பாரம் – விம்ரசனம்

வழக்கமாக இதுபோன்ற படைப்புகளுக்கு ரேட்டிங் தரப்படுவதில்லை! அந்த வரிசையில் உருவாகியுள்ள  இந்த படைப்புக்கும் ரேட்டிங் வழங்கவில்லை

செய்திகள் 21-Feb-2020 2:52 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Priya Krishnaswamy
Production: Reckless Roses
Cast: R Raju, Sukumar Shanmugam, SP Muthukumar, Jayalakshmi, and Stella Gopi
Music: Ved Nair
Cinematography: Jayanth Sethu Madhavan
Editor: Priya Krishnaswamy

பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி சிறந்த படத்துக்கான தேசிய விருது உட்பட பல விருதுகளை அள்ளிய படம் ‘பாரம்’. ஆர்.ராஜு, முத்துக்குமார், சுகுமார் ஷண்முகம், ஜெயலட்சுமி, ஸ்டெல்லா கோபி உட்பட இப்படத்தில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலானோரும் புதுமுகங்களே! ‘பாரம்’ என்ன சொல்ல வருகிறது?

மகன் செந்தில் (முத்துக்குமார்) வீட்டில் வாழ பிடிக்காமல் சகோதரி (ஜெயலட்சுமி) வீட்டில் வசித்து வருகிறார் 65 வயதுடைய கருப்பசாமி (ராஜு). செக்யூரிட்டி வேலை செய்து வரும் கருப்பசாமி மீது ஒரு பைக் மோத, அவரது இடுப்பு எலும்பு முறிந்து படுத்த படுக்கையாகிறார். சகோதரியின் மகன்கள் மாமா கருப்பசாமியை பாசமாக பார்த்துக்கொண்டாலும், கௌரவ பிரச்சனை காரணமாக மகன் முத்துக்குமார் கருப்பசாமியை தன் வீட்டுக்கு அழைத்து சென்று விடுகிறார்! பணம் செலவு செய்து தந்தையை குணமாக்குவதற்கு மகன் செந்திலுக்கும், அவரது மனைவி ஸ்டெல்லா கோபிக்கும் விருப்பமில்லாது, ‘பார’மாக இருக்கும் தந்தையை விஷ ஊசி போட்டு கொன்று விடுகிறார். இதை அறியும் கருப்பசாமியின் சகோதரி மகன்கள் அந்த ஊரில் வழக்கமாக நடந்து வரும் இந்த விஷயத்தை மீடியா வெளிச்சத்துக்கு கொண்டு வர, சட்டம் என்ன செய்தது என்பதை சொல்லும் படமே ‘பாரம்’.

தமிழ்நாட்டின் சில கிராமங்களில் இருந்து வந்த ‘தலைக்கூத்தல்’ என்ற விஷயத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது உயிர் பிழைக்க வாய்ப்பில்லாமலும், கஷ்டப்பட்டுக்கொண்டும், மற்றவர்களுக்கு ‘பார’மாக இருக்கும் முதியவர்களை கருணை கொலை செய்வது என்பது தான் ‘தலைக்கூத்தல்’. சட்டத்தில் இதற்கு அனுமதி இல்லை என்றாலும் இதுபோன்ற கொலைகள் நாடு முழுக்கவும் நடந்து வருகிறது என்பதை சில உண்மை சம்பவங்களின் ஆதாரங்களை திரட்டி அதன் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார் பிரியா கிருஷ்ணசாமி!

குறிப்பாக நமது இந்தியாவில் ‘கருணை கொலை’க்கு சட்டத்தில் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், பிரியா கிருஷ்ணசாமி இயக்கியுள்ள இந்த ‘பாரம்’ படம், சிகிச்சை அளித்து தேவையான கவனிப்பு அளிக்கப்பட்டால் இன்னும் பல ஆண்டுக்காலம் வாழக்கூடிய ஒருவரை திட்டமிட்டு விஷ ஊசி போட்டு கொலை செய்யப்படுவதாக காட்டியுள்ளார். இது போன்று சட்டத்தை மீறி நடக்கும் செயல்களை நமது சமூகம் அங்கீகரிக்கிறதா, இது போன்ற விஷயங்களில் சட்டம் ஏன் கடமையை செய்யவில்லை என்ற கேள்விகளை எழுப்பும் விதமாக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரியா கிருஷ்ணமூர்த்தி! சட்டத்துக்கு புறம்பாக இது போன்ற கருணை கொலைகள் எல்லா நாடுகளிலும் நடந்து வருகிறது என்ற கருத்தை முன் வைக்கும் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி, தமிழகத்தில் வழக்கமாக இது போன்ற கொலைகளை செய்ய மேற்கொள்ளும் வழிமுறைகளை படத்தில் பின்பற்றாமல், பணத்தை பெற்றுக்கொண்டு இது போன்று கொலைகள் செய்யக் கூடிய ஒரு கும்பலே செயல்படுகிறது என்பது மாதிரி காட்சிப்படுத்தியிருப்பது கொஞ்சம் முரண்பாடாக தெரிகிறது! இருந்தாலும் சமூகமும், சட்டமும் கவனிக்க வேண்டிய விஷயம் இது என்பதை இப்படம் மூலம் சொல்ல வந்தமைக்காக பிரியா கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டு தெரிவிக்கலாம்!

இந்த படத்தின் மிகப் பெரிய பலம் இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் அந்தந்த பாத்திரங்களில் வாழ்ந்திருப்பதை போன்ற நடிப்பை வழங்கியிருப்பதும், படம் பார்ப்பவர்களை அந்த கிராமத்துக்குள் அழைத்து சென்ற உணர்வை தருவது மாதிரியாக அமைத்துள்ள காட்சிகளும், அந்த காட்சிகளை உயிரோட்டமாக ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன் படம் பிடித்திருக்கும் விதமும்தான்! இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கும் வேத் நாயருக்கு படத்தில் பெரிய வேலை இல்லை! காரணம் கதை ஓட்டத்தில் ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே அவரது இசை தேவைப்பட்டிருக்கிறது! அதை அவர் சிறப்பாக செய்து கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

ஆக மொத்தத்தில், இந்த ‘பாரம்’ படத்தை பார்ப்பவர்களில் ஒரு சிலருக்காவது தங்களது வயதான, முடியாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் பெற்றோர்களை நல்ல விதமாக கவனித்து அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் என்பது நிச்சயம்!

(வழக்கமாக இதுபோன்ற படைப்புகளுக்கு ரேட்டிங் தரப்படுவதில்லை! அந்த வரிசையில் உருவாகியுள்ள இந்த படைப்புக்கும் ரேட்டிங் வழங்கவில்லை).

#Baaram #PriyKrishnaswamy #Vetrimaaran #RecklessRoses #GrassRootFilmCompany #VedNair #BaaramMovieReview #JayanthSethuMadhavan #BaaramMovie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை டீஸர்


;