காட்ஃபாதர் - விமர்சனம்

ரௌடியிடமிருந்து மகனை காப்பாற்ற போராடும் ஒரு அப்பாவி அப்பாவின் கதை!

செய்திகள் 22-Feb-2020 1:27 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Jegan Rajasekhar
Cast: Natti Nataraj, Laal, Anannya, Master Aswath
Music: Navin Raveendran,
Cinematography: N.Shanmuga Sundaram
Editting : Bhuvan Sreenivasan
Production : G.S.Arts, First Clap

ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் ‘நட்டி’ நட்ராஜ், லால், அனன்யா, மாஸ்டர் அஸ்வத், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘காட்ஃபாதர்’ எப்படி?

கதைக்களம்

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நட்டி நடராஜ், தனது மனைவி அனன்யா, மகன் அஸ்வத்துடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சந்தோஷமாக வசித்து வருகிறார். அந்த ஏரியாவில் மிகப் பெரிய ரௌடியாக இருப்பவர் லால். இவரது 7 வயது மகனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டால்தான் பிழைப்பான் என்ற நிலை ஏற்படுகிறது. அபூர்வ ரத்த குரூப்பை கொண்ட அந்த சிறுவனுக்கு அதே ரத்த குரூப் மற்றும் அதே வயதுடைய ஒரு சிறுவனின் இதயம் கிடைத்தால் உயிர் பிழைப்பான் என்ற நிலையில், நட்டி நட்ராஜின் மகன் அஸ்வத்தின் ரத்தம் மற்றும் இதயம் தன் மகனுக்கு பொருந்தும் என்பதை அறிந்துகொள்கிறார் லால். இதனை தொடர்ந்து நட்ராஜின் மகன் அஸ்வத்தை கடத்தி வர, நட்டிநட்ராஜ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழையும் லால் மற்றும் அவரது அடியாட்களிடமிருந்து தன் மகனை காப்பாற்ற நட்டி நட்ராஜ் மேற்கொள்ளும் போராட்ட களேபரங்களே ‘காட்ஃபாதர்’.

படம் பற்றிய அலசல்

ஒரு ரௌடியிடமிருந்து தன் மகனை காப்பாற்ற போராடும் ஒரு அப்பாவி தந்தையின் கதையை ‘ஆடு, புலி ஆட்ட’ கதைப் பின்னணியில் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜெகன் ராஜசேகர். கதையில் நான்கைந்து கேரக்டர்களை மட்டுமே வைத்து, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கதையின் பெரும் பகுதியை நகர்த்தியிருக்கும் விதம், அந்த சிறுவன் என்ன ஆவான் என்று படம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கும் விதமாக காட்சிகளை நகர்த்தியிருக்கும் விதம் என்று இயக்குனர் ஜெகன் ராஜசேகர் கவனம் பெறுவிதமாக இப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால் விறுவிறுப்பாக செல்லும் கதையில் கிளைமேக்ஸ் நம்பும்படியாக அமையவில்லை. கிளைமேக்ஸை யதார்த்தமாக நடக்கக் கூடிய மாதிரியான ஒரு காட்சியாக யோசித்து, லாஜிக் விஷயங்களில் மேலும் கவனம் செலுத்தி படமாக்கியிருந்தால் ‘காட் ஃபாதர்’ மேலும் கவனம் பெற்றிருக்கும்.

பாடல், காமெடி, குத்தாட்டம் போன்ற எந்த ஒரு கமர்ஷியல் விஷயங்களுக்கும் இடம் தராமல் விறுவிறுப்பாக பயணிக்கும் இந்த கதைக்கு நவீன் ரவீந்திரனின் பின்னணி இசை, அப்பார்ட்மெண்ட்டில் ஓடோடி காட்சிகளை படம் பிடித்திருக்கும் ஷண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு பணி, கதையை விறுவிறுப்பாக பயணிக்க வைப்பதில் பெரும் பங்காற்றியிருக்கும் புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு ஆகிய விஷயங்களும் ‘காட்ஃபாதரி’ன் விறுவிறுப்பான பயணத்திறகு பலம் சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

மனைவியிடம் பாசமிக்க கணவராகவும், மகனிடம் பாசம் நிறைந்த அப்பாவாகவும், அக்கம் பக்கத்தினருக்கு நல்ல நண்பராகவும் வரும் நட்டி நட்ராஜ், தனது மகனை ரௌடிகளிடமிருந்து காப்பாற்ற போராடும் போராட்ட காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கொடூரமாக கொன்று விடும் கொடூர வில்லனாக வரும் லாலின் தோற்றமும் நடிப்பும் மிரட்டல் ரகம். நட்டி நட்ராஜின் மனைவியாக வரும் அனன்யா நடப்பது என்ன என்று தெரியாமல் பதட்டப்படுவது , மகனையும் கணவரையும் பறிகொடுக்க நேரிடுமோ என்று பயப்படுவது என்று தனது கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். மகனாக வரும் மாஸ்டர் அஸ்வத் சிறப்பாக நடித்துள்ளார். அஸ்வத்தை வில்லன்களிடம் இருந்து மறைத்து வைக்க, அங்கு அவன் அவஸ்தைப்படும் காட்சிகள் திகிலூட்டுகின்றன. ரௌடிக்கு துணை போகும் போலீஸ் அதிகாரியாக வரும் மாரிமுத்துவும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

பலம்

1.விறுவிறுப்பாக நகரும் கதை!

2. நட்டிநட்ராஜ், லால்

3.பின்னணி இசை

பலவீனம்

1.சில லாஜிக் விஷயங்கள்

2.நம்ப முடியாத கிளைமேக்ஸ்

மொத்தத்தில்…

ஒரு சிங்கம், ஒரு மானை வேட்டையாட, அந்த சிங்கத்திடமிருந்து அந்த மான் தப்பிக்க முயற்சிப்பது மாதிரியான காட்சிகளை நாம் டிஸ்கவரி சேனல் போன்றவற்றில் பார்த்திருப்போம். அதுமதிரியாக ஒரு ரௌடியிடமிருந்து மகனை காப்பாற்ற கடைசி வரையிலும் போராடும் ஒரு அப்பாவின் கதையாக வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தராது!

ஒருவரி பஞ்ச் : ரௌடியிடமிருந்து மகனை காப்பாற்ற போராடும் ஒரு அப்பாவி அப்பாவின் கதை!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - சீனி chillale ஆடியோ பாடல்


;