சீறு – விமர்சனம்

டைட்டிலுக்கு எற்ற சீற்றம் இல்லை

விமர்சனம் 7-Feb-2020 5:21 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Rathina Shiva
Production: Vels Film International
Cast: Jiiva, Navdeep, Varun & Riya Suman
Music: D. Imman
Cinematography: Prasanna Kumar
Editor: Lawrence Kishore

‘றெக்க’யை இயக்கிய ரத்தின சிவா, ஜீவா, ரியா சுமன், நவதீப், வருண் ஆகியோருடன் கூட்டணி அமைத்து இயக்கியுள்ள ‘சீறு’ டைட்டிலுக்கு ஏற்ற விதமாக சீறும், வீறும் கொண்ட படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

மயிலாடு துறையில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்தி வருபவர் ஜீவா. பொழுதுபோக்கு விஷயங்களுடன் சமூகம் சார்ந்த மக்களுக்கு பயன் தரும் செய்திகளையும் வெளியிட்டு வருகிறார். அதனால் ஜீவாவுக்கு உள்ளூர் எ.எல்.ஏ.வான ஆர்.என்.ஆர்.மனோகர் பகையாளியாகிறார். இதன் காரணமாக சென்னையில் இருக்கும் பெரிய ரௌடியான வருணுடன் ஜீவாவுக்கு மோதல் உருவாகிறது. இதனையொட்டி சென்னை வரும் ஜீவாவுக்கு வருண் மற்றும் வேறு சில ரௌடிகளால் பெரும் பிரச்சனைகள் வருகிறது! அந்த பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை ஜீவா எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ‘சீறு’!

படம் பற்றிய அலசல்

இயக்குனர் ரத்தின சிவா, படத்திற்கு ‘சீறு’ என்று டைட்டில் வைத்தற்ககாகவே படத்தில் நிறைய அதிரடி சண்டை காட்சிகளை இடம் பெற வைத்திருக்கிறார் போலும்! ஆனால் கதை, திரைக்கதை அமைப்பில் அதற்கேற்ற விதமாக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. வருணை தேடி சென்னை வரும் ஜீவாவுக்கு அவர் தன் தங்கையை காப்பாற்றியவர் என்பது தெரிய வருவது, வருண் வேறு ரௌடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்த நிலையில் அவரை காப்பற்ற போக, அதனால் ஜீவாவுக்கு வரும் பிரச்சனைகள் என்று ஓரளவுக்கு சுவாரஸ்யமாக பயணிக்கும் கதை என்றாலும், நேர் கோடாக செல்ல வேண்டிய கதை அங்கும், இங்கும் சம்பந்தமில்லாமல் பயணிப்பது போல் அமைந்திருப்பதால் அது படம் பார்ப்பவர்களுக்கு சோர்வையே தருகிறது. ஒரு கதையில் நம்மை ஒன்றி பயணிக்க வைப்பதில் அந்த கதையை புரியும்படி நேர்த்தியாக சொலவதில் தான் கிடக்கிறது! அது இந்த படத்தில் மிஸ்ஸிங்!

கதையில் திருப்பங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்காக திணிக்கப்பட்டது மாதிரி அமைந்துள்ள ஆர்.என்.ஆர்.மனோகர், வருண் உட்பட்ட சிலரது கேரக்டர்கள், லாஜிக் விஷயங்களை பற்றி கவலைப்படாதது போன்ற விஷயங்களும் படத்தில் பெரும் மைனஸாகவே அமைந்துள்ளது. படத்தின் ப்ளஸான விஷயங்கள் என்னவென்றால கே.கணேஷ் குமார் அமைத்த அதிரடி சண்டை காட்சிகளும் அதில் ஜீவா, வருண், நவதீப் உட்பட்டோரின் பங்களிப்பு மற்றும் சாதனை மாணவி சாந்தினி பெண்கள் எப்படி தைரியமாக செயல்பட வேண்டும் என்று பேசி பெண்களுக்கு தைரியத்தை ஊட்டும் காட்சிகளும் அதனை தொடர்ந்து நடைபெறும் ஏதிர்பாராத சம்பவங்களும் தான்! இரண்டு பாடல்களில் கவனம் பெற வைத்த டி.இமானின் பின்னணி இசை சொல்லும்படியாக அமையவில்லை. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு கதை பயணத்திற்கு தேவையான பங்களிப்பு செய்திருக்கிறது. படத்தொகுப்பு செய்துள்ள லாரன்ஸ் கிஷோர் படத்தை விறுவிறுப்பாக்குவதில் போதிய கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. இது போன்று நிறைய குறைகளுடனேயே அமைந்துள்ளது ‘சீறு’வின் பயணம்!

நடிகர்களின் பங்களிப்பு

தங்கை மீது அதீத பாசம் கொண்டவராக, நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக வரும் ஜீவா நடிப்பிலும், அதிரடி சண்டை காட்சிகளிலும் அதகளம் பண்ணியிருக்கிறார். கதாநாயகியாக வரும் ரியா சுமனுக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே! திணிக்கப்பட்டது மாதிரி அமைந்துள்ள அவரது கேரக்டரில் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளார். முக்கிய வில்லனாக, லாயராக வரும் நவதீப்பின் தோற்றமு நடிப்பும் மிரட்டல் ரகம். ஆனால் பெரிய ஒரு லாயராக இருக்கும் அவர் ஒரு தாதாவை போன்று களத்தில் இறங்கி செயல்படுவது கதையோடு ஓட்டவில்லை. ஜீவாவை தீர்த்துக்கட்ட வந்து, மனிதநேயத்துக்கு அடிமையாகி நல்லவராக மாறும் கேரக்டரில் நடித்துள்ள வருண் கேரக்டர் கவனத்தை ஈர்க்கும்விதமாக அமைந்துள்ளது. உள்ளூர் எம்.எல்.ஏ.வாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர், ஜீவாவின் நண்பராக வரும் சதீஷ் ஒரு சில காட்சிகளுடன் காணாமல் போய் விடுகிறார்கள். ஜீவாவின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி, சாதனை படைத்த பள்ளி மாணவியாக வரும் ‘கோலி சோடா’ பட புகழ் சாந்தினி மற்றும் அவர் கூட வரும் பள்ளி மாணவிகள் அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.ஜீவா வருண், நவதீப்

2. சண்டை காட்சிகள்

பலவீனம்

1.திரைக்கதை

2. கதையுடன் ஒட்டாத சில கேரக்டர்கள்

3.படத்தொகுப்பு

மொத்தத்தில்…

‘அந்நியாயங்களை பார்த்து சும்மா இருக்காதே… சீறு, அப்போது தான் நியாயம் கிடைக்கும்’ என்ற கருத்தை வைத்து பெண்களுக்கு தைரியத்தை ஊட்ட முயற்சித்த இயக்குனர் ரத்தின சிவா, திரைக்கதையை இன்னும் வலுவாக, நேர்த்தியாக அமைத்து காட்சிப்படுத்தி இருந்தால் ‘சீறு’ வீறு கொண்ட படமாக அமைந்திருக்கும்!

ஒரு வரி பஞ்ச் : டைட்டிலுக்கு எற்ற சீற்றம் இல்லை!

ரேட்டிங் : 4/10


#Seeru #SeeruMovieReview #Jiiva #RiyaSuman #Chandhini #Navdeep #Varun #PrasannaKumar #VelsFilmInternational #IshariKGanesh #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;