அடவி – விம்ரசனம்

சமூகத்துக்கு மிக அவசியமான கருத்துக்களை சொல்லும் படைப்பு!

விமர்சனம் 6-Feb-2020 8:59 PM IST Top 10 கருத்துக்கள்

Direction, Cinematography : Ramesh.G
Production: Sri Krish Pictures
Cast: Vinoth Kishan, Ammu Abirami, R.N.R.Manohar, Muthuraman, Sambasivam
Music: Sarath Jada,matography: NK Ekambaram
Editint: Satheesh Kurosova

ரமேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்து இயக்க, வினோத் கிஷன், ‘அம்மு’ அபிராமி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, ரிலீஸுக்கு முன்னதாக பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் விருதுகளையும் அள்ளி வந்துள்ள ‘அடவி’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

நீலகிரி வனப் பகுதியில் வசித்து வரும் பழங்குடி இன மக்களில் இருவர் வினோத் கிஷன், அம்மு அபிராமி! காட்டை நம்பியே வாழ்க்கை நடத்தி வரும் அந்த மலையடி வார மக்களில் அம்மு அபிராமி படிப்பறிவு உடையவர்! இந்நிலையில் வசதி படைத்த ஆர்.என்.ஆர்.மனோகர், அந்த ஊர் எம்.எல்.ஏ., உயர் போலீஸ் அதிகாரிகள், காட்டு இலாகா அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரை கையில் வைத்துக்கொண்டு அந்த காட்டை அழித்து உல்லாச சொகுசு விடுதிகள் கட்ட முயற்சிக்கிறார்! இதை அறியும் அந்த காட்டை நம்பி வாழும் பழங்குடி இன மக்கள் அதற்கு எதிராக அணி திரண்டு போராட, இந்த போராட்டத்தில் பண பலமும், அதிகார பலமும் படைத்த ஆர்.என்.ஆர்.மனோகருக்கு வெற்றி கிடைக்கிறதா? இல்லை அந்த பழங்குடி இன மக்களுக்கு வெற்றி கிடைக்கிறதா என்பதை சொல்லும் படமே ‘அடவி’.

படம் பற்றிய அலசல்

இயற்கை மற்றும் அந்த இயற்கையோடு இணைந்து சந்தோஷமாக வாழந்து வரும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கை எப்படி ஒரு சுயநலம் படைத்தவனால் பாதிப்புக்குள்ளாகி சின்னாப் பின்னமாகிறது என்பதையும், காட்டையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார் ரமேஷ். ஜி. இதுபோன்ற கதை அமைப்பு கொண்ட படங்கள் ஏற்கெனவே வந்துள்ளது என்றாலும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதற்காகவே இப்படத்தை இயக்கியிருக்கும் ரமேஷ்.ஜி. மற்றும் இப்படத்தின் கதை எழுதி, தயாரித்து, படத்தில் வில்லத்தனம் படைத்த போலீஸ் அதிகாரியாக நடிக்கவும் செய்துள்ள கே.சாம்பசிவம் பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்!கண்களுக்கு விருந்தளிக்கும் வனப் பகுதிகள், அந்த வனத்துக்கள் வாழும் கள்ளம் கபடம் அறியாத மனிதர்கள், அவர்களது வாழ்க்கை முறைகள், இதில் கதாநாயகன் வினோத் கிஷனுக்கும், அம்மு அபிராமிக்கும் இடையில் உருவாகும் காதல் ஆகிய விஷயங்களுடன் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தந்தாலும், அதன் பிறகு மலைவாழ் மக்கள் காட்டை காக்கும் தெய்வமாக கருதும் ‘சப்பே’ வந்து சிலரை பழி வாங்குவதிலிருந்து கதை சூடு பிடிக்கிறது. காட்டை நம்பியே வாழும் மக்களிடத்தில் அதிகார பலத்தை பிரயோகித்து வன்முறைகளை கட்டழ்வித்து விட்டு அந்த மக்களை நசுக்கி விடுவதற்காக மேற்கொள்ளும் போராட்டங்கள் , அதனை தொடர்ந்து நிகழும் கிளைமேக்ஸ் ஆகியவை அதிகார பலம் படைத்த சில அரசு அதிகாரிகள், போலீஸ்காரர்கள் செய்யும் சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை தோலுரித்து காட்டும் விதமாக அமைந்துள்ளது.

கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருக்கும் வினோத் கிஷன் அம்மு அபிராமி, மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், போலீஸ் அதிகாரியாக வரும் முத்துராமன் ஆகியோரை தவிர்த்து படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலனோரும் புதிய முகங்களாக, இருப்பதால் யதார்த்த சம்பவங்களை நேரில் பார்க்கின்ற உணர்வை தருகிறது. படம் ஒரு டாக்குமெண்டரி படத்தை பார்க்கின்ற உணர்வை தரக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியுள்ள இயக்குனர் ரமேஷ்.ஜி.க்கு இசை அமைப்பாளர் சர்த் ஜடா பெரிதும் உதவி புரிந்துள்ளார். அவரது இசையில் அமைந்துள்ள பாடல்கள் மலைவாழ் மக்களின் வாழ்க்கையோடு இணைந்த பாடல்களாக அமைந்திருப்பது சிறப்பு! அடர்ந்த காட்டுப் பகுதிகளை, மலையடி வாரங்களை ரமேஷ் ஜி. படம் பிடித்திருக்கும் விதமும் ரசிக்க முடிகிறது! படத்தில் இதுபோன்ற சில நல்ல விஷயங்களும் கருத்துக்களும் இருப்பதாலேயே இப்படத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளது!

நடிகர்களின் பங்களிப்பு

‘நந்தா’வில் சிறு வயது சூர்யாவாக நடிக்க துவங்கி, கார்த்தியின் ‘நான் மகால் அல்ல’ படம் உட்பட பல படங்களில் நடித்த வினோத் கிஷன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். அமைதியான தோற்றம் அதே நேரம் ஆக்ரோஷ குணம் கொண்ட இளைஞராக சிறப்பாக நடித்துள்ளார் வினோத் கிஷன்! ர கதாநாயகியாக புரொமொஷன் பெற்றுள்ள அம்மு அபிராமியும் தனது கேரக்டருக்கு தேவையான நடிப்பை வழங்கி உள்ளார். காதலனை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது, ஊர் பிரச்சனைகளுக்காக பொங்கி எழுவது, கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற இடத்தில் நியாயத்துக்காக போராடுவது என்று அம்மு அபிராமி நடிப்பில் கவர்கிறார். வில்லத்தனம் படைத்த போலீஸ் அதிகாரிகளாக வரும் சாம்பசிவம் மற்றும் முத்துராமன், பணபலமும் படைத்த தொழில் அதிபராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் மற்றும் படத்தின் ஏனைய கேரக்டர்களில் நடித்திருக்கும் அனைவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.சொல்லப்பட்டுள்ள மெசேஜ்

2.யதார்த்தம் நிறைந்த காட்சி அமைப்புகள்

3.ஒளிப்பதிவு, இசை

பலவீனம்

1.கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி

2. ஒரு சில லாஜிக் விஷயங்கள்

மொத்தத்தில்…

இயற்கை வளங்களை காக்க தவறினால் எதிர்காலத்தில் உண்ண உணவு, குடிக்க தண்ணீர், சுவாசிக்க காற்று முதலானவற்றுக்கு திண்டாட வேண்டி வரும் என்ற கருத்தை சொல்ல வந்துள்ள இப்படம், சில அரசாங்க அதிகாரிகளின் சட்டத்துக்கு புறம்பான செயல்களையும் தோலுரித்து காட்டியிருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது!

ஒரு வரி பஞ்ச் : சமூகத்துக்கு மிக அவசியமான கருத்துக்களை சொல்லும் படைப்பு!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;