இந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்?

இந்த வாரம் வானம் கொட்டட்டும், சீறு, அடவி, சண்டி முனி, புலிக்கொடி தேவன்  ஆகிய 5 படங்கள் ரிலீசாகின்றன!

செய்திகள் 6-Feb-2020 11:12 AM IST Top 10 கருத்துக்கள்

சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள் வெளியாகின. அந்த வரிசையில் இந்த வாரம் எத்தனை நேரடி தமிழ் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளன என்பது குறித்த ஒரு சிறு கண்ணோட்டம் இது!

1.வானம் கொட்டட்டும்

மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்க, மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவரும் ‘படை வீரன்’ படத்தை இயக்கியவருமான தனா இயக்கியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படத்தின் கதை, வசனத்தை மணிரத்னம் எழுத இப்படத்தில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்க, இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகார் சரத்குமா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், சித் ஸ்ரீராம் இசை அமைத்துள்ள படம், பெரிய இடைவெளிக்கு பிறகு சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடித்துள்ள படம் என்று பல்வேறு சிறப்புகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும் ஏதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்கும் படமாக ‘வானம் கொட்டட்டும்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. சீறு

‘றெக்க’ படத்தை தொடர்ந்து ரத்தின சிவா இயக்கியுள்ள படம் ‘சீறு’. ‘வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜீவா, ரியா சுமன் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் வருண், காயத்ரி கிருஷ்ணா, சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் மாயவரம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர் வேலை செய்யும் இளைஞராக நடிக்கிறார் ஜீவா. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் இவரது வாழ்க்கையில் எதிர்பாராமல் ஒரு பிரச்சனை குறுக்கிடுகிறது. சமூகம் சார்ந்த அந்த பிரச்சனையை ஜீவா எப்படி எதிர்கொள்கிறார் என்பதாம் ‘சீறு’வின் கதைக்களம்! ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளையும் பேசுமாம்! இசைக்கு டி.இமான், ஒளிப்பதிவுக்கு பிரசன்ன குமார், படத்தொகுப்புக்கு கிஷோர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சீறு’ படம் மீதும் ஒருவித எதிபார்ப்பு உருவாகி உள்ளது.

3.அடவி

வினோத் கிஷன், அம்மு அபிராமி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க ரமேஷ் ஜி. ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள படம் ‘அடவி’. அடவி என்றால் அடர்ந்த காட்டுப் பகுதி என்று அர்த்தம். காட்டுப் பகுதியில் சுற்றுலா சொகுசு பங்களாக்கள் கட்ட முயற்சிக்கும் அரசியல் பலம், பண பலம் படைத்தவர்களுக்கும் அந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டங்களை மையப்படுத்திய கதையாக ‘அடவி’ உருவாகி உள்ளது. அதே நேரம் காட்டை பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், ரிலீசாவதற்கு முன்னதாகவே பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களும், விருதுகளும் கிடைத்துள்ள நிலையில் கவனம் பெற்றுள்ளது இப்படம். இந்த படத்திர்கு சரத் ஜடா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீகிருஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.சாம்பசிவம் எழுதி தயாரித்து, படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். ‘நந்தா’ படத்தில் சிறு வயது சூர்யாவாக நடித்த வினோத் கிஷன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘ராட்சசன்’, ‘அசுரன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள அம்மு அபிராமி கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ‘அடவி’ என்பது குறிப்பிடத்தக்கது.

4.சண்டி முனி

‘சிவம் மீடியா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சிவராம் குமார் தயாரித்துள்ள படம் ‘சண்டி முனி’. ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றிய மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நட்டி நட்ராஜ், யோகி பாபு, மனிஷா யாதவ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, இவர்களுடன் சூப்பர் சுப்பராயன் வில்லனாக நடித்துள்ளார். மற்றும் ஆர்த்தி, வாசு விக்ரம், முத்துக்காளை, கிரேன் மனோகர் உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படம், ஒரு பெண்ணுக்கும், ஒரு பேய்க்கும் இடையில் நடக்கும் போர் மற்றும் இதற்கு இடையில் சண்டி என்பவர் மாட்டிக்கொண்டு அல்லல்படுவதுமாக பயணிக்கும் கதையே ‘சண்டி முனி’ இதில் சண்டி கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ளார். செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ரிஷால் சாய் இசை அமைத்துள்ளார். புவன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஹாரர் படங்களில் வரிசையில் உருவாகியுள்ள படம் இது!

5. புலிக்கொடி தேவன்

எஸ்.பி.ராஜ் பிரபு எழுதி இயக்க, முக்கியமான கேரக்டர்களில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘புலிக்கொடி தேவன்’.சோழநாடு டாக்கீஸ் என்ற பேனரில் வேலா கிருஷ்ணசாமி நாயக்கர் தயாரித்துள்ள இந்த படத்தில் சமித்சந்துரு, ஜீவன் மயில், ஆர்.பி.கல்யாண் ஆகியோர் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். ‘ படத்தை பாருங்க, காதலா சாதியா?’ என்ற வாசகத்துடன் விளம்பரப்படுத்தி வரும் இப்படம் காதலையும், ஜாதி பிரச்சனையையும் சொல்லும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பட ஐந்து நேரடி தமிழ் திரைப்படங்கள் இந்த வார ரிலீஸாக நாளை (7-2-2020) வெளியாக இருக்கிறது. இந்த படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிப் படங்களாக அமையும் என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;