூர்யா நடித்தாலும் அவருக்கு நிலையான பெயர் அகரத்தின் மூலமே கிடைக்கும். அகரம் அறக்கட்டளையே சூர்யாவின் அடையாளம். விவசாயத்திற்கு உதவும் உழவன் ஃபவுண்டேஷனே கார்த்தியின் அடையாளம். மாணவர்கள் அனைவரும் தைரியமாக இருங்கள், நான் உங்களை விட அதிகம் கஷ்டங்களை சந்தித்தவன். ஆனால் இன்று இந்த நிலையில் உள்ளேன். சத்தியமாகவும் நேர்மையாகவும் நீங்கள் உழைத்தால் வெற்றியின் உச்சத்திற்கு செல்வீர்கள்” என்றார்.


கார்த்தி பேசும்போது, “இங்கு அனைவரிடத்திலும் ஒரு பெரிய சந்தோஷத்தை காண முடிகிறது. அகரம் குழுவிடம் உற்சாகத்திற்கு என்றும் குறைவிருக்காது என்பதை இன்று கண்கூடாக பார்க்கிறேன். என்றுமே வாங்குவதை காட்டிலும் கொடுப்பதில் மகிழ்ச்சி அதிகம் உள்ளது. ஆகவே நாம் வாங்கி கொண்டாலும் கொடுக்கும் நிலையை என்றும் பின்பற்றுவோம். மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவது நம் சந்தோஷத்தை நிலை நிறுத்தும். வாழ்க்கையில் என்றுமே தேடல் என்பது தேவை. நாம் எப்போதும் நம் வாழ்வில் புது தேடலை கண்டு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சமநிலை மிகவும் முக்கியமானது. திருமணமான பின்பு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள். சகிப்புத்தன்மை, தேடல், சம நிலை ஆகியவை உங்கள் வாழ்வில் முக்கியம்” என்றார்.

விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “முதலில் சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அகரம் கட்டளையின் இந்த வளர்ச்சிக்கு என் நண்பன் ஞானவேலு, ஜெயஶ்ரீ இருவரும் முக்கிய காரணம். அவர்களின் எண்ணங்களும், ஊக்குவிப்பும் மேலும் இரவு பகல் பார்க்காமல் அவர்கள் செலுத்தும் அசுர உழைப்பினால் தான் இன்று அகரம் இந்த 10 ஆண்டுகள் கடந்தும் கம்பீர நடைபோட்டு கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் நன்றி கூற இயலாது, அடையாளம் காண்பிக்க முடியும்.

அகரம் ஒரு குடும்பம், பழைய தலைமுறையினருடன் புதிய தலைமுறையினரும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் பாதையே அகரம். அகரம் குடும்பத்தில் 3000க்கும் அதிகமான மாணவர்கள் என்பது எளிதான காரியமல்ல, இங்குள்ள அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பே அகரம். மாணவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கைதரத்தை கல்வி அளிப்பதின் மூலம் மேம்படுத்தி அவர்களின் குடும்பம், சொந்த பிரச்சனைகளை சமாளித்து அவர்களை சரியான பாதையில் பயணிக்க வைப்பது என்பது அகரம் அனைவரின் மூலம் நிகழ்த்தும் சாதனை. அகரம் அறக்கட்டளையில் அனைத்து தம்பி தங்கைகளுடன் நானும் ஒரு சகபயணியாக பயணிப்பது மட்டுமன்றி எனது பங்களிப்பையும் செலுத்துவேன். மூன்று விஷயங்கள் என்றுமே நம்மை சுற்றி இருக்கும். நம் குடும்பம், நம் சமுகம், நம் வேலை. இந்த மூன்றிலும் நாம் சமநிலையை பராமிரிக்க வேண்டும். மூன்றிற்கும் உங்களால் முடிந்த நேரத்தை செலவிடுங்கள். அகரம் அறக்கட்டளையின் வெற்றி என்பது அகரம் மாணவர்கள் கல்வி, வேலை ஆகியவற்றில் பெறும் வெற்றியே என்று நான் கூறுவேன். நாம் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருந்தால் நம் வாழ்க்கை முழுமை பெறும்’ என்றார் சூர்யா!

#Agaram #AgaramFoundation #Suriya #Karthi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;